For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்னும் பழமொழியும் மறைந்து போனது!

01:04 PM Nov 01, 2024 IST | admin
‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்னும் பழமொழியும் மறைந்து போனது
Advertisement

ந்த தீபாவளி, ஏனோ என்னைச் சுமார் அறுபதாண்டு காலத்துக்கு முந்தைய நினைவுகளை அசைபோட வைத்து விட்டது. அதன் விளைவே இந்தப் பகிர்வு…’மழை பெய்தால் பட்டம்; மாவிடிச்சால் நோன்பு’ என்பது, என் சிறு வயதில் எங்கள் கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி. மாதம் மும்மாரி மழை பெய்த காலமெல்லாம் கனவாகிப் போனதால், ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்னும் பழமொழியும் மறைந்து போனது. பெரும் பகுதி மானாவாரி நிலங்கள் என்பதால், மழை பெய்தாலே பட்டம் என்றாகி விட்டது. அது சரி, அது என்ன ‘மாவிடிச்சால் நோன்பு?’ இன்றும் கூட, கிராமங்களிலுள்ள உழவர் பெருமக்களும் உழைக்கும் மக்களும் மகிழ்ந்து கொண்டாடுவது, பொங்கல் பண்டிகையையும் உள்ளூர் அம்மன் பண்டிகைகளையும்தான். புதுமணத் தம்பதியருக்குக் கூட தலை தீபாவளியை விட தலைப் பொங்கல்தான் விசேஷம். விநாயகர் சதுர்த்தியையெல்லாம் அக்காலத்தில் நான் கேள்விப் பட்டதேயில்லை. கிராமக் கர்ணமாயிருந்த ஐயர் வீட்டில் கொண்டாடினார்களோ என்னவோ அது எனக்குத் தெரியாது. எங்களைப் பொருத்தவரை, பொங்கலும் அம்மனும்தான்.

Advertisement

இந்த ‘மாவிடித்தல்’ என்பது அம்மன் பண்டிகை ஸ்பெஷல். எங்கள் கிராமத்தில் (திருச்செங்கோடு அருகிலுள்ள சித்தளந்தூர் என்னும் கிராமம்) மாரியம்மன், அத்தனூர் அம்மன் என இரண்டு அம்மன் கோவில்கள். இரண்டுக்கும் ஆண்டிப் பண்டாரம் என்போரே பூசாரிகள். ஊரின் ஒதுக்குப் புறத்தில் பாழடைந்து கிடந்த ஒரு சிறு கற்கோவிலுக்குள் எழுந்தருளியிருந்த பிள்ளையாருக்கும் இவர்கள்தான் அவ்வப்போது சென்று பூஜை செய்வார்கள். அங்கே மக்கள் சென்று நான் பார்த்ததேயில்லை. அந்த வழியாகப் போக நேர்ந்தால்கூட யாரும் பிள்ளையாரைத் திரும்பிப் பார்த்ததில்லை. அத்தனூர் அம்மனுக்கு அமாவாசை, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தனவே தவிர, ஆண்டுத் திருவிழாவாக ஏதும் நடந்து நான் பார்த்ததில்லை. இந்தக் கோவில் எங்கள் கிணற்று மேட்டிலிருந்து கூப்பிடு தூரம்தான். கிணற்று மேட்டில் வெள்ளை அரளி, செவ்வரளி என இரண்டு செடிகள் புதராய் மண்டி, பூத்துச் சொரியும். தினசரி, இந்தப் பூக்களைத்தான் கோவில் பூசாரி வந்து கொய்து செல்வார். அம்மனுக்கு, எங்களையுமறியாமல் நாங்கள் செய்த புஷ்ப கைங்கர்யம்.

Advertisement

என் பாட்டன் - பாட்டி காலத்தில் இந்த அம்மன் தனக்கு நடக்கும் விழாக் காலத்தில் மிகுந்த இரத்தப் பலி வாங்கினாளாம். பொதுவாக கிராமங்களில் நிலம் வைத்திருக்கும் அத்தனை விவசாயிகளும் மாடுகளை மட்டுமல்ல; எருமைகளையும் சேர்த்தேதான் வளர்ப்பார்கள். பசுக்கள் கிடாரிக் (பெண்) கன்று ஈன்றால் பால் கறக்கப் பயன்படும். காளைக் கன்றானால், உழவுக்கும் வண்டி இழுக்கவும் பயன்படும். எருமைகளில் அப்படியில்லை. கிடாரி கறவைக்குப் பயன்படும். காளை என்றால் இனவிருத்திக்குத் தவிர வேறு எதற்கும் பயன்படாது. அதனால் அந்தக் கன்றுகளையெல்லாம் ஆண்டுதோறும் அத்தனூரம்மனுக்கு நடக்கும் திருவிழாவின் போது, பலி கொடுத்து விடுவார்களாம். சுமார் நூறு கன்றுகளையாவது ஓரிடத்தில் ஒன்றாகப் பலியிடும்போது, அது கர்ண கொடூரமாகத்தான் இருக்கும். அதைக் காணச் சகிக்காமல்தான் மக்களே அந்த அம்மன் பண்டிகையையும் பலியையும் நிறுத்தி விட்டார்களாம். இந்த இரத்தச் சகதியிலிருந்து மீண்டு, மாவிடித்தலுக்கு வருவோம்.

