For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இப்படியும் சில பல நண்பர்கள்!

01:29 PM Nov 26, 2024 IST | admin
இப்படியும் சில பல நண்பர்கள்
Advertisement

வீன யுகத்தில் பலவகையான நண்பர்கள் உருவாகி வருகிறார்கள். போன நூற்றாண்டில் பேனா நண்பர்கள், ரயில் சினேகிதர்கள் போல உருவாகிக் கொண்டு இருப்பார்கள். அவர்களெல்லாம் வழக்கொழிந்து போய் விட்டார்கள். காதல்கோட்டை படத்தில்தான் கடைசியாக கடிதம் மூலம் இருவர் பேசிக்கொண்டது. இப்போதெல்லாம் சமூகவலைதளங்களுக்கு ஏற்ப நண்பர்கள் உருவாகிறார்கள். இந்த வகைகள் பற்றி தனிக்கட்டுரையே மிக விரிவாக எழுதலாம். கமென்ட்களில் மட்டும் உரையாடுபவர்கள், லைக் மட்டும் போடுபவர்கள், சோமீயில் சண்டை போட்டு நேரில் உறவாடுபவர்கள், சரக்கு கடை தோழர்கள்… சைட் டிஷ்க்கு மட்டும் தோழர்கள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லோருமே தங்களுக்கு இடப்பட்ட அந்த எல்லையை தாண்டி வரவே மாட்டார்கள்.

Advertisement

பத்தாண்டுகளாக லைக் மட்டுமே போடுகிற ஒருவரை அறிவேன். கமென்ட் கூட போட்டதில்லை. லைக் போடுபவர் லைக் மட்டும்தான். குட்ட்மார்னிங் சொல்பவர் அதை மட்டும்தான்... ஹாய் சாப்டியா நண்பர் அது மட்டும்தான். டேய் நான் ஆம்பளைடா என்கிற என்னுடைய மெசேஜை கூட பார்க்காமல் ஹாய் சாப்டியாக்களை அனுப்பிக்கொண்டேயிருப்பார். அப்படி ஒரு புதுவகை நண்பர்கள் என் வட்டத்தில் உருவாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு ''வீடியோ நண்பர்கள்'' என பெயரிட்டிருக்கிறேன். நான் வாட்ஸ்அப்பில் அல்லது பேஸ்புக் ஸ்டேடஸில் எனக்கு பிடித்த பார்த்த யாரோ போட்ட தத்துவ வீடியோக்களை புலம்பல் காணொளிகளை அடிக்கடி பகிர்ந்துகொள்வதுண்டு. பலரும் வீடியோவை பார்த்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள். சிலர் இருக்கிறார்கள். வீடியோவை பார்த்துவிட்டு ‘’உடனே இந்த வீடியோவை அனுப்புங்க’’ என்று ஒரு மெசேஜ் அனுப்புவார்கள். நாம் தந்தி போல பாவித்து உடனே அந்த வீடியோவை அனுப்புவோம். அதன் பிறகு காணாமல் போய்விடுவார்கள். மறுபடியும் அடுத்த வீடியோவுக்கு உடனே அனுப்புங்களுக்குதான் அவரை பார்க்க முடியும்.

Advertisement

நடுவில் இந்த ஹலோ எப்படி இருக்கீங்க சௌக்யமா உடம்பு பரவால்லையா வேலை எப்படி போகுது ஜிம்மி குட்டி போட்டுதா கரண்ட்கட் இருக்கா இன்னமும் பேஸ்புக்தானா மாதிரி எந்த உரையாடலும் இருக்காது. ஒரு கர்ட்டஸிக்கு கூட… அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வீடியோ மட்டும்தான். நாம் என்ன செய்கிறோம் என்ன நிலையில் இருக்கிறோம் ஏன் அந்த வீடியோவை பகிர்ந்தோம் எதைப்பற்றியும் கவலை இருக்காது!நமக்கு தெரிந்த ஒரு மனிதரை நேரில் பார்த்தால் அவர் போட்டிருக்கிற சட்டை பிடித்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். சார் சட்டை எங்க வாங்குனீங்க என கேட்டுவிட்டு விபரம் அறிந்ததும் கிளம்பிவிடுவோமா… ஒரு நாலு வார்த்தை போனால் போகிறது என்றாவது எப்படி இருக்கீக என விசாரிப்போம் இல்லையா… ஆனால் இங்கே வீடியோவை வாங்கிவிட்டு ஓடிவிடுவார்கள். அண்ணாச்சி ஒரு பாக்கெட் சிக் ஷாம்பு குடுங்க என்று கேட்பது போல கேட்டு வாங்கிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். அண்ணாச்சிக்கும் அவர்களுக்குமான உறவுதான் எனக்கும் இந்த வீடியோ வீராசாமிகளுக்கும்.

சமீபத்தில்தான் இப்படி வீடியோ கேட்கிற ஆட்களை நோட் பண்ணி பார்த்தேன். அவர்களுடைய பழைய சாட் ரெகார்ட்களை புரட்டிப் பார்த்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் என்னிடம் கேட்டதெல்லாம் உடனே இந்த வீடியோவை அனுப்புங்கள் என்பதுதான். அதிலும் ஒரு அன்போ கருணையோ பாசமோ கூடி இருக்காது, SEND THIS அவ்ளோதான். சிலர் உடனே அனுப்புங்கள்… அவ்ளோதான். அந்த உடனே வை கவனியுங்கள். அவ்ளோ அர்ஜென்டா அந்த வீடியோவை வாங்கி என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அப்படி என்ன அவசரமோ... !

அவர்கள்தான் அப்படி என்றால் நானும் வீடியோவை அனுப்பிவிட்டு சும்மாதான் இருந்தேன். சரி அவர்கள்தான் கேட்கவில்லை நாமாவது கேட்போம் என ஒரு சிலரிடம் அப்புறம் எப்படி இருக்கீங்க... சவுக்கியமா என்று கேட்டேன். ஒரு பதிலும் இல்லை. ஒருவர் இப்ப எதுக்கு கான்வோ டெவலப் பண்ண ட்ரை பண்றீங்க என்றார். ப்ளாக் கூட பண்ணி இருக்கலாம். அதை எப்படி செக் பண்ணுவது என தெரியவில்லை. வீடியோ கேட்பதற்காக பாட் எதுவும் வைத்திருப்பார்களோ என்னவோ… அடுத்த முறை கேட்கும்போது PROVE ME YOU ARE A HUMAN என்று டெஸ்ட் வைக்க நினைத்திருக்கிறேன். இருங் பாய்..!

அதீஷா

Tags :
Advertisement