🦉தமிழில் முதன் முதலாக நாட்குறிப்பு எழுதி வந்த ஆனந்தரங்கம் பிள்ளை!
ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் டியூப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். அதை விட தமிழில் நாட்குறிப்பு எழுதியவரே ஆனந்தரங்கம் பிள்ளை என்றால் மீதியை வரலாறு சொல்லும்.!ஆம்.. தமிழில் தினமும் நாட்டு நடப்புகளை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவரிவர். ஒன்றிரண்டல்ல, சுமார் 25 ஆண்டுகளுக்கு இப்படி எழுதி இருக்கிறார். இதன் காரணமாக அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நூல்கள் எழுதுவதால் மட்டுமல்ல நாட்குறிப்புகள் எழுதுவதாலும் வரலாறு செழுமை அடையும் என்பதை நிரூபித்தவர் இவர்.அரசுப் பணியில் திவானாகப் பணி புரிந்தவர் இவரது தந்தை. சொந்தமாக ஒரு கப்பல் கூட வைத்திருந்தார் ஆனந்த ரங்கம் பிள்ளை. இவரது வாழ்க்கைமுறையை எளிமையானது என்று கூறிவிட முடியாது. ஆனால் இவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை. பொதுவாக பல மொழி அறிந்தவர்கள் தங்கள் மேதமையை காட்டும் விதத்தில் இலக்கிய பூர்வமாக கொஞ்சம் கரடுமுரடாக எழுதுவதுண்டு. இதில் விதிவிலக்காக இருப்பதால் ஆனந்தரங்கப் பிள்ளையின் எழுத்துக்கள் மேலும் மதிக்கப்படுகின்றன என்பதெல்லாம் தனித் தகவல்கள்.
இந்த இரக்கமற்ற ஓர் உலகில், ஒரு நாட்குறிப்பு எனப்படும் டைரி பிறர் வேதனையை தன் வேதனையாய் எடுத்துக்கொள்ளும், நம்பகமான நண்பன் ஆகலாம். “நம் சொந்த வாழ்க்கைப் பயணங்களை பதிவுசெய்யும் வாழ்க்கைப் படத் தொகுப்பை பாதுகாத்து வைத்திருக்க உதவுகிறது” என எழுத்தாளர் கிறிஸ்டீனா பால்ட்வின் கூறினார்.
நம் கடந்தகால தோற்றத்தை படங்களின் வாயிலாக படிப்படியாய் காண்பிக்கும் போட்டோ ஆல்பத்தைப் போன்று நம் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய குறிப்புகளை எழுத்துவடிவ “சித்தரிப்புகளின்” வாயிலாக தெரிவித்து, பத்திரமாக பதிவுசெய்து வைப்பது டைரியாகு. பைபிள் காலங்களில் அரசாங்கங்கள் முக்கிய நிகழ்ச்சிகளை குறித்து வைப்பது வழக்கமாய் இருந்தது. அப்படிப்பட்ட பல அதிகாரப்பூர்வ பதிவுகளைப் பற்றி பைபிளும் தெரிவிக்கிறது. (எண்ணாகமம் 21:14, 15; யோசுவா 10:12, 13) கிரேக்கர்கள் எஃபெமெரீடஸ்* எனப்பட்ட பஞ்சாங்க முறையை உருவாக்கினர்; அதில் நட்சத்திரங்களும் கிரகங்களும் அன்றாடம் நகருவதை குறித்து வைத்தனர்.
கிரேக்கரை வென்ற ரோமர்கள், இக்குறிப்பேடுகளை தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டனர்; ஆனால் நடைமுறை பயனுள்ள, சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் ஆர்வமூட்டும் அன்றாட நிகழ்ச்சிகளையும் சேர்ப்பதன் மூலம் அவற்றின் மதிப்பைக் கூட்டினர். அவற்றை டையாரியும் என்று அழைத்தனர்; இது டையேஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது; இதற்கு “நாள்” என்று அர்த்தம்.என்றாலும், 17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்யல் பிப்ஸ்-ன் டைரி குறிப்பிலிருந்துதான் மேலை நாடுகளில் டைரி தனிப்பட்ட அன்றாட நிகழ்ச்சிகளை சேகரிக்கும் களஞ்சியமாக ஆனது.
வழக்கத்திற்கு மாறாக, மதப்பற்றும் உலகப் பற்றும் நிறைந்திருந்த பிப்ஸின் அந்த டைரி குறிப்பிலிருந்து ஆங்கிலேய அரசர் இரண்டாம் சார்ல்ஸின் ஆட்சியின்போது வாழ்ந்த மக்களைப் பற்றிய மிகவும் நுட்பமான விவரங்களை சரித்திராசிரியர்கள் பெற்றுள்ளனர். அப்போதிலிருந்து, டைரி குறிப்பு எழுதுவது அதிக பிரபலமாகி வந்தது. அநேக டைரி குறிப்புகள் மதிப்பு வாய்ந்த வரலாற்று ஆவணங்கள் ஆயின. இவற்றுள் குறிப்பிடத்தக்கது, நாசிக்களிடமிருந்து தலைமறைவாய் இருந்த ஓர் இளம் யூதப் பெண்ணின் டைரி குறிப்பாகும். ஆனால் ஃபிராங்க் எழுதிய ஓர் இளம் பெண்ணின் டைரி குறிப்பு (ஆங்கிலம்) மனிதன் சகமனிதனுக்கு இழைக்கும் கொடுமைக்கு வேதனையானதோர் அத்தாட்சியாகும்.
இந்நிலையில்தான் நம் தமிழ் நாட்டின் ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் டியூப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய படி. பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தாராக்கும்.
இவர் 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றுகின்றனர்.
இவரது நாட்குறிப்பு 18-ம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு காலத்திய ஆளுமை நிலவரம், சமூக மாற்றம், போர்த்தந்திரம், வணிகம், அரசியல் சூட்சுமம், மக்கள் கலாச்சாரம், அரசு தண்டனைகள், சட்ட நுணுக்கங்கள், தொழில் முறைகள் இன்னும் என்னென்ன அந்தக் காலக்கட்டத்தில் நடைமுறையில் வெளிப்படையாக இருந்தனவோ, அதையும், மறைபொருளாக இருந்தவையையும் பதிவாகத் திகழ்கிறது. ஆனந்தரங்கம் பிள்ளை அன்றைய மெட்றாஸ் பட்டணத்திலிருந்து புதுவைக்கு சென்று அரசுப் பணியில் உதவியாளராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