தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சர்வதேச ஆண்கள் தினம்!

06:48 AM Nov 19, 2024 IST | admin
Advertisement

1999-ஆம் ஆண்டு மேற்கிந்திய வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் மறைந்த தனது தந்தையின் நினைவாக நவ.19 தினத்தை சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தேசத்தின் பிரசித்தி பெற்ற இருவேறு கால்பந்து அணிகள் இணைந்து ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தயாராகும் தினத்தை, ஆண்களின் தினத்தோடு கோர்த்து பிரபல்யப்படுத்தினார். அங்கே பற்றிக்கொண்ட ஆண்கள் தினம் விரைவில் சர்வதேச ஆண்கள் தினத்துக்கான அங்கீகாரத்தையும் பெற்றது.சர்வதேச ஆண்கள் தினத்தில், வளர்ந்த ஆண்கள் மற்றும் வளரும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுமாறு கோரப்படுகிறார்கள். பெரும்பாலும் உடல் மற்றும் மன நலன் சார்ந்து அவை அமைகின்றன. ஆண் என்பவன் பெண் போல அழக்கூடாது, பேசக் கூடாது, உணர்ச்சிகளை வெளியில் கொட்டக்கூடாது போன்ற பிற்போக்கான கற்பிதங்களை களைய வற்புறுத்துகிறார்கள். "ஒவ்வோர் ஆணுக்குள்ளும் ஒரு பெண்மை இருக்கிறது. ஆனால், அதனை வெளியே காண்பிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை" என்று தன் 'Book of the Man' என்ற புத்தகத்தில் ஓஷோ எழுதியிருப்பார்.ஆனால் ஆண்கள் மீது நவீன கால பெண்கள் வைத்திருக்கும் பார்வையும் இன்னும் மாறவில்லை. ஒரு ஆண் என்பவன், பெண்களுக்கு, குடும்பத்திற்கு பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆண் தன் பிரச்சனையை தானே சரி செய்துகொள்ளும் வலிமையானவனாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என இன்றைய காலத்திலும் இந்த சமூகத்தின் அபத்தமான பார்வை மாறாமல் உள்ளது.ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்களுக்கு துணை நிற்கும் ஆண்கள், அதே நேரத்தில் ஆண்களின் பிரச்சனையை அவர்களே பேசுவதில்லை. பெண்களுக்கு அதிகளவு மன அழுத்தம் இருந்தாலும், உலக அளவில் ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை உருவாக்குவது. சமூகம், குடும்பம், திருமணம், குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழலில் ஆண்களின் பங்களிப்புகளிப்பினைக் கொண்டாடுவது, ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்காட்டுவது, பாலின உறவுகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது ஆகிய நோக்கங்களை அடிப்படையாக் கொண்டு சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

இதையும் தாண்டி ஆண்களுக்கென்ன.. பேண்ட், சார்ட் போட்ட ராஜாக்கள். அவர்களால் தான் அடுத்தவங்களுக்கு பாதிப்பு... அவங்களுக்கெல்லாம் ஒரு தினமா..? அப்படி என்ன சாதனை பண்ணாங்க என கேட்பவரா நீங்கள்? ஒரு நிமிடம் தொடர்ந்து படியுங்கள்.ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் போதும். ‘அட சிங்கக்குட்டி பொறந்துட்டானா..? இனி குடும்பத்தை காப்பாத்திடுவான்’ என வர்றவங்க.. போறவங்க சொல்விட்டு போவாங்க. குழந்தை பால்குடியை கூட மறந்திருக்காது. அட இவன் வளர்ந்ததும் நமக்கு சம்பாதிச்சு போட்டுருவான்ல என பெற்றோர்கள் கனவு காண்பார்கள். வளரும் ஆண் குழந்தையிடம், எப்போது சம்பாதிச்சு அம்மாவுக்கு வளையல் வாங்கித் தருவான் என விளையாட்டாக கேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த நேரத்தில் குழந்தைக்கு 7 வயதை தாண்டியிருக்காது. இப்படி ஆண் குழந்தைகள் வளரும்போது, அவர்கள் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்திலேயே அவர்களுக்குள் ஒரு நெருக்கடியை உண்டாக்கி விடுகிறோம்.

Advertisement

பையன் தானே..? அவனுக்கு என்ன பிரச்னை வரப்போகுது.. எங்கேயாவது சுத்திட்டு வீட்டுக்கு வந்துருவான் என 10 வயது சிறுவனை அசால்டாக கையாள்கிறோம். அவன் மனக் குமுறல்களை காது கொடுத்து கேட்பதில்லை. சிறுமிகளுக்கு எப்படி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுகிறதோ..? அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் கயவர்கள் இருக்கிறார்கள். சிறுவர்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். அவர்களை கனிவுடன் பெற்றோர்கள் அணுகினால் உண்மை வெளிவரும்.

படிச்சாச்சு.. வேலைக்கும் போயாச்சு.. ஒரு காதல் தோல்வி வருகிறது என்றால் நிச்சயம் ஆணின் கண்கள் கலங்கும். அப்போது அருகில் இருப்பவர்கள் சொல்வார்கள். ‘என்னடா இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்கே. கண் கலங்கிட்டு’ அப்படின்னு சொல்வார்கள் அந்த இளைஞரும் அழுகையை மறைத்து சந்தோஷமாக இருப்பது போன்று காட்டிக் கொள்வான். உண்மையில் ஒரு இறுக்கமான மனநிலைக்கு தள்ளப்படுவான். மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தினம் தினம் புழுங்குது எல்லாம் மரண வலி.

திருமணம் ஆன ஆண்களுக்கோ ஒருமாதம் சம்பளம் வரவில்லையென்றால், பிரசர் தலைக்கு ஏறிவிடும். கையும் ஓடாது. காலும் ஓடாது. அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையேயான சின்ன சின்ன சச்சரவுகளில், அம்மா பக்கம் சேர்ந்துக் கொண்டால் ‘அப்படியே நீ போய்டு’ என மனைவி சொல்வாள். அதே மனைவி பக்கம் சென்றால், இவ்வளவு நாள் வளர்த்தது எல்லாம் வீணாப் போச்சே என அம்மா அழுவாள். என்னதான் சொல்வது என தினம் தினம் தவிக்கும் கணவர்கள் ஏராளம். இப்படி தங்களுக்கு நிகழும் பிரச்னைகளிலிருந்து இந்த வாழ்க்கையே வேண்டாம் என முடித்துக் கொள்ளும் இளைஞர்கள் பலரும் இருக்கிறார்கள்.

பெண்கள் தீபங்களாக ஜொலிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருக்கும் எண்ணெய்யும், திரியும் ஆண்கள்தான். ஒட்டுமொத்த ஆண்கள் சமூதாயத்தை குற்றவாளி போன்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறானது. பெற்றோருக்கு நல்ல மகனாகவும், தன் மனைவிக்கு நம்பிக்கையானவனாகவும், குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும், சொந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு ஆணும் இங்கு போற்றப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் தூக்கி நிறுத்த நினைக்கும், அதனை நடத்திக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்..!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
19 NovemberAbuseglobal awareness dayhomelessnessInternational Men's Daymen facemens dayparental alienationsuicideviolenceஆண்கள் தினம்
Advertisement
Next Article