உலகத் தாய்மொழி நாளின்று!
உலகில் எழுத்துக்களே இல்லாமல், பேச்சளவில் உள்ள மலை வாழ் மக்களின் மொழிகளும், அவர்களின் கலாச்சாரமும் அழிந்துவரும் அபாயத்தில் உள்ளன. அதே நேரம், நாகரிக தாக்கத்தால் பழங் குடி மக்களின் பேச்சுமொழி உட்பட 43 சதவீதம் மொழிகள் அழியும் நிலையில் உள்ளன.வளர்ந்து வரும் உலக மயமாக்கலின் செயல்பாடு களால் மொழிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.பழங்கால மொழிகள் அழிவ தால், உலகின் மிகச்சிறந்த மக்க ளின் பலவிதமான கலாச்சாரங் களும், தொன்றுதொட்டு பின் பற்றப்படும் வழக்கங்களும், சிந்தனை சக்திகளும் அழிந்து போகின்றன.இதை எல்லாம் கவனத்தில் கொண்டு சர்வதேச அளவில் உள்ள பல் வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாது காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உலகம் முழுவதும் பன்னாட்டு தாய்மொழி தினம் பிப். 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தாய் மொழியை சிறப்பாக பயில்வ துடன், தாய்மொழி வாயிலாகவே பிற மொழிகளையும் கற்கவேண் டும் என இந்த தினம் வலியுறுத்துகிறது.அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும், இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
பங்காளதேசத்தின் தேசிய மொழியாக வங்க மொழியே அமையவேண்டும் என்பதற்காக, 1952ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘வங்க மொழி இயக்கத்தை’ அங்கீகரிப்பதற்காகவே பிப்பிரவரி 21ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்த நாளில் தான் வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்களும் அரசியல் ஆர்வலர்களும், தங்கள் மொழிக்காகச் சட்டத்தை மீறி போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையின் நடவடிக்கையால், சில மாணவர்களும் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியது. சில ஆண்டுகள் கடந்தும் போராட்டங்கள் ஓயவில்லை. இறுதியில், 1956 ஆண்டு நாட்டின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனியொரு நாடு உருவாக வழிவகுத்தது. இந்தப் பின்னணியில்தான் அப்படி மொழிக்காகப் போராடிய இந்த இயக்கத்தை நினைவில் கொண்டு, உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்கவே 1999 ஆம் ஆண்டில், 21 பிப்பிரவரியை பன்னாட்டுத் தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) அறிவித்தது.
மகாத்மா காந்தி, ‘எனது தாய்மொழியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தபோதும், தாயின் மார்போடு ஒட்டிக்கொள்வதுபோல, எனது தாய்மொழியைப் பற்றிக்கொள்ள வேண்டும். அது மட்டுமே என்னை உயிரோடு வைத்திருக்கும்’ என்று ஹரிஜன் பத்திரிக்கையில் தாய்மொழி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
தாய்மொழியின் சிறப்பு குறித்து நெல்சன் மண்டேலா, ‘நீங்கள் ஒரு மனிதனிடம் அவனுக்குப் புரியும் மொழியில் பேசினால், நீங்கள் பேசுவது அவனது மூளைக்கு செல்லும். ஆனால், நீங்கள் அவனது தாய்மொழியில் பேசும்போது, அது அவனுடைய இதயத்துக்கு செல்லும்’ என்று கூறியுள்ளார்.
ஆம்... தாய்மொழி என்பது தாய்க்கு ஒப்பான ஒன்று. மொழி என்பது கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்பு சாதனம் என்று நினைக்கிறோம். ஆனால், மொழி என்பது அவற்றை எல்லாம் தாண்டி நம் பண்பாட்டு அடையாளம். கலாசார வளர்ச்சிக்கு உதவும் ஆதாரம். வெற்றிக்கு வித்திடும் அஸ்திவாரம்.
வாழையடி வாழையாக வளர்ந்த பண்பாட்டைக் காப்பாற்றவும், தொடர்ந்து வளர்த்தெடுக்கவும், மிகவும் ஆற்றல் வாய்ந்தக் கருவிகளாக அமைந்தவை, உலக மக்களின் தாய் மொழிகள். நமது தாய்மொழியைப் போற்றுவதும், மற்றவர்களின் மொழிகளுக்கு இடங்கொடுப்பதும் உலக அமைதிக்கும், ஒற்றுமைக்கும், புரிந்துணர்வுக்கும் வழிவகுக்கும்.
நமது இந்தியாவில் மொத்தம் 780 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருவது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக மொழிகளைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான மரபுடைய மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி. இந்த சிறப்பு உலகில் சில மொழிகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால், தற்போதைய டிஜிட்டல் உலகில் தமிழ் மொழி வளர்ச்சி நோக்கி பயணிக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. பன்னாட்டு மொழி அறிவு நிச்சயம் தேவை. மறுக்கவில்லை. ஆனால், தாய்மொழியைத் தவிர்த்து விட்டுத்தான் அதைப் பெற வேண்டுமா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளை இன்றும் நாம் கற்கிறோம் என்பதே தமிழ் மொழியின் சிறப்புக்கு சான்று. கருவில் இருக்கும்போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் அனைத்தும் தாய்மொழி வழியாகவே நடக்கிறது.ஆகவே, நமது தாய்மொழியான தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் கற்றுத்தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.