வெப்ப அலை: மாநிலப் பேரிடர் =தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது
வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வெப்ப அலையின் தாக்கம் குறித்த உரையாடல் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கத்துக்கு மாறாக வெப்பமான வானிலை தொடர்ச்சியாகச் சில நாட்களுக்கு நீடிப்பது வெப்ப அலை எனப்படும். சமவெளிப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பது; மலைப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பது; கடலோரப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் இருப்பது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது.
வெப்ப அலை இரண்டு காரணங்களால் உருவாகிறது. ஒன்று, வெளியிலிருந்து அதிக வெப்பநிலை கொண்ட காற்று உள்ளே வர வேண்டும் அல்லது அப்பகுதியிலேயே ஏதோ ஒரு பொருள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒரு பகுதியில் நிலப்பரப்பின் வெப்பநிலை உயரும்போது, அதையொட்டி வீசும் காற்றும் வெப்பமடைகிறது அல்லது மேலிருந்து கீழிறங்கும் வழியில் காற்று அழுத்தப்படுவதால், நிலப்பரப்பை ஒட்டி வெப்பக் காற்று உருவாகிறது.
இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால் சமவெளியில் ஒரே பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும்போது அல்லது இயல்பிலிருந்து 4.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது அதை இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலையாக அறிவிக்கிறது. அதேபோல மலைப் பிரதேசங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை தாண்டினால், கடலோர பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் தாண்டினால் அதை வெப்ப அலை என்று குறிப்பிடுகிறோம்.பொதுவாக நீரிழப்பு, சோர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த வெப்ப அலையால் ஏற்படுகிறதாம். அதிலும் அதீத வெப்பத்தால் Heat Cramps அதாவது 102°F காய்ச்சலுடன் உடலில் வீக்கம் மயக்கம் ஏற்படும். அதேபோல வெப்ப சோர்வு- பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு ஏற்படும். மேலும், உடல் வெப்பநிலை 40°C அதாவது 104°F அல்லது அதற்கும் அதிகமாகச் செல்லும் போது மயக்கம், வலிப்பு மற்றும் கோமாவை ஏற்படுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் கூட ஏற்படும் ஆபத்துகள் அதிகம். சில நேரங்களில் வெப்ப அலையால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இச்சூழலில் இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், “வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். தண்ணீர்ப் பந்தல் அமைத்துக் குடிநீர் வழங்கப் பேரிடர் நிதியைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அதிக அளவு பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதற்காக உப்பு சர்க்கரை கரைசல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பல இடங்களில் குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.