For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - முழு விபரம்!

09:02 AM Dec 01, 2023 IST | admin
ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்   முழு விபரம்
Advertisement

ம் நாட்டில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது.தேர்தல் நடைபெற்ற இந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை மறு நாள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்படும். இதனிடையே நேற்று மாலை 6 மணிக்கு பல்வேறு டிவி சேனல்கள் மற்றும் தேர்தல் அமைப்புகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த 5 மாநில தேர்தல் முடிவை அனைத்து கட்சிகளும் பெரிதும் எதிர்பார்க்கின்றன. மபியில் ஆட்சியை தக்க வைத்து மற்ற 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாஜவும், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு மற்ற 3 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க காங்கிரசும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் (எம்என்எப்) ஆட்சியை தக்க வைக்க விரும்புகின்றன.

Advertisement

இந்நிலையில்தான், நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான முடிவுகள், தெலங்கானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் பாஜ ஆட்சி அமைக்கும் என்றும் கணித்துள்ளன. மிசோரமில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.

Advertisement

சட்டீஸ்கரில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தது. பாஜ 15 இடங்களை பெற்றது. இம்முறை முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங். மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் 41 முதல் 53 சீட் வரை கைப்பற்றும் என்றும், பாஜ 36 முதல் 48 இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி-சிவோட்டர் கூறி உள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களையும், பாஜ 36 முதல் 46 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் இடிஜி கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 48 முதல் 56 இடங்களையும், பாஜ 32 முதல் 40 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதே போல தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டாக ஆட்சி செய்த முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சி தோல்வி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் கூட்டணி 63 முதல் 79 சீட் வரை வெல்லும் எனவும், பிஆர்எஸ் 31 முதல் 47 சீட் வரை கைப்பற்றலாம் எனவும் இந்தியா டிவி சிஎன்எக்ஸ் கணித்துள்ளது. பாஜ கூட்டணி ஒற்றை இலக்கத்தில் சொற்ப அளவிலான இடங்களை மட்டுமே கைப்பற்றும் என அனைத்து கணிப்புகளும் கூறி உள்ளன.

பிஆர்எஸ்சிடம் இருந்து தெலங்கானாவை கைப்பற்றியது போல, பாஜவிடமிருந்து மத்தியபிரதேசத்தில் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் 109 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என்றும் பாஜ 105 முதல் 117 இடங்களை கைப்பற்றும் என்றும் டைம்ஸ் நவ் இடிஜி கணித்துள்ளது. ஏபிபி சி வோட்டர் கணிப்பில் காங்கிரசுக்கு 113 முதல் 137 இடங்கள் வரையிலும், பாஜவுக்கு 99 முதல் 112 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிவி 9 கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 111 முதல் 121 இடங்களையும் பாஜ 106 முதல் 116 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் நியூஸ் 24, இந்தியா டிவி, இந்தியா டுடே கருத்துக்கணிப்புகளில் பாஜ அதிக தொகுதிகளை வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மபியில் காங்கிரஸ், பாஜ இடையே மிகக்குறைந்த வெற்றி வித்தியாசம் இருக்கலாம் என கருதப்படுகிறது.

ராஜஸ்தானை பொறுத்த வரை காங்கிரசிடமிருந்து பாஜ ஆட்சியை கைப்பற்றும் என கூறப்படுகிறது. டைம்ஸ் நவ், டிவி 9, ஏபிபி-சி வேட்டார் போன்ற நிறுவனங்கள் பாஜ வெற்றி பெறும் என கூறினாலும், நியூஸ் 24, இந்தியா டுடே, இந்தியா டிவி போன்றவற்றின் கருத்துகணிப்புகளில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தானில் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற நிலை இருந்தாலும் பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மிசோரமில் 40 தொகுதிகளில் பெரும்பான்மை வெற்றிக்கு 21 இடங்கள் தேவை. ஆனால் ஆளும் எம்என்எப், பிரதான எதிர்க்கட்சியான சோரம் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை வெற்றி கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது. எம்என்எப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றினாலும் தனிப்பெரும்பான்மை வெற்றிக்கு தேவையான இடங்களை பெற முடியாது. இதனால் தொங்கு சட்டப்பேரவை ஏற்படலாம் என்றும், தேர்தல் முடிவுக்கு பிறகு 3ம் இடத்தை பெறும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஏதேனும் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளை நாடே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement