காசா போர்; முடிவுக்கு வந்தது!
ஐ.நா உள்பட பல நாடுகளும் வைத்த வேண்டுகோளை ஏற்காமல் நீடித்துக் கொண்டே போன இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள் சிறுவர்கள், முதியவர்கள் என்று 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனிடையே பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதி தீவிர தாக்குதலை நடத்திக் கொண்டே இருந்தது. முன்னரே சொன்னது போல் போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் இரண்டு பேரும் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டே வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் காரணமாக, 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 150க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் தற்போது வரை ஹமாஸின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர்.
இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் நான் பதவி ஏற்பதற்குள் பிணையக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் வரலாற்றில் இதுவரை கண்டிராத பாதிப்பை ஹமாஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், பிணை கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் காரணமாக 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்தும், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.