பொங்கல் சீசனில் ஸ்ட்ரைக் செய்வது ரொம்ப தப்பு! - சிவசங்கர் அப்செட்!
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஓய்வூதிய திட்டம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பணிகள் வழங்க வேண்டும் உட்பட 6 அம்சங்கள் கொண்ட கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் "95 சதவீதத்துக்கு மேல் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது" என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுக்க போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியல் காரணங்களுக்காக போக்குவரத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்துவது திசை திருப்புகின்ற செயல். அதிலும் குறிப்பாக இதற்கெல்லாம் யார் காரணமோ அந்த எடப்பாடி பழனிசாமி அணியோடு, அதிமுக தொழிற்சங்கத்தோடு சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தம் செய்வது மிகுந்த கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது.
கடந்த பத்தாண்டு காலத்தில் திமுக தொழிற்சங்கமான தொமுச மற்ற சங்கங்களுடன் துணை நின்று கோரிக்கைகளுக்காக போராடியது. இன்றைக்கு உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று தொமுச சொல்லியிருக்கிறது. அதற்கான நேர அவகாசம் தான் கேட்கிறோம்.இது பொங்கல் நேரம். மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிற நேரம். சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது.
தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்காக போராடக்கூடிய ஒரு இயக்கம். திமுக உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய இயக்கம். செய்து கொடுக்கக்கூடிய இயக்கம். செய்யக்கூடிய முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ்நாட்டிலேயே அரசு பேருந்துகளைக் காப்பதற்கான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். 2000 புதிய பேருந்துகளை வாங்க அரசு நிதியை ஒதுக்கி இருக்கிறார்.
புதிய பணியாளர்களை எடுக்க அரசாணை வழங்கியிருக்கிறார். நீங்கள் வைத்த கோரிக்கை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறார். நீங்கள் சொன்ன ஆறு கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றத்தான், கால அவகாசம் கேட்கிறோம். இன்றைக்கு போக்குவரத்து சுமூகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் இடைஞ்சல் செய்ய வேண்டாம்.உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கள் உரிமைகளை கேட்பதில் எங்களுக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை. ஆனால், எங்கேயும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். 95 சதவீதத்துக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாதபடி போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.