For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கனமழையைச் சமாளிக்க கார்ப்பரேஷன் ரெடி - உதயநிதி பேட்டி!

02:04 PM Oct 13, 2024 IST | admin
கனமழையைச் சமாளிக்க கார்ப்பரேஷன் ரெடி   உதயநிதி பேட்டி
Advertisement

நாளை, நாளை மறுநாள் சென்னையில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை தீவிரமடையும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

Advertisement

அதில் பேசிய உதயநிதி, ''வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. பொதுமக்களுடைய உயிரும், உடைமைகளும் காக்கப்படும் என்பது தான் அரசினுடைய முதல் நோக்கம். அதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். மழை காலத்தில் பொதுமக்களுக்கு உதவி எண்ணாக 1913 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 பேர் கொண்ட குழு நான்கு ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தொலைபேசி மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

அதேபோல் சமூக வலைத்தள பக்கங்கள், வாட்ஸ்அப், நம்ம சென்னை தளம் ஆகியவற்றிலும் மழை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக கிட்டத்தட்ட 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக 113 எண்ணிக்கையிலான 100 ஹெச்பி பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் என கண்டறிந்து 31 ரயில்வே கல்வெட்டுகள் ஆழமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அரசு அதிகாரிகளுடன் பேசி உறுதி செய்வார்கள். அதுமட்டுமின்றி அரசு சார்பாக 'தமிழ்நாடு அலர்ட்' என்ற புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதனை பொதுமக்கள் டவுன்லோட் செய்து மழை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். தற்போது ஓரிரு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தால் அவற்றைச் சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு அப்படி ஏதாவது மூடாமல் இருக்கும் கழிவு நீர் பாதைகள் பற்றி தகவல் வந்தால் அதனை உடனடியாக மாநகராட்சிக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தரையின் மேல் உள்ள அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மின்சார வாரியத்திற்கு வழங்கி இருக்கிறோம். தாழ்வான மின் மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் அரசும், அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், மாநகராட்சி பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்''என்றார்.

Tags :
Advertisement