For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக கழிப்பறை தினம்: இந்திய முறையே ஆரோக்கியம்!

05:37 AM Nov 19, 2024 IST | admin
உலக கழிப்பறை தினம்  இந்திய முறையே ஆரோக்கியம்
Advertisement

லக கழிப்பறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அனுசரிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறைவிடம். அடுத்தபடியாக இருப்பது சுகாதாரம். அந்த அளவுக்கான முக்கியத்துவத்தை அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்கு ஏனோ பலரும் அளிப்பதில்லை. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல்முறையாக நவ.19-ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின், 2013 முதல் நவ.19-ம் தேதியை உலக கழிப்பறை தினமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

Advertisement

இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் கழிப்பறைகளும் அடக்கம். ஆம்.. காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.இந்தியாவில் 818 மில்லியன் மக்கள் திறந்த வெளியைதான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கழிப்பறை இன்றி இயங்கி வருகின்றன. ஒரு சாதாரண கழிப்பறை இவ்வளவு பிரச்னையா என்பவர்களுக்கு இன்னமும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

Advertisement

உலக அளவில் ஒரு நாளைக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு 1000 குழந்தைகள் இறந்து போகின்றன. உலக அளவில் ஆறில் ஒரு பெண் குழந்தை பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்திவிடுகிறது. 1 பில்லியன் மக்கள் இன்றளவும் திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்த சூழல் ஏன் என்று பார்த்தால் போதிய சுற்றுச்சூழல் வசதியை அந்த நாட்டு அரசுகள் ஏற்படுத்தி தராததும், கழிப்பறை பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லாததும் தான்.இந்த விழிப்புணர்வு இல்லாததால் திறந்த வெளியில் பயன்படுத்தும் கழிப்பறை மூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி 50 கொடிய நோய்களுக்கான வாய்ப்பும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலக அளவில் இந்த பிரச்னை ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிதாக எடுத்து கொள்ளப்படுகிறது. யுனிசெஃப் சர்வேயின் படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நமது வாழ்நாளில், சராசரியாக நான்று வருட காலங்களை, நாம் கழிப்பறைகளில் கழிக்கிறோம் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலும் ஆண்களைக் காட்டிலும், பெண்கள் ஒன்று முதல் ஒன்றரை வருட காலம் அதிகம் செலவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பொதுக் கழிப்பிடங்களில், அதிலும் `வெஸ்டர்ன் டாய்லெட்'டுகளைப் பயன்படுத்தவேண்டிய சூழலில் நோய்த்தொற்று ஏற்படாமல் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.மலக்குடலிலிருந்து வெளியேறும் கழிவுப்பொருள்களில், ஏறத்தாழக் கோடிக்கணக்கான வைரஸ்கள், லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், ஆயிரக்கணக்கான பாராசைட் என்ற ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற கிருமிகளின் புகலிடமாகக் கழிப்பறைகள் விளங்குகின்றன. அதிலும் `வெஸ்டர்ன் டாய்லெட்'டின் கம்மோட் (Commode) மீது நேரடியாக அமர்வதால் சிறுநீர்த் தொற்று, பிறப்புறுப்பில் புண், வெள்ளைப்படுதல், தோல் அழற்சி போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் மிகச் சுலபமாகப் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து நம்மிடம் பேசிய டாக்டர் தமிழ்செல்வி,“உலகில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்து கிறார்கள்: இந்திய முறை கழிப்பறை (squat position), மேற்கத்திய முறை (sitting position). ஆதிகாலம் முதல் கழிவை வெளியேற்றக் குத்தவைத்து (squat position) உட்காரும் முறையையே மனித இனம் பின்பற்றிவந்தது. இதற்கு மலாசனம் என்று பெயர். நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் ஆசனம் இது. இதை எத்தனை முறை செய்கிறோமோ, அந்த அளவுக்கு உடல் உறுதி கூடும்.இதனால், மூலநோய் தொந்தரவு சீரடையும்; மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கால்களும் முதுகும் உறுதியாகும். வயிற்று உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

அதே சமயம் 19-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான், நாற்காலியில் உட்காருவது போன்ற கழிப்பறைகள் மேற்கத்திய நாடுகளில் பரவ ஆரம்பித்தன. உடல்நலக் குறைபாடு உடையவர்களுக்காக இவை உருவாக்கப்பட்டன. ராஜவம்சத்தினரும் மேல்தட்டு மக்களும், இதை வசதியான முறையாகக் கருதினார்கள். இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பரவலானது. பிரிட்டன் மகாராணி விக்டோரியா தங்கத்தால் ஆன மேற்கத்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இன்றைக்கு நகர்ப்புறங்களில் மேற்கத்திய முறை கழிப்பறைகள் பரவலாகிவிட்டன. இந்த முறையால் உடல் கழிவு வெளியேற்றம் கடினமாகிறது. உடலில் இருந்து கழிவு முழுமையாக வெளியேறுவதும் இல்லை. இந்திய முறை கழிப்பறையில் அமரும்போது, இயற்கை அழுத்தத்தால் கழிவு முழுமையாக வெளியேற்றப்படுகிறது. ஈரானைச் சேர்ந்த ரேடியாலஜி மருத்துவர் ராத் சயீத் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

முழுமையாக வெளியேற்றப்படாத கழிவு பெருங்குடல் பகுதியில் தேங்குவதால், அங்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அப்பெண்டிசிட்டிஸ், இன்ஃபிளமேட்டரி பவல் டிசீஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த நோய்கள் அதிக அளவில் உள்ளன. பாரம்பரியக் கழிப்பறை முறையைப் பயன்படுத்தும் தென் ஆப்பிரிக்காவின் சுற்றுப் பகுதிகளில் இந்த நோய்கள் அரிதாக இருப்பதாகவும் இஸ்ரேல் மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது.

மேற்கத்திய நாடுகளில் சுத்தம் மேலோங்கி இருக்கும். ஆனால் உடல் சார்ந்த தனிமனிதச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே, அடிவயிறு தொடர்பான நோய்களுக்குக் காரணம். ஆராய்ச்சியாளர்கள் பலரும், தங்கள் ஆய்வு முடிவாக இந்திய முறை கழிப்பறையே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்துவரும் நிலையில், மேற்கத்திய முறை கழிப்பறை நம்மிடையே பரவலாகி வருகிறது.கருவுற்ற பெண்கள் இந்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தினால் கருப்பையின் அழுத்தம் குறைந்து, சுகப் பிரசவத்துக்கு வழிவகுக்கும். நோய்த்தொற்றுகளும் குறைவாக இருக்கும். பொது இடங்களில்கூட இந்திய முறை கழிப்பறைகளே சிறந்தவை. இன்றைக்கு, எல்லாப் பக்கமுமே மேற்கத்திய முறை கழிப்பறை பரவலாகிவருவது வருத்தம் தருகிறது.இந்திய முறை கழிப்பறைகள் அரிதாகிவருகின்றன, அநாகரிகமாகவும் கருதப்படுகின்றன. உண்மையில் இந்திய முறை கழிப்பறைகள் ஆரோக்கியத்தின் அடையாளம். உண்பது, செரிப்பது, கழிவை முழுமையாக வெளியேற்றுவதில்தான், மனித உடல் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது என்பது உண்மை என்பதை நம்புவோமாக!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement