’ராமம் ராகவம்’-விமர்சனம்!
தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று தந்தை - மகன் உறவு குறித்தான கற்பிதங்கள் சில இருந்தாலும் தந்தை - மகன் உறவு பெரும்பாலும் முரண் சார்ந்ததாகவே அமைகிறது. இருவருக்கும் உள்ள முரண்பாடுகளே தந்தை - மகன் உறவுக்கான முரணியக்கமாக அமைகிறது. இந்த முரணியக்கமே இந்த உன்னதமான மற்றும் சிக்கலான உறவுக்கு வரலாறு தொட்டும் சமூகம் தொட்டும் இலக்கணமாக அமைகிறது. இச்சூழலில் அப்பா - மகன் உறவில் இதுவரை சொல்லாத சில பக்கங்க்ளை அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார். படம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களது அப்பாவை நினைத்துப் பார்க்கும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து கிளைமாக்ஸில் சஸ்பென்ஸ் எல்லாம் வைத்துள்ளார் டைரக்டர் தனராஜ் கொரனானி.
அதாவது கவர்மெண்டில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி சமுத்திரக்கனி. இவரது மகன் தன்ராஜ். குழந்தையிலிருந்து மகனை பாசமாக வளர்க்கிறார் சமுத்திரகனி. மகன் தன்ராஜ் பெரியவன் ஆன பிறகு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி தந்தையின் சொல் பேச்சை கேட்காமல் ஏராளமான தவறுகள் செய்கிறார். ஒவ்வொரு முறையும் அவரை சமுத்திரகனி காப்பாற்றினாலும் மீண்டும் மீண்டும் எதிர்பாராத அதிர்ச்சியை தந்தைக்கு தந்துக் கொண்டே இருக்கிறார் தன்ராஜ். தன் ஆசைக்கு தடையாக இருக்கும் தந்தையைக் கொல்லக்கூட தன்ராஜ் திட்டமிடுகிறார் ஆனால் அதன் பிறகு நடப்பவைகளை, மகன்கள் அனைவரும் தங்களது அப்பாக்களை நினைத்துப் பார்க்கும்படி மனதுக்கு நெருக்கமாக சொல்வதே ‘ராமம் ராகவம்’ படக் கதை.
பெரும்பாசம் கொண்ட மகனை திருத்துவதற்காக கண்டிப்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்தினாலும், மனதுக்குள் இருக்கும் அன்பை வெளிக்காட்ட முடியாமல் தடுமாறும் தந்தையாக பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார் சமுத்திரக்கனி. நேர்மையான மனிதர், பாசமிகுந்த அப்பா என படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்.ஹீரோவாக நடித்திருக்கும் தனராஜ் கொரனானி, அப்பாக்களின் மனதை புரிந்துக்கொள்ளாமல், அவர்களை எதிரியாக பார்க்கும் பிள்ளைகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். குறிப்பாக எப்படியெல்லாம் ஒரு பிள்ளை இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கும் ராகவன் கதாபாத்திரத்தை ரொம்பவும் கச்சிதமாக நடித்திருக்கிறார் தன்ராஜ். அப்பா சமுத்திரக்கனி மீது அவர் கோபப்பட்டு ஒவ்வொரு முறையும் அவரை கோபமூட்டும் விதமாகவே அவருக்கு எதிராக செயல்படுவது இப்படி கூட ஒரு பிள்ளையா என்று கடுப்பை ஏற்றுகிறது.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் பிரமோதினி மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் மோக்ஷா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சுனில் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. கதையின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு ஹரீஷ் உத்தமனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் தனக்கான வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் நங்கூரமாக நின்றுவிடுகிறார்.
சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோர் அழுத்தமான திரைக்கதையை அசுவாசப்படுத்தும் விதமாக, அவ்வபோது சிரிக்க வைக்கிறார்கள்.
கேமராமேன் துர்கா கொல்லிபிரசாத், தனது கேமரா மூலம் கதாபாத்திரங்களின் மனங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். சிவபிரசாத் யானாலாவின் கதையும், மாலியின் வசனமும் அழுத்தமான கதைக்களத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
பெரும்பாலும் நிஜத்தில் சமுதாயத்தில் பல நேரங்களில் நாம் பார்த்த சம்பவங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தாலும் தெலுங்கு பட உணர்வையே பிரதிபலிக்கிறது.
மார்க் 2.75/5