எங்களூர் மாரியம்மன் பண்டிகை மிகவும் விசேஷம். சுற்று வட்டாரத்திலுள்ள பதினெட்டுப்பட்டி மக்களும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை. அதனால் ஆண்டுதோறும் நடத்தினால் பட்ஜெட் தாங்காதென்று இரண்டாண்டுகளுக்கு ஒருமுறைதான் நடத்துவார்கள். அந்தப் பண்டிகைக்குத்தான் அனைவரும் மாவிடிப்பார்கள். அந்தப் பண்டிகையின் முக்கிய பலகாரமே அதுதான். பண்டிகையின் ஹைலைட் என்பது புதன், வியாழன் ஆகிய இரண்டு தினங்களில் நடப்பனதான். புதன்கிழமை விடியற்காலையில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மேள தாளம் முழங்க, பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வருவார்கள். அதென்ன மாவிளக்கு? பச்சரிசியை ஊறவைத்து, வடிகட்டிக் காயவைத்து, அதை எச்சில் படாமல் உரலிலிட்டு, இடித்துச் சலித்து, வெல்லப் பாகிலிட்டுப் பிசைந்து, அந்த மாவை உயர வடிவச் செவ்வகமாக, இரண்டு பிடிப்பார்கள். அவற்றின் உச்சியில் குழியாக்கி, எண்ணெய் ஊற்றித் திரியுமிட்டு, எரியவிடுவார்களாம். அவற்றை தேங்காய், பழம் வைத்து, பூக்களால் அலங்கரிக்கப் பட்டஒருதட்டில் மாவிளக்குகளையும் வைத்து கோவிலுக்கு எடுத்துச் செல்வதுதான் இந்த மாவிளக்கு. ஆனால், பிற்காலத்தில் அந்த மாவிலேயே விளக்கேற்றாமல், விளக்கைத் தனி விளக்குகளிலேயே ஏற்றி எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

இந்த மாவிளக்கு மாவு என்பது சிறிதளவே என்பதால் அனைவருக்கும் பிரசாதம் மாதிரிதான் கொடுக்க முடியும். அதுவும் இரண்டு மூன்று நாட்களுக்குத்தான் தாங்கும். மேலானால், காளான் பூத்துவிடும். அதற்காகத்தான் கம்பில் மாவுருண்டைகள் பிடிப்பார்கள். அது பத்துப் பதினைந்து நாள்களுக்குத் தாங்கும். அந்த மாவுருண்டைகள் பிடிப்பதுதான் விசேஷம். செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே அதற்கான வேலைகள் தொடங்கிவிடும். பதினைந்து இருபது லிட்டர் கம்பையாவது ஊறவைத்து, வடிகட்டி உலர்த்துவார்கள். மாலை மயங்கியதும் உரலிலிட்டு இடித்துச் சலிக்க ஆரம்பிப்பார்கள். இந்த வேலைகளைச் செய்வதற்கென்றே இரண்டு, மூன்று உறவுக்காரப் பெண்கள் திங்கட்கிழமை மாலையே வந்திருப்பார்கள்.

அது எப்போதுமே நிலாக் காலமாகத்தான் இருக்கும். அதனால் அனைவரும் கதை பேசிச் சிரித்துக் கொண்டு, களைப்பின்றி வேலை பார்ப்பார்கள். கம்பை இடித்துச் சலித்து, வெல்லப் பாகு காய்ச்சி, மாவில் ஊற்றிப் பிசைந்து உருண்டை பிடித்து முடிக்க, இரவு பத்து மணிக்கு மேலாகிவிடும். உருண்டைகள் ஒவ்வொன்றும் பனம்பழம் அளவுக்கு இருக்கும். சுமார் இருபது உருண்டைகளாவது கிடைக்கும். பண்டிகைக்கு வரும் உறவினர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவு உருண்டைகள் கொடுத்தும் அனுப்பப்படும். இந்த மாவு உருண்டைகளைப் பிட்டுச் சாப்பிடும்போது, இடையிடையே ஊறுகாய்போல, வாழைப் பழத்தையும் கடித்துக் கலந்து சாப்பிடும் சுகமே தனி. ‘நவில்தொறும் நூல்நயம்’ என்பதுபோல, நினையும்தோறும் எச்சில் ஊறவைக்கும் அதிசயம் அது. அதனால்தான் அந்த மாவுக்கு அத்தனை முக்கியம்.

இப்போது எல்லாம் பொய்யாய், பழங்கதையாய்….!

செ. இளங்கோவன்

Tags :
Advertisement