இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92 . 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கா என்ற கிராமத்தில் பிறந்தார். அது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. 1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தது. இளமைப் பருவத்திலேயே மன்மோகன் சிங் கல்வியில் சிறந்து விளங்கினார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். 1957இல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1962 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் DPhil பட்டம் பெற்றார். ஏப்ரல் 2024இல் தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார். 1972 முதல் 1976 வரை தலைமைப் பொருளாதார ஆலோசகர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்தார். கூடவே 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். அப்போது இந்தியப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் நிதி ஒழுங்குமுறையில் கவனம் செலுத்தினார். 1985 முதல் 1987 வரை திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார உத்திகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
1991 – 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக செயல்பட்டார். கல்வியாலும், நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.
குறிப்பிட்டு சொல்வதானால் 1990களின் தொடக்கத்தில் இந்தியா மிகக் கவலைக்குரிய அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்தது. அச்சமயம், நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் மன்மோகன் சிங். நம் நாடு பொருளாதாரத்தில் நிலைதடுமாறி தேசமே விழி பிதுங்கி போய் கொண்டிருந்தக் காலகட்டத்தில் , மன்மோகன் சிங்கின் பொருளாதார சிந்தனையையும், தொலஒ நோக்கு பார்வையையும் மெச்சியே, அவருக்கு நிதி அமைச்சர் எனும் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது.நம்பிக்கைக்கு ஏற்றபடி செயல்பட்டு, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினார் மன்மோகன் சிங். அவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகள் திருப்புமுனையாக அமைந்தன. கூடவே நாட்டில் சில பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு மன்மோகன் சிங் முதன்மைக் காரணம் என்று சொன்னால் மிகையில்லை.
அத்துடன் 2004ஆம் ஆண்டில் எவரும் எதிர்பார்க்காத சூழலில், மன்மோகன் சிங், இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற போதும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, 2009லும் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். மொத்ததில் வெற்றிகரமாக 10 ஆண்டுகள் பிரதமராகப் பொறுப்பு வகித்தார் மன்மோகன் சிங். அவட் ஆட்சி செய்த 2008-ம் ஆண்டு உலகமே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியா கஜானாவை அபாரத் திறமையுடன் சமாளித்தார்.
மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளையும், அவரது அணுகுமுறையும் இன்றைக்கு பலரும் கொண்டாடுகின்றனர்.
இப்பேர்பட்ட மன்மோகன் சிங்குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நினைவிழந்து மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை காண காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மத்திய அமைச்சர் நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 26ஆம் தேதி சுயநினைவை இழந்தார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்குக்கு குர்சரண் கவுர் என்ற மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அடிசினல் ரிப்போர்ட்
மன்மோகன் சிங் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மிக முக்கியமான சில திட்டங்கள் இதோ.
1.. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2005இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (NREGA) அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லாத் திட்டத்தைப் போக்குகிற வகையில், 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) கொண்டுவரப்பட்டது.
2. இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், தனித்தனி அடையாள எண் வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டது.
3. 2005 இல், மன்மோகன் சிங் அரசு அன்று வரை இருந்த சிக்கலான விற்பனை வரிக்குப் பதிலாக வாட் (VAT) வரியை அறிமுகப்படுத்தியது.
4. மன்மோகன் சிங் தலைமையின் கீழ், சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் 2005 இயற்றப்பட்டு , 23 ஜூன் 2005 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) விதிகள் 2006 உடன் 10 பிப்ரவரி 2006 அன்று நடைமுறைக்கு வந்தது. அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்கும் வகையிலும் இந்த சட்டம் இயற்றப்பட்டது. Advertisement
5. பிரதமர் மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் மன்மோகன் சிங் ஆட்சியில் தான் கையெழுத்தானது. வீடு உறுதி திட்டம்
6. வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வீடுகள் கட்டித் தருவதற்காக இந்திரா காந்தி அவாஸ் யோஜனா திட்டம், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
7. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009இல் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது.
8. வங்கிகளில் கல்விக்கடன் என்பது எவரும் எளிதில் பெற முடியாத, அரிதாக இருந்த காலத்தில், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கல்விக்கடன் திட்டத்தை பரவலாக்கியது. ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கல்விக்கடன் பெற்று தொழில் கல்வி பயின்றனர்.
9. மன்மோகன் சிங்கின் ஆட்சியில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
10. மன்மோகன் சிங் ஆட்சியில் அமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தில், கிராமங்கள் அருகிலுள்ள நகரங்களோடு இணைக்கப்பட்டு, அந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.