கிறிஸ்மஸ் பண்டிகை இன்று உலகம் முழுக்க கோலாகல கொண்டாடட்டம்!.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் தினம், உலக அளவில் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில், கிறிஸ்மஸ் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடினர்.வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயங்களில், புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனைகளில் மக்கள் கலந்துகொண்டனர். ஐரோப்பிய, அமேரிக்க நாடுகள் மட்டுமின்றி பல்வேறு தேசங்களில் நேற்று இரவு தொடங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.உலக அமைதி, மகிழ்ச்சி, அன்பு, சகோதரத்துவம் வேண்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்தின் தொடக்கம் முதலே மக்கள் தங்கள் வீடுகளில் முகப்புகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும் கிறிஸ்மஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பண்டிகையை கொண்டாட தயாராகி வந்தனர். இந்நிலையில்,
இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள பழமை வாய்ந்த புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில், ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது போப் பிரான்சிஸ் இயேசு பிறப்பு குறித்த அறிவிப்பை வாசித்து குழந்தை ஏசுவுக்கு முத்தமிட்டார். இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை துதிக்கும் பல பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர்.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
தேவாலயங்களில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் கூடி இருக்கின்றனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 வரை இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பல திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஏசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆலயங்களிலும் ஆலய வளாகங்களிலும் வண்ண வண்ண நட்சத்திரங்கள் ஜொலித்தன. நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.