For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கங்குவா - விமர்சனம்!

07:42 PM Nov 14, 2024 IST | admin
கங்குவா   விமர்சனம்
Advertisement

பொதுவாக ஒரு தமிழ் சினிமாவில் ஆதிவாசிகளின் வாழ்வியலை மட்டும் முழுமையாக அல்லது சில பல தீவுகளுக்குள்ளான சண்டை, சர்ச்சை,அல்லது ரோமானியர்களின் போர் குணம், அல்லது மனித மூளை ஆராய்ச்சிச் சாலை மர்மங்கள் அல்லது வேறொரு நாட்-டை வைத்து மட்டும் படமெடுப்போரே அதிக. இவர்களுக்கு மத்தியில் மேலே குறிப்பிட்ட சகல ஃபீல்டுகளையும் அளவாகக் கலந்து வாயைப் பிளந்துப் பார்க்க வைக்கும் அளவிற்கு கங்குவா என்னும் ஒரு மிகப் பிரம்மாண்ட படைப்பை வழங்கி அசத்தி இருக்கிறார் டைரக்டர் சிவா. இந்த கங்குவாவில் பிரமிப்பூட்டும் ஃபேன்டஸி முயற்சியும், மேக்கிங்குமே இன்னும் சில ஆண்டுகளுக்கான பேசுபொருளாக இருக்கும் என்பதே ஹைலைட்! அதிலும் 3டி-யில் கங்குவா காணும் பார்வையாளர்களுக்கு போர்க்களத்துக்குள் இருக்கும் உணர்வு படத்துக்கு நெருக்கமாக்குகிறது. குறிப்பாக, கடலில் நடக்கும் சண்டைக் காட்சிகள், பாம்புகள் கொண்டு எதிரிகளை தாக்கும் யுக்தி, பெண்கள் மட்டுமே தனித்து நின்று போரிடுவது என்பது மட்டுமின்றி காட்டுப்பகுதி நாணல்கள், கற்கள், நெருப்பு துகள்கள், தண்ணீர் திவலைகள் போன்றவை ஒவ்வொரு ரசிகன் கண்கள் மீது வந்து விழுவது போல் படமாக்கப்பட்டு ஒரு புதிய அனுபவத்தை தந்திருக்கிறது டெக்னிக்கல் குழு.

Advertisement

அதாவது கோவா வாசியான ஃபிரான்சிஸ் (சூர்யா) போலீஸ் கைகாட்டும் குற்றவாளிகளை பிடித்து தருவதையே பிழைப்பாகக் கொண்டவர். அவர் ஒரு முக்கிய குற்றவாளியை பிடிக்கப் போன இடத்தில் சிறுவன் ஒருவரை பார்க்கிறார். அப்படிக் கண்ட செகண்ட் இருவருக்குள்ளும் முன்ஜென்ம பந்தம் ஒன்று இருப்பதை உணரும் பிரான்சிஸ், அந்தச் சிறுவனை கொல்ல துடிக்கும் கூட்டத்திலிருந்து மீட்க போராடுகிறார். இச்சூழலில் கட் செய்தால்,1070ம் ஆண்டில் பழங்காலத்தில் ஐந்தீவு பகுதி ஒன்று உள்ளது. பெருமாட்சி, ஆர்த்தி, முக்காடு, வெண்காடு, மண்டைக்காடு என இந்த தீவுகள் ஐந்து பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தீவிலும் தனித்தனி குணம் கொண்ட ஆதிவாசிகள் வசிக்கின்றனர். பெருமாட்சி தீவில் கங்குவா ( சூர்யா) வம்சத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். ஆர்த்தி தீவில் உதிரன் (பாபி. தியோள்) வம்சத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கிறார்கள. இதே போல் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு குழு வசிக்கிறது.

போர்ச்சுகல் படை  இந்த ஐந்தீவு பகுதியை கைப்பற்ற எண்ணி 25 ஆயிரம் சிப்பாய்களுடன் தீவை நெருங்குகிறது.அங்குள்ள உளவாளி உதிரனை துணைக் கொண்டு போரிட்டால் கங்குவா வசிக்கும் தீவை கைப்பற்றலாம் என்று ஐடியா தர அதன்படி போர்ச்சுகல் படை உதிரனுக்கு தங்க காசுகள் கொடுத்து அவனை தன் பக்கம் வளைத்துப் போடுகிறது. இந்நிலையில் நடக்கும் போரில் கங்குவா உதிரனின் சகோதரர்களை கொல்கிறான். அத்துடன் உதிரன் மகனும் கொல்லப்படுகிறான். ஆவேசம் அடைந்த உதிரன் கங்குவாவை கொல்வேன் என்று சபதம் செய்கிறான்.

Advertisement

இதனிடையே கங்குவாவிடம் ஒரு தாய் தன் மகனை ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகிறாள். அதிலும் சாகும் முன், ” என் மகன் உயிரை நீ தான் காக்க வேண்டும்” என்று வாக்கு வாங்கிக் கொள்கிறாள். அந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக கங்குவா தன் உயிரையும் பணயம் வைக்க துணிகிறான். இறுதியில் யார் அந்த சிறுவன்? அவனுக்கும் பிரான்சிஸுக்கும் என்ன பந்தம்? 1070-களில் பெருமாச்சி கிராமத்தில் வாழ்ந்த இனக்குழுவுக்கும் கோவாவில் வாழும் இன்றைய பிரான்சிஸுக்கும் என்ன தொடர்பு என்பதற்கு எதிர்பாராத பதிலை அளிப்பதுதான் கங்குவா படக் கதை.

நாயகன் சூர்யா எக்கச்சக்கமான  ஆக்சன் ,ரொமான்ஸ் காட்சிகள் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் அவருக்கே முற்றிலும் ஒரு மாறுபட்ட படமாகவும், அனுபவமாகவும் இருந்திருக்கும் . ஜடா முடி, பழங்கால உடைகள், உடம்பு முழுவதும் டாட்டூக்கள் வரைந்துக் கொண்டு கையில் ஆயுதத்துடன் கங்குவா என்ற ஒரு போர் வீரனாகவே கண் முன் நிற்கிறார் சூர்யா.தோற்றம், பார்வை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் சூர்யா கங்குவா என்ற கதாபாத்திரத்தை மக்களிடம் கடத்துவதற்கு கடினமாக உழைத்திருக்கிறார். சூர்யாவின் ஒவ்வொரு அசைவுகளும் கங்குவா உலகத்தை உண்மைக்கு நெருக்கமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரத்திற்கான அவரது அளப்பரிய அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுகிறது. கூடவே போலீசுக்கு சிக்காத கிரிமினல் குற்றவாளிகளை பிடித்துத் தரும் பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வழக்கமான தனது ஸ்டைலையும், ரொமான்ஸையும் செமையாக வெளிப்படுத்துகிறார்.

சூர்யாவுடன் வரும் திஷா. பதானி அடிக்கடி அவருடன் செல்லச் சண்டைகள் லவ்லி . இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி தங்கள் பங்குக்கு காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள்.

இந்தி நடிகர் பாபி தியோள் உதிரன் என்ற வில்லன் பாத்திரத்தில் ரத்தம் கொப்பளிக்க நடித்திருக்கிறார். சூர்யாவுக்கும் பாபிக்கும் இடையே நடக்கும் கிளைமாக்ஸ் மோதல் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரேம் குமார் என தெரிந்த முகங்கள் பலர் இருந்தாலும், கதாபாத்திரங்களாக அவர்களின் முகம் மக்கள் மனதில் பதியவில்லை.

மியூசிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்தின் பிரமாண்டத்திற்கே பிரமாண்டம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. “நெருப்பு..”, ”தலைவா...” என பாடல்களிலும் கங்குவாவின் உலகத்தை பிரமிக்க வைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தனது பீஜியெம்கள் மூலம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிரோட்டம் அளித்திருக்கிறார்.

கேமராமேன் வெற்றி ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். நிகழ்கால கோவா காட்சிகள் மற்றும் கங்குவா உலகம் என இரண்டையும் வெற்றியின் கேமரா மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஹாலிவுட் படங்களை பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.

மறைந்த படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப், கங்குவா உலகின் பிரமாண்டத்தை மக்களிடம் நேர்த்தியாக கடத்தியது போல், அந்த கதையையும் சற்று நிதானமான உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கலாம்.

ஐந்து தீவுகள், அதன் மக்கள், அவர்களின் தோற்றம், உடை, இருப்பிடம், உணவு என கங்குவா என்ற ஒரு உலகத்தையே உருவாக்கியிருக்கும் கலை இயக்குநர் மிலனின் பணி பிரமிக்க வைக்கிறது.

பாலிவுட்டுக்கு இணையாக தமிழ் சினிமாவில் இப்படியான ஒரு மேக்கிங்கில் ஏதாவது படம் இதற்கு முன்பு வந்திராத அளவுக்கு ஒரு காட்டுவாசி லைப் ஹிஸ்டரியில் பிரம்மாண்டமான படமாக கொடுத்திருக்கிறார் டைரக்டர் சிவா.குறிப்பாக ஒரு சிம்பிளான கதையை வைத்துக் கொண்டு இந்த அளவு பிரம்மாண்டமாக காட்ட முடியும் என்று நிரூபித்திருப்பவர் 1070 மற்றும் 2024 என இரு வேறு காலக்கட்டத்தையும் எடுத்துக்கொண்டு அதை ‘நான் லீனியர்’ முறையில் காட்சிகளை முன்னுக்குப் பின் கலைத்துபோட்டு விளையாடியிருக்கிறார் .

க்ளைமாக்ஸில் கார்த்தி மண்டை ஓடுகளை குதிரைகளில் கட்டிக்கொண்டு வில்லத்தனமாய் சிரித்துக்கொண்டு வருவது அடடே சொல்ல வைத்து விடுகிறது. கங்குவா சூர்யாவுக்கு இனி கார்த்தி தான் வில்லனாம். கங்குவா இரண்டாம் பாகத்தில் நடக்கவிருக்கும் கதை அப்படி போகும் என்பதை எண்டு கார்டு போடுவதற்கு முன் கோடிட்டு காட்டி கைத் தட்டலும் வாங்கி விடுகிறார் சிவா.

மொத்தத்தில் கங்குவா - கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய சினிமா

மார்க் 4/5

Tags :
Advertisement