தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அனைத்துலக காணாமல் போனோர் தினம்!

05:54 AM Aug 30, 2024 IST | admin
Advertisement

னைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஆகஸ்ட் 30ம் நாளன்று உலகெங்கும் அநுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

Advertisement

அதாவது மனிதர்கள் காணாமல் போவது என்பதை இன்றைக்கு நேற்று நடக்கும் விஷயமில்லை. வரலாற்றுக் காலங்களில் நாடுகள் மற்றும் இனங்களின் இடையே நடந்த போர்களின் போது பலர் காணாமல் போய் இருக்கிறார்கள். முதல் உலக போர் காலக் கட்டத்தை விட இரண்டாம் உலக போர் காலத்தில் லட்சக்கணகானவர்கள் அதிகமாக காணாமல் போயுள்ளனர். இரண்டாம் உலக போரின் போது ஹிட்லரின் கொடூர நடவடிக்கையால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

Advertisement

இரண்டாம் உலகப் போர் காலத்தில் சுவிடனை சேர்ந்த ரவுல் வாலண்பெர்க் (Raoul Wallenberg) என்பவர் காணாமல்போவோர் விஷயத்தில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் இவர் 20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்பட்டார். இவர் மட்டுமே ஓரு லட்சத்திதுக்கும் மேற்பட்ட காணாமற் போனோரை மீட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.1945, ஜனவரி 17-ல் ரவுல் வாலண்பெர்க் ரஷ்ய படையால் கைது செய்யப்பட்டார். இவர் அதன் பிறகு என்ன ஆனார் என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. காணாமற்போனோர் தினத்தில் ரவுல் வாலண்பெர்க் நினைவு கூறப்படுகிறார்.

நம் அண்மை நாடான இலங்கையிலும் கடந்த 40 ஆண்டு கால உரிமைப் போராட்டத்தின் போது அப்பாவி தமிழர்கள் லட்சக் கணக்கில் காணாமல் போயிருக்கிறார்கள். வன்னி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. போர், குற்றப் பின்னணியில் மனிதர்கள் காணாமல் போது ஒரு புறம் என்றால் இயற்கை சீற்றத்தால் காணாமல் போவதும் அண்மை ஆண்டுகளில் லட்சக் கணக்கில் காணாமல் போய் இருக்கிறார்கள். உதாரணமாக, 2004 ஆண்டு சுனாமியின் போது இந்தியா, இலங்கை, இந்தோனேசியாவில் பல லட்சம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அடுத்து பெண் பிள்ளைகள் விபசாரத்துக்கும், சிறுவர்கள் வேலைக்காகவும் கடத்தப்பட்டு காலப் போக்கில் காணமல் போக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்போதும் உலகம் முழுக்க ஆள் கடத்தல் வியாபாரம் காரணமாக பலர் காணாமல் போய்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தச் சட்ட விரோத செயல் முற்றிலும் களைந்தெறிய வேண்டியது அவசியம். மேலும் ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவது அவசியம். அண்மை ஆண்டுகளில், உலகம் முழுக்க 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.

நம் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.5 முதல் 2 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள், பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுகிறார்கள். பெண்களைக் கடத்தும் இந்த மாஃபியா கும்பல், தங்களிடம் சிக்கும் 10 முதல் 20 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும் தரகர்களிடம் லட்சக் கணக்கான ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இவர்களில் கால்வாசி பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரிவித்திருந்தது.இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அளித்துள்ளனர்.

ஆக ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களது சொந்த இடங்களிலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவர்கள் உங்களை சுற்றியும் தற்போது நடமாடிக்கொண்டு இருக்கலாம். இன்றைய தினம் அவர்களை நினைத்து பார்க்கும் நாளாகவும் இருக்கட்டும்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
August 30DisappearedInternational Day of the Disappearedmissing personsகாணாமற்போனோர்காணாமல் போனோர் தினம்
Advertisement
Next Article