For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அரசியலில் ஓர் அபூர்வ வைரம் -ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!

08:48 AM Feb 01, 2024 IST | admin
அரசியலில் ஓர் அபூர்வ வைரம்  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
Advertisement

மந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்த்தவர். இவர் பிப்ரவரி 1,1895-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓமந்தூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் தெலுங்கு பேசுகின்ற ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். நல்ல எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர். 1947-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று வளர்ந்ததற்கு இவர் ஒரு முக்கிய காரணம். இவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆச்சார்ய கிருபளானி உட்பட பலர் முயற்சி செய்தார்கள். தேர்தலில் என்னுடைய ஒத்துழைப்பு தேவை என்றால் இரண்டு நிபந்தனைகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று விளைச்சல் சரியில்லாத நிலங்களுக்கு வரி வசூல் செய்வதை ரத்து செய்வது, மற்றொன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கஞ்சித் தொட்டிகளைத் திறப்பது. இந்த இரண்டையும் செய்யாத வரையில் எந்தத் தேர்தலிலும் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். ஓமந்தூரார் சொன்ன இரண்டையும் அன்றைய அரசு செய்யவில்லை.

சோஷலிஸ்ட்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் ஓமந்தூரார் காங்கிரசுக்கு எதிராகப் போக முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: "நான் வளர்த்த காங்கிரஸ் கட்சிக்கு, நானே எப்படி கெடுதல் செய்ய முடியும்.'

Advertisement

இதுபோன்று மன உறுதியிருந்த காரணத்தால்தான் 1952- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சோதனையில் தமிழ்நாட்டில் ஓமந்தூரார் காங்கிரஸை காப்பாற்றினார். மற்ற மாகாணங்களில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் அந்த நிலை ஏற்படவில்லை.அவர் காலத்தில் சென்னை கார்ப்பரேஷனில் நடந்த ஊழலைப் பற்றி பலவாறு பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அந்த ஊழலை விசாரிக்க அவர் ஒரு விசாரணைக் கமிட்டியை நியமித்தார். எதற்கும் பயப்படாமல் நேர்மையாக நடக்கக்கூடிய ஓமந்தூராரின் தைரியத்தின் மீது எல்லோருக்கும் ஒரு மரியாதை உண்டு.

பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஓமந்தூராரை சாணை பிடிக்காத வைரம் என்று குறிப்பிடுவார். அதாவது நாசூக்காகப் பேசத் தெரியாதவர் என்று பொருள். எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார். ஆளைப்பார்த்தால் பட்டிக்காடு மாதிரி இருப்பார். ஆனால் பெருந்தன்மை, உண்மை, நாணயம், நேர்மை, ஒழுக்கம்,எளிமை ஆகியவற்றிற்குச் சொந்தக்காரர்.அவர் மகாத்மா காந்திஜியைக்கூட ஏற்றுக் கொள்ளாதவர். இந்தியாவிலே சர்தார் வல்லபாய் படேல் மட்டுமே நாணயமானவர் என்று சொல்லுவார்.

ஒரு துறவியின் மனப்பான்மையோடு முதல்வர் பதவியை அலங்கரித்தவர் என்பது ஓமந்தூராரைப் பற்றி அனைவரும் சொன்ன கருத்து. கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று பாரபட்சம் காட்டாமல் சட்டம் அனைவருக்கும் பொது என்று கருதி ஆட்சிக் கட்டிலில் இருந்தவர் ஓமந்தூரார். இவரைப் பதவயிலிருந்து அகற்ற வேண்டும் என்று காங்கிரஸின் ஒரு பகுதியினர் குரல் எழுப்பியபோது, ராஜிநாமா செய்ய இவர் விதித்த ஒரே ஒரு நிபந்தனை என்ன தெரியுமா? "அடுத்த முதல்வரைத் தீர்மானிப்பது நானாகத்தான் இருக்கும்' என்பதுதான்.குழந்தைகள் இல்லாத பரம்பரைப் பணக்காரரும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக் காரருமான குமாரசாமி ராஜாவைத் தனக்குப் பிறகு முதல்வராக்கிய கையோடு, ஓமந்தூரார் அரசியலில் இருந்தே விலகிவிட்டார்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் அவர் வள்ளலார் பக்தர். ஆனால், தாடி இல்லாத ராமசாமி என்றார்கள். பெரியார், கறுப்புசட்டை போட்ட ராமசாமி. இவர் வெள்ளை சட்டை போட்ட ராமசாமி என வர்ணித்தார்கள். காரணம், சமூக நீதியை நிலைநாட்டினார். கோவில் நுழைவு அதிகாரச் சட்டம் மூலம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இந்துக் கோவில்களில் நுழைவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக்கினார். அறநிலைய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார்.அவரை கம்யூனிஸ்ட் என்றார்கள். காரணம், ஜமீன்தாரி-இனாம்தாரி முறைகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார். விவசாயிகள் நலனுக்குத் துணை நின்றார். அவர் காந்தியவாதிதான் என்பதன் அடையாளமாக, மதுவிலக்கை முழுமையாகக் கொண்டு வந்தார். ஊழல் ஒழிப்பை முதன்மையாக்கினார். அவர்தான், இந்தியா சுதந்திரமடைந்தபோது தமிழகத்தின் (சென்னை மாகாணத்தின்) முதல்வராக இருந்த (ஓ.பி.ஆர்) ஓமந்தூர் பி.ராமசாமியார் (திண்டிவனம் அருகேயுள்ள சொந்த ஊரான ஓமந்தூரில் அவர் நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது)

