சாம்பியன்ஸ் டிராபி :ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி - பிசிசிஐ அறிவிப்பு.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது. இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்ய தேர்வுக் குழுக் கூட்டம் மும்பையில் இன்று கூடியது. தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இதைத் தொடர்ந்து அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியை வெளியிட்டார்கள்.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முஹமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெயிஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.
பும்ராவின் உடற்தகுதி இன்னும் உறுதி செய்யப்படாததால், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஹர்ஷித் ராணா விளையாடுவார்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் கருண் நாயர் மிரட்டலாக பேட் செய்து வருகிறார். பேட்டிங் சராசரி 752.00 உடன் 752 ரன்கள் குவித்துள்ளார். அணித் தேர்வில் கருண் நாயர் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டாரா என்று கேட்கப்பட்டது. இதற்கு கருண் நாயர் குறித்து விவாதித்தோம் என அஜித் அகர்கர் தெரிவித்தார். ஏதேனும் காயம் ஏற்பட்டால், அப்போது மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என்றும் அகர்கர் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை பிப்ரவரி 19 அன்று கராச்சியில் தொடங்குகிறது. மார்ச் 9 அன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் அட்டவணை
பிப்ரவரி 20 - வங்கதேசம் vs இந்தியா, துபாய்
பிப்ரவரி 23 - பாகிஸ்தான் vs இந்தியா, துபாய்
மார்ச் 2 - நியூசிலாந்து vs இந்தியா, துபாய்
இங்கிலாந்துடனான மூன்று ஒருநாள் ஆட்டங்கள் பிப்ரவரி 6, 9, மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.