ஸ்பெயினில் கனமழை, வெள்ளம்-150-க்கும் மேற்பட்டோர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்!
ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வலேன்சியா மாகாணத்தில் பெய்த கனமழையால் 12க்கும் மேற்பட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பரியோ டிலா டோரோ நகரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் கார்கள், மரக்கிளைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அடித்துசெல்லப்பட்டன. இது சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நுாற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரிடராக இது கருதப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் சவாலநிலை அங்கு நிலவுகிறது. அந்த நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. இதில் கிழக்கு வலேன்சியா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நின்ற கார்கள் என்று திரும்பும் பக்கமெல்லாம் சேதம். இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை (அக்.31) அன்று வெள்ள பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தேடிய சோகம் காண்பவர்களின் மனங்களை கலங்க செய்தது. பலர் மாயமாகி உள்ள காரணத்தால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
’மிதக்கும் கல்லறை’ .. வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து பாய்ந்த காரணத்தால் குடியிருப்பு பகுதிகள் அப்படியே நீரால் சூழ்ந்த பகுதி போல காட்சி அளிக்கின்றன. வீதிகள் மிதக்கும் கல்லறையாக மாறியதாக உள்ளூர் மக்கள் சொல்லியுள்ளனர். தெற்கு வலேன்சியா நகரின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வெள்ளத்தில் சிக்கிய கார்களில் இருந்தவர்களை வெல்டரான லூயிஸ் சான்செஸ் என்பவர் பத்திரமாக மீட்டுள்ளார்.
“மீட்பு படையினர் மூத்த குடிமக்களை தான் மீட்டனர். நான் உள்ளூர் வாசி என்பதால் என்னால் முடிந்தவர்களை மீட்டேன். சில உடல்கள் நீரில் அடித்து சென்றதை நான் பார்த்தேன். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் செய்வதறியாமல் கலங்கி நின்றனர்” என அந்த சூழலை லூயிஸ் விவரிக்கிறார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாகவும் ஸ்பெயின் ராணுவம் மீட்டது. சுமார் 70 பேரை இப்படி மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மொட்டை மாடி மற்றும் கார்களில் சிக்கி இருந்தவர்கள். தரைவழியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை புதன்கிழமை அன்று அணுக முடியாத சூழலை ராணுவம் எதிர்கொண்டது. தற்போது அங்கு வீடு வீடாக ராணுவத்தினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.