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி காலியானபோது, அந்த இடத்திற்கு தலைமை நீதிபதி பரிந்துரைத்த வழக்கறிஞர் என்.சோமசுந்தரத்துக்கு முதல்வர் ஓமந்தூரார் ஏற்பளித்தார். ஆனால் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இருந்த கோபாலசாமி அய்யங்கார் தனது மருமகனான வழக்கறிஞர் திருவேங்கடாச்சாரியை நீதிபதியாக்க நினைத்தார். ராஜாஜி ஆதரித்தார். பிரதமர் வரை பஞ்சாயத்து போனது. ஓமந்தூராரிடம், “பிராமணரல்லாதார் அரசாங்கத்தை நடத்தப் பார்க்கிறீர்கள்” என்று நேரு குற்றம்சாட்டியபோது, ”நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்குங்கள். இல்லையென்றால் என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என நேருக்கு நேராக நேருவிடம் சொன்ன துணிச்சல்காரர் ஓ.பி.ஆர்.

வகுப்புவாதியாக (சாதி கண்ணோட்டத்தில்) செயல்படுகிறார் என்று இந்து பத்திரிகை, ஓமந்தூராரைப் பற்றி எழுதியது. உடனே அதன் ஆசிரியரை அழைத்து, உங்கள் அலுவலகத்தில் பிராமணர்கள் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? அதில் அய்யங்கார்கள் எத்தனை பேர்? எனக் கேட்டதுடன், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற சமூகத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் வகுப்புவாதியா-நான் வகுப்புவாதியா? என ஒரே போடாகப் போட்டார். அதனால்தான் அறிஞர் அண்ணா தனத திராவிட நாடு இதழில், ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்’ என எழுதினார். இத்தனைக்கும் ஓமந்தூராரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம், இந்தித் திணிப்பில் காட்டிய வேகத்தை எதிர்த்து திராவிடர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி சிறை சென்ற காலம் அது. எனினும், சமூக நீதியின் அடிப்படையில் ஓமந்தூரார் அரசை ஆதரித்தனர்.

எளிமையின் அடையாளமான ஓமந்தூரார், அரசாங்கம் கொடுத்த பெரிய பங்களாவைத் தவிர்த்தவர். (அப்படிப்பட்டவரின் பெயரில்தான் அரசின் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட வளாகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்றழைக்கப்படுகிறது)

உடல் நலக் குறைவால் ஒருமுறை அரசுப் பொதுமருத்துவஸொமனையில் ஓமந்தூரார் அனுமதிக்கப்பட்டபோது, “எல்லா மக்களுக்கும் செய்கிற வைத்தியமே எனக்கும் போதும். எனக்கு சிகிச்சை அளித்ததைப் பயன்படுத்தி எந்த டாக்டரும் சிபாரிசுக்கு வரக்கூடாது” என்றார்.

23.3-1947 முதல் 6-4-1949 வரை இரண்டாண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தது ஓ.பி.ஆர் ஆட்சியில் இருந்தபோது கட்சிக்காரர்களுக்கோ, தன் குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகையையோ, வேலைவாய்ப்பையோ அவர் வழங்கியதில்லை.

ஓமந்தூராருக்கு முன்னர் சென்னை மாகாணத்தை ஆட்சிசெய்த ஒன்பது முதலமைச்சர்களும் அரச வம்சத்தையும், ஜமீன்தார் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர்கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 8-ம் வகுப்பு வரையே படித்தவர்.அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்டதுதான். ஆம், அதுவரை எந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாத நடவடிக்கைகள் இவை.

முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், `என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும்?’ என ஒரு கேள்வியை இணைக்கும்படி முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை, தான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக்கொண்டார் அவர். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை ஓமந்தூரார் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்.

அப்பேர்பட்ட ஓமந்தூரார் தான் முதல்வர் பதவியேற்றிருந்த காலத்தில் ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்ததை வரலாறு என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும். அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க, 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்கவைத்ததோடு அவர் நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனை.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ஓமந்தூரார் அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும் தனது மரபார்ந்த விவசாய வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்பட்டு, தனது வியர்வை சிந்தும் உழைப்பால் வடலூர் பகுதியிலிருந்த தரிசு நிலங்களையெல்லாம் விளைநிலங்களாக மாற்றினார். இன்று அணையா ஜோதியாக வெளிச்சம் வீசும் வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார். வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஓமந்தூரார் ஏற்படுத்தினார்.

இச்சாதனைகளுக்கு சொந்தகாரரின் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை இது!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement