ராயன் - விமர்சனம்!
கோலிவுட் மாப்பிள்ளை என்று பேரெடுத்த தனுஷ் நடிப்பில் 50 வது படம் அவரே டைரக்டர். அண்ணன் செல்வராகவன், சகா வெற்றிமாறனின் சாயல்களை நினைவில் வைத்துக் கொண்டு க்ரே டோனில் ஒரு ஆக்சன் படம் பண்ணியிருக்கிறார். மேக்கிங்கில் மிரட்டும் முன்னேற்றம் .. கேமராவும் இசையும் தான் படத்தின் இமேஜை பெரிதும் உயர்த்தி விடுகிறது. குறிபபாக கேமரா டோன் படத்திற்கு கணம் கூட்டுகிறது. டைட்டில் முடிந்த முதல் 20 நிமிடங்களில் சடசடவென அத்தனை கேரக்டர்கள், சரியான களம், கதை, எல்லாவற்றையும் சொல்லி ஆச்சர்யப்பட வைக்கிறார். சரவணன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் மூவரின் பாத்திர பின்னணி, களம் எல்லாம் செம்ம டீடெயிலிங் உடன் விரியும் போது நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம், பரபரவென நகர்ந்து இடைவேளை வரும் போது பட்டாசு வெடிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்ததோ .. கொஞ்சூண்டு கவனத்தை சிதற விட்டு விட்டார்.. !
அதாவது சிறுவயதில் எதிர்பாராத விதமாக அம்மா, அப்பாவை இழந்த காத்தவராயன் என்றழைக்கப்படும் தனுஷூக்கு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா என இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. ஃபாஸ்ட்புட் நடத்தி தன் தம்பி, தங்கையை பொறுப்பாக வளர்த்து ஆளாக்குகிறார் . ஆனால் முதல் தம்பி சந்தீப் ஊரில் வம்பிழுத்து கொண்டு இருக்க, இரண்டாவது தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் தங்கை துஷாரா மீது உயிரே வைத்திருக்கிறார் தனுஷ். ஒரு சூழலில் சந்தீப் குடித்து விட்டு ஒரு தகராறில் ஏரியா ரெளடி சரவணின் மகனைக் கொன்று விட, சந்தீப்பை சரவணன் கொலை செய்வதற்கு முன்பு ராயன் பிரதர்ஸ் சரவணனைக் கொன்று விடுகிறார்கள். இந்நிலையில் ரெளடிகளின் பிரச்சினை தன் ஏரியாவில் அறவே இருக்கக்கூடாது என நினைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரகாஷ்ராஜ், இவர்கள் பிரச்சினையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். இதை அடுத்து தனுஷ் குடும்ப நிலை என்னவானது என்பதுதான் ‘ராயன்’ படத்தின் கதை.
படத்தின் முதுகெலும்பே தான் என்பதை உணர்ந்து இருக்கும் தனுஷூக்கு ஐம்பதாவது படம் இது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு டைரக்ட் செய்திருக்கும் இரண்டாவது படம். இந்த இரண்டு பொறுப்புகளின் பலத்தை தாங்கும்படி படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருப்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. பொறுப்பான மூத்த அண்ணனாக, குடும்ப பொறுப்புகளைத் தூக்கி சுமப்பதும் , தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை என வரும் போது ஆக்ரோசம் காட்டும் அசுரனாகவும் நடிப்பில் அதகளப்படுத்தியிருக்கிறார் தனுஷ் ஆனால் பாட்ஷா ரஜினியை நினைவூட்டி விடுவதுதான் பலவீனம்.தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், வயதுக்கு ஏற்ப துள்ளல் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். தனுஷின் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், தனக்கு நேர்த்த கொடுமையை காட்டிலும், தனது அண்ணனுக்கு நடந்த துரோகத்திற்கு எதிராக வெகுண்டெழுவது கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக ஆண்களிடையிலான ரவுடியிச கதையில் வெறும் பொம்மையாக இல்லாமல் எதிர்த்து அடிக்கும் துணிவு கொண்ட துஷாரா விஜயன் கதாபாத்திர வடிவமைப்பும், ஒரு கொலைக்குப் பிறகு தனுஷும், துஷாராவும் டீ குடிக்கும் காட்சிக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. ராமாயணத்தில் சூர்பணகை குணத்தை மாடலாக எடுத்து இருப்பதால் ரசிக்கவே தோன்றுகிறது. வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான லகலக ஆக்டிங் மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார். செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், திலீபன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
கதை புதிது அல்ல. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால் தனுஷ் கதை சொன்ன விதமும், நடிகர்கள், நடிகைகளின் நடிப்பும் தான் படத்தை காப்பாற்றுகிறது. படத்தை இயத்கிய விதத்திற்காக தனுஷை பாராட்டியே ஆக வேண்டும். அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது தொழில்நுட்ப குழு என்பது பெரிய திரையில் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்தின் பெரிய பலம். ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றொரு பலம். டைட்டிலின் போதே தன் மீது கவனனத்தை ஈர்த்து விடுபவர் தொடக்கத்தில் வரும் ஓ ராயா பாடல் ஆடியன்ஸூக்கு ஒரு இனிமையான வரவேற்பு. அதே நேரம் க்ளைமேக்ஸில் அடங்காத அசுரன் பாடல் ஒரு வெறியாட்டம். 'உசுரே நீ தானே' என்று ரஹ்மான் பாட அண்ணன் தங்கையான தனுஷ் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் ஒரு ஷாட்டிற்கு திரையரஙகுகளில் வரும் ரியாக்ஷன் வாவ். படத்தின் ஏகப்பட்ட காட்சிகள் இருளில் எடுக்கப் பட்டிருப்பதும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அவற்றை ஒருவிதமான மங்கலான தன்மையில் பதிவு செய்திருப்பதும் காட்சி அனுபவத்தை கூட்டும் அம்சங்கள். அடித்தோம், வெட்டினோம், குத்தினோம் என்று இல்லாமல் சண்டைக்காட்சிகளை உணர்வுப்பூர்வமாக செய்து கவனம் ஈர்க்கிறார் சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.
இரண்டாம் பாகத்தில் அடி, தடி, கொலைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதையில் காட்ட தவறி விட்டார். என்றாலும் குடும்பப் பாசத்தையும், வன்முறையும் குழைத்து அடித்து கொடுத்து இருந்தாலும் ரசிகன் கவனம் எல்லாம் சகோதர பாசத்தின் மீதே செல்வதில் ராயன் ஜெயித்து விடுகிறான்
மொத்தத்தில் இந்த ராயன் - கமர்ஷியல் ஆக்ஷன் வின்னர்
மார்க் 3.5/5