உலக சகிப்புத் தன்மை நாள்!
மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதற்காகவே உலக சகிப்புத்தன்மை தினம் உருவாக்கப்பட்டது. காந்தியடிகளின் 125-வது பிறந்தநாளை ஒட்டி உலக சகிப்புதன்மை தினத்தை அனுசரிப்பது என ஐநா சபை முடிவெடுத்தது. பிறகு 1996-லிருந்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கான விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் 16 அன்று வழங்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டது. மக்களுக்கு அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் சிறப்பாக செயல்படும் நபர்கள், அமைப்புகள், நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே இருபது மாதங்களாக யுத்தம் நடக்கும் நிலையில் உலக சகிப்புத்தன்மை தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே அடிப்படையாக இருக்க வேண்டிய நற்குணங்களிலேயே மிகவும் அடிப்படையும், தேவையானதுமாக இருக்கக் கூடியது சகிப்புத்தன்மை. வேற்றுமையில் ஒற்றுமையை காண்பது என்பதற்கான அடிநாதமாக இருப்பதே சகிப்புத்தன்மை.அத்தகைய பண்பும் நலனும் ஒரு மனிதனுக்கு இருக்கப் பெற்றால் எத்தகைய இடர்பாடுகளையும் வெல்லும் திறன் உண்டாகும் என்பதே அதன் சாராம்சமாகும். சகிப்புத்தன்மை மனிதனை முற்றிலும் மனிதனாகவே மாற்றும் வல்லமையை கொண்டதும் கூட.
ஆனால் நாம் வாழும் இந்த பூமியானது பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது. மொழி, ஜாதி, மதம், பொருளாதாரம் என்று பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தே ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வேற்றுமைக்குள் ஒற்றுமை தான் ஜனநாயகம் என்றாலும் இது தொடர்பான தாக்குதல்களுக்கும், பாதிப்புகளுக்கும் மக்கள் ஆளாகும் நிலை இன்றளவும் தொடர்கிறது. இதற்கு சகிப்புத்தன்மை என்ற ஒன்று இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம். அதிலும் சமீபகாலத் தலைமுறைகள் சகிப்புத்தன்மை என்றால் என்ன? என்று கேட்கும் நிலை நீடிப்பது வேதனைக்குரியது. சகிப்புத்தன்மை வேண்டும் என்பது நாட்டுக்கு பிரதானமாக இருந்தாலும் அது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், அதிகாரி-ஊழியர்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் சகிப்புத்தன்மை இல்லாததால் பெரும் சங்கடங்களை சந்திக்க வேண்டியது கட்டாயமாகிறது.
தனிமனித ஒழுக்கத்தின் அடிப்படை கோட்பாடு தான் சகிப்புத்தன்மை. அன்பு, அரவணைப்பு, அறவாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சகிப்புத்தன்மை. இது கடந்த காலத் தலைமுறையில் நடைமுறையில் இருந்தது. பல்லாண்டுகளாக நம்மீது அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததற்கு காரணம் நமது முன்னோர்கள் காட்டிய சகிப்புத்தன்மை என்றால் அதுவும் மிகையல்ல. இன்று உலகமே வியக்கும் பல அரிய படைப்புகளும், தாஜ்மஹல், தஞ்சாவூர் கோயில் என்பது போன்ற வியப்பூட்டும் பொக்கிஷங்களும் அவர்களின் சகிப்புத்தன்மையால் வடிவமைக்கப்பட்டு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஞாலம் மறந்துவிட்ட சகிப்புத்தன்மையை இன்றைய தலைமுறை மட்டுமன்றி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது
உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியிருக்கும் இந்த நவீன காலத்தில் சக மனிதரிடம் சகிப்புத்தன்மை இருக்கிறதா, ஏதேனும் ஒரு சூழலில் அந்த சகிப்புத்தன்மையை ஒருவரிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற ஐயப்பாடு தற்போது எழுந்திருக்கிறது.உலகமே ஒரு கிராமமாக சுருங்கி வரும் காலத்தில், மக்கள் மத்தியிலான வெறுப்புகளும் அதிகரித்தே வருகின்றன. இணையமும், இன்ன பிற நவீன தொழில்நுட்பங்களும் மனிதர்களை பிணைக்க முயன்றாலும், மனதால் சுருங்கிய மனிதன் சகிப்புத்தன்மை இழந்து வெறுப்பின் வேர்களுக்கு நீர் வார்த்து வருகிறான். அதற்கான கெடுபலன்களை தனது சந்ததி நேரடியாக அனுபவிக்கக்கூடும் என்பதை மறந்து, சகிப்புத்தன்மை இழந்து தலைவிரித்தாடுகிறான். இதற்கு நடப்பு சமூக ஊடக களேபரங்களும் ஓர் உதாரணம்.
உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் நண்பராக்கிக்கொள்ளவும், நேசம் பாராட்டவும் உதவும் இதே இணையவெளியை பயன்படுத்தி, வெறுப்பை வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடி வருகிறோம். இனம், மொழி, சாதி, மதம், சமூகம், கலாசாரம், நிறம், நிலம் இன்னும் பிறவற்றால் வேறுபட்டிருக்கும் சக மனிதனை சீண்டி வெறுப்பெனும் நெருப்பை வளர்க்கத் துடிக்கிறோம். அதற்கு பல அடிப்படைவாத மற்றும் சுயநல அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் உதவியும் வருகின்றன.
எனவே சகிப்புத்தன்மையை ஒரு நாள் இரவில் உருவாக்கிவிட முடியாது. சகிப்புத்தன்மை பற்றி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவசியம். இதற்கு குழந்தைகளின் பாடப்புத்தகங்களில், சகிப்புத்தன்மை பற்றிய சிறப்பு பாடங்களை, கற்றுத்தர வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததியினர் வன்முறை, இனவெறி, பயங்கரவாதம், அடிமைத்தனம், மனித உரிமை மீறல் போன்ற பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை வாழ முடியும். நாடுகளுக்கு இடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது கூட, சகிப்புத்தன்மை வளர உதவும்.சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். இதற்கு, அவர்கள் நிலையிலிருந்து உணரவேண்டும்.அடுத்து வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளவும் அதனை அங்கீகரிக்கவும், பாராட்டவும் பழகவேண்டும்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்