போங்கடா..நீங்களும்,உங்க அரசியலும்- ஒடிசா பாண்டியன் அதிரடி!
அண்மையில் நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்து பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் பாஜக 78 இடங்களையும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களையும் பிடித்தது. தனி பெரும்பான்மைக்கு 74 இடங்களே போதும் என்ற நிலையில், பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.இதன்பின் 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் பதவியை ராஜினாமா செய்தார்.
பலரும் எதிர்பார்த்ததற்கு மாறாக பிஜு ஜனதா தளம் கட்சியின் தோல்விக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கின் உதவியாளருமான வி.கே.பாண்டியன் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. ”ஒடிசாவை தமிழர் ஆளலாமா” என்று பிரச்சாரத்தின் போதும் பாஜகவினர் தீவிரமான பேசி வந்தனர். இதனிடையே தேர்தல் முடிவுகளுக்கு பின் வி.கே.பாண்டியன் யார் கண்களிலும் படவில்லை. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒடிசா சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. கட்சியில் சேர்ந்தாலும், அவர் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு இல்லை என்றும் பலமுறை கூறிவிட்டேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது முழு நேர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ```நான் முழு நேர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். என் வாழ்நாளில் ஒடிசா மக்களின் அன்பை சம்பாதித்துள்ளது பெரும் பாக்கியம். இங்கு அதிகாரியாக பணியாற்றிய போது , புயல் உள்ளிட்ட காலங்களில் பெரும் சேவைகளை என்னால் செய்ய முடிந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய போது , ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி செய்வதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தேன். எந்தவொரு பதவிக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை. நான் ஐஏஎஸ் பணியில் சேரும் போது இருந்த சொத்துக்களே இப்போதும் என்னிடம் உள்ளன. மூதாதையர்களின் சொத்துக்கள் மட்டுமே உள்ளது. என் வாழ்நாளில் ஈட்டிய சொத்துக்கள் என்பது ஒடிசா மக்களின் அன்புதான்.
தற்போது அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன். யாரையும் சிரமத்திற்குள்ளாக்கியிருந்தால் மன்னித்து கொள்ளவும். மேலும், தேர்தலில் எனக்கு எதிரான பரப்பப்பட்ட விமர்சங்கள் பிஜூ ஜனதா தளத்தின் தோல்வியில் பங்கு வகித்ததற்கு பிஜூ ஜனதா தளத்தினிரிடம் மன்னிப்பு தெரிவிக்கிறேன். நான் எப்பொழுதும், பிஜூ ஜனதா தளத்தினிருக்கு நன்றியுணர்வோடு இருப்பேன். என் இதயத்தில் எப்பொழுதும் ஒடிசா மக்களுக்கு இடம் இருக்கும், என் மூச்சில் எப்பொழுதும் குருநாதர் நவீன் பாபு இருப்பார். அவர் நலமுடன் இருக்க வேண்டும் என ஜெகன் நாதரிடம் வேண்டிக் கொள்கிறேன்`` என வி.கே. பாண்டியன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.