5 கட்டங்களிலும் பதிவான வாக்கு விவரங்களை முழுமையாக வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்!.
இந்த பார்லிமெண்ட் தேர்தல் அறிவிப்பு தொடங்கிய நாள் முதல் அடுத்தடுத்து விமர்சனங்களுக்கு ஆளான தேர்தல் ஆணையம், ஒரு வழியாக இப்போது 5 கட்டங்களிலும் பதிவான வாக்கு விவரங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிவிலும் இந்த விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட உடனே இதைச் செய்திருக்கலாம் என்ற போதிலும் இப்போதாவது வாக்குப்பதிவு தரவுகள், அது தொடர்பான செயலியில் விரிவாக இடம்பெற்றுள்ளது பலத் தரப்பிலும் பேசுபொருளாகி உள்ளது..!
தற்போது பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவது குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகள் மற்றும் தீர்ப்புகளால் தேர்தல் ஆணையம் மேலும் வலுப்பெற்றுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கும் வகையில் விவரங்களை விரிவாக வெளியிடும் வடிவமைப்பைத் தேர்தல் ஆணையம் விரிவுபடுத்தி உள்ளது. முதல் ஐந்து கட்டங்களுக்கான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் அதன் அதிகாரிகளும் மாநிலங்களில் உள்ள வாக்காளர் வாக்குப்பதிவு விவரங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஸ்டேட்மெண்டில்,``2024 ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு தொடங்கிய தேதியிலிருந்து வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடுவதற்கான முழு நடவடிக்கையும் துல்லியமாகவும், சீராகவும், தேர்தல் சட்டங்களுக்கு இணங்கவும் எந்த முரண்பாடும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
வாக்குப்பதிவு விவரங்களை பதிவு செய்தல், வெளியிடுதல் மற்றும் படிவம் 17 சி தொடர்பாக, தேர்தல் ஆணையம் பொதுத் தளத்திலும், தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் விரிவாகத் தெரிவித்துள்ளது.
சிறந்த புரிதலுக்காக, அது சுருக்கமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும்.
543 தொகுதிகளிலும் சுமார் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் 17சி படிவம் பெற்றிருப்பார்கள்.
படிவம் 17சி-யில் பதிவு செய்யப்பட்டபடி, ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை மாற்றவே முடியாது. ஏனெனில் இந்த விவரம் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கிடைக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 49 V (2)-ன் படி வாக்குச் சாவடி மையத்தில் படிவம் 17 சி மற்றும் சட்டரீதியான ஆவணங்களுடன் வேட்பாளர்களின் முகவர்கள் எப்போதும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் படிவம் 17சி-யின் நகலை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்து ஒவ்வொரு சுற்றிலும் முடிவுகளுடன் ஒப்பிடுகிறார்கள்.
வாக்குப்பதிவு தரவு எப்போதும் செயலியில் கிடைக்கிறது:
வாக்குப்பதிவு சதவீத தரவுகளை வெளியிடுவதில் எந்த தாமதமும் இல்லை என்பதை ஆணையம் சுட்டிக் காட்டுகிறது.
ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நாளன்றும் காலை 9.30 மணிமுதல் தரவுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு நாளன்று நள்ளிரவுக்குள் முழுமையான வாக்குப் பதிவு விவரம் மொபைல் செயலியில் கிடைக்கும்.
வாக்காளர் வாக்குப்பதிவு தொடர்பான செயலியில் (Voter turnout App) துல்லியத் தரவுகள் இடம்பெற்றுள்ளன. வாக்காளர் வாக்குப்பதிவு செயலியில் 24 மணி நேரமும் முழு தரவுகள் கிடைக்கும் நிலையில், செய்திக் குறிப்பை வெளியிடுவது மற்றொரு கூடுதல் நடவடிக்கையாகும். 5 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இதுவரை 13 செய்திக்குறிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகச் சிறந்த அளவிலான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டிற்குத் தேர்தல் ஆணையம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
முதல் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 166386344 ஆகும். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 110052103 ஆகும். வாக்குப் பதிவு சதவீதம் 66.14 ஆகும்.
இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 158645484 ஆகும். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 105830572 ஆகும். வாக்குப் பதிவு சதவீதம் 66.71 ஆகும்.
மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 172404907 ஆகும். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 113234676 ஆகும். வாக்குப் பதிவு சதவீதம் 65.68 ஆகும்.
நான்காம் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 177075629 ஆகும். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 122469319 ஆகும். வாக்குப் பதிவு சதவீதம் 69.16 ஆகும்.
ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 89567973 ஆகும். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 55710618 ஆகும். வாக்குப் பதிவு சதவீதம் 62.20 ஆகும்.
5 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் விவரம், தொகுதி வாரியாக வாக்காளர் செயலியான Voter turnout செயலியில் விரிவாக இடம்பெற்றுள்ளது``என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.