பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் செய்யும் குடும்ப அரசியல்!
குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கும் பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் அதே குடும்ப அரசியலை செய்திருக்கிறது. அப்படி என்ன செய்திருக்கிறது? விரிவாக கொடுத்திருக்கிறேன் படிக்கவும்...!காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி என ஒவ்வொரு கட்சியையும் பாஜக விமர்சிப்பது இந்த கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன என்பதுதான்.பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அத்தனை பாஜக தலைவர்களும் ஒவ்வொரு மேடைகளிலும் முழங்குவது குடும்ப அரசியலுக்கு எதிரான வார்த்தைகளை தான்.
குடும்ப அரசியல் ஒட்டுமொத்த நாட்டையுமே சீரழித்து விட்டது என்பதுதான் பாஜக தலைவர்களின் வாதம் ஆனால் பாரதிய ஜனதா கட்சியும் இத்தகைய குடும்ப அரசியலை மேற்கொள்ள தான் செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அது ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் நிறுத்தி உள்ள வேட்பாளர்களின் மூலம் உறுதியாகி உள்ளது ஆம்.. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் அல்லது கட்சியின் முக்கிய தலைவர்களின் உறவினர்கள் போன்றோரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அர்ஜுன்முண்டாவின் மனைவி மீரா முண்டாவிற்கு பெட்காவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதே தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மென்கா சர்தாருக்கு கல்தா கொடுத்துவிட்டு மீராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு முன்னாள் முதல்வரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் குற்றவாளி என தண்டனை பெற்றுள்ள மதுகோடாவின் மனைவி கீதா கோடா சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா ஆளுநராக இருக்கும் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸின் மருமகள் பூர்ணிமா தாஸ் சாஹூவும் ஜம்சத்பூர் கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகின்றார் கடந்த 2019 ஆம் ஆண்டு ரகுபர் தாஸ் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தவுடன் ஆட்சியையும் பறி கொடுத்திருந்தார் அதற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டவர் ஒடிசா மாநில ஆளுநராக இருக்கின்றார். அவரது அதிகார நீட்சியாக அவரது குடும்ப உறுப்பினருக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் கடும் குடும்ப அரசியல் நிலவுகிறது என குற்றம் சாட்டி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தஞ்சம் புகுந்த முன்னாள் முதல்வரான சம்பாய் சோரன் அவரது பாரம்பரிய தொகுதியான செரைகேலாவில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது மகன் பாபுலால், காட்ஷிலா தொகுதியில் போட்டியிட பாஜக தலைமையிடமிருந்து வாய்ப்பினை பெற்று மகனையும் அரசியலில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
தனது சகோதரனை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாஜகவின் சஞ்சீவ் சிங்கின் மனைவி ராகினி சிங் ஜாரியாவின் தொகுதியில் பாஜகவால் களமிறக்கப்பட்டுள்ளார்
சிந்த்ரி சட்டப்பேரவை உறுப்பினரான இந்திரஜித் மஹதா கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே தொடர் உடல்நிலை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முறை அவரது மனைவி தாரா தேவி நிறுத்தப்பட்டுள்ளார்.
தன்பாத் நாடாளுமன்ற உறுப்பினர் துலு மஹதோவின் இளைய சகோதரர் சத்ருகன் மஹ்தோ, பாக்மாரா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிற்கின்றார் இவர் மீது கொலையுள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் களமிறங்கப்பட்டுள்ள 9 வாரிசு வேட்பாளர்களில் 5 பேர் பாரதிய ஜனதா கட்சியினர் தான் என்பது சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விவரம் தான்
பாஜக மட்டுமல்லாமல் கூட்டணியில் இருக்கும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சந்திர பிரகாஷ் சவுத்ரியின் மனைவி சுனிதா, ராம்கார் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதே சந்திர பிரகாஷ் சவுத்ரியின் சகோதரரான ரோஷன் லால் சவுத்ரி ஹசாரிபாக்கில் உள்ள பார்ககான் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் பாஜகவில் சேர்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
எனவேதான் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான முக்கிய கணையாக இந்தியா கூட்டணி கட்சிகள் குடும்ப அரசியல் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என மேடைக்கு மேடை பேசி வருகின்றனர்-