தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அடுக்குமாடி குடியிருப்பு சொத்து பதிவு: புதிய முத்திரை கட்டண விதிமுறைகள்!

07:44 PM Nov 24, 2023 IST | admin
Advertisement

டுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனைப் பத்திரங்களை பதிவு செய்வதற்கான புதிய முறையை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. சொத்து பதிவில், வீடு வாங்குபவர்கள் நிலம்/கட்டிடத்தின் கூட்டு மதிப்பின் அடிப்படையில் பதிவு செய்யலாம். இதற்கு முத்திரைக் கட்டணம் குறைக்கப்படுகிறது. ₹50 லட்சம் வரையிலான சொத்தின் கூட்டு மதிப்புக்கான முத்திரை வரி 7% லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ₹50 லட்சம் முதல் ₹3 கோடி வரை, முத்திரை வரி 7%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ₹3 கோடிக்கு, முத்திரை வரி 7% ஆக உள்ளது. தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவில் 2 ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம், பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 வருடங்களுக்கு பிறகு மாற்றப்பட்டன. ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் என சேவைகளுக்கான கட்டண வீதங்கள் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த புதிய நடைமுறை டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

Advertisement

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு வரும்போது, இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது அடிநிலம் பொருத்து பிரிபடாத பாகத்திற்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும், கட்டிடப் பகுதியைப் பொருத்து கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.

ஆனால் இந்த பரிவர்த்தனை இரண்டு வெவ்வேறு ஆவணங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. விற்பனை ஆவணத்திற்கு 7 சதவீத முத்திரைத் தீர்வை மற்றும் 2 சதவீத பதிவுக் கட்டணமும் கட்டுமான உடன்படிக்கை ஆவணங் களைப் பொருத்து 1 சதவீத முத்திரைத் தீர்வை மற்றும் 3 சதவீத பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைத் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்து கட்டிடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த ஒரு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பானது மொத்த கட்டிட பரப்பைப் பொறுத்து கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் விற்பனை ஆவணமாகவே பதிவு செய்யப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் நிலவும் இம்முறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இதுகுறித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற ரியல் எஸ்டேட் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆவணத்திற்கான முத்திரைத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதியும்போது இனி பிரிபடாத பாக நிலத்திற்கு ஒரு தனி ஆவணம் கட்டிடத்திற்கு ஒரு தனி ஆவணம் என இரு ஆவணங்களாகப் பதியப்படும் நிலையை மாற்றி கட்டிடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்தவும் குறிப்பிட்ட மதிப்பு வரையிலான புதிய குடியிருப்புகள் பதிவிற்கான முத்திரைத் தீர்வையைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மதிப்பு ரூ.50 லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போது உள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கலாம் என்றும், ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கலாம் என்றும் அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு?

இதனால் ரூ.50 லட்சம் வரையிலான மதிப்புடைய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனைக் கிரைய ஆவணம் பதியும்போது முத்திரைத் தீர்வை 4 சதவீதம் மற்றும் பதிவுக் கட்டணம் 2 சதவீதமாக மொத்தம் 6 சதவீதம் செலுத்தினால் போதுமானது.

ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் முத்திரைத் தீர்வை 5 சதவீதம் மற்றும் பதிவுக் கட்டணம் 2 சதவீதம் என மொத்தம் 7 சதவீதம் செலுத்தினால் போதுமானது.

இந்த சலுகையானது பிரிபடாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே இது பொருந்தும். மறு விற்பனைக்கு பொருந்தாது.

இனிமேல் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான ஒப்பந்த ஆவணமாக இல்லாமல் விற்பனை கிரைய ஆவணமாகப் பதிந்து தங்கள் குடியிருப்பை உடைமையாக்கிக் கொள்ளலாம்.

டிசம்பர் 1-ந்தேதி முதல்…

அடுக்குமாடி குடியிருப்புகளை அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட முத்திரைத் தீர்வை சலுகையுடன் பதியும் இப்புதிய நடைமுறை டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாகப் பதியப்பட்டிருக்கும் குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது தற்போது பதிவுத்துறையால் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அனுமதியானது, டிசம்பர் 1-ந்தேதிக்கு பின்னர் பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களைப் பொறுத்து விலக்கிக் கொள்ளப்படும்.

கூட்டு மதிப்பின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை சலுகை வழங்கும் அரசின் இந்த நடவடிக்கையால் வங்கியில் கடன் பெற்று புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.~இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ApartmentNew Stamp DutypropertyregistrationRegulations
Advertisement
Next Article