For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரிப்போர்ட்டர்களால்தான் அசம்பாவிதங்கள் வெளியே தெரிய வருகிறது - ஐகோர்ட்.

01:06 PM Dec 28, 2024 IST | admin
ரிப்போர்ட்டர்களால்தான் அசம்பாவிதங்கள் வெளியே தெரிய வருகிறது   ஐகோர்ட்
Advertisement

ண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று (டிச.,28) நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த அறிக்கையை சீல் வைத்த உறையில், போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

அரசு தரப்பில் கூறியதாவது:

Advertisement

'நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம். எல்லா முதல் தகவல் அறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர்., இணையதளத்தில் பதிவேற்றம் செய்த உடனே முடக்கப்பட்டு விட்டது. கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின், அது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 14 பேர் தங்கள் மொபைல் மூலமாக எப்.ஐ.ஆர் காப்பியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து விட்டோம். பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். வழக்கை வேறு சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறால் வெளியாகிவிட்டது.

எப்.ஐ.ஆர்.,யில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவல்களை வெளியிட்டவர்கள், ஊடகங்கள் அனைவருமே பதில் கூறியாக வேண்டும். போலீஸ் துறை கசியவிடவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசுக்கு மட்டுமில்லை; அனைவருக்குமே உள்ளது. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணை எப்படி குற்றம் சாட்டுவது என்பதற்கு உதாரணமாக எப்.ஐ.ஆர்., உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறும்போது போலீஸ் அதிகாரி உதவி செய்ய முடியாதா?

இணையத்தில் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பிறகும், 14 பேர் அதை பார்த்தது எப்படி? போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. யார் எப்.ஐ.ஆர்., பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் ஞானசேகரனிடம் வேறு மொபைல் இருந்ததா? புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒரு குற்றவாளிதான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார் எனவும் கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அரசுத் தரப்பில் கூறும்போது, ’’இந்த விவகாரத்தில் ஆணிவேர் வரை விசாரணை நடத்தப்படும். தற்போது விசாரணை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது.மேலும் செய்தியாளர்களைச் சந்திக்க காவல் ஆணையருக்கு உரிமை உள்ளது. குற்றவாளிகள் யாரையும் காவல்துறை பாதுகாக்கவில்லை என்று தெரிவிக்கவே காவல் ஆணையர் சந்திப்பு நடத்தப்பட்டது. வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று காவல் ஆணையர் கூறவில்லை. இதுவரை ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக மட்டுமே தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டது.

இதையடுத்து, அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? என்பது குறித்தும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அது மட்டுமின்றி அரசு அதிகாரிகள் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்..மாறாக பத்திரிகைகளை குறை சொல்லி அவர்கள் மீது பழி போடக் கூடாது.. ரிப்போர்ட்டர்களால்தான் இம்மாதிரியான அசம்பாவிதங்கள் வெளியே தெரிந்துள்ளது. பத்திரிகையாளர் ஒன்றும் எதிரிகள் அல்ல..!

அது சரி.. இதேபோல மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நிர்பயா நிதி செலவு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது குறித்தும் அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு  விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளனர்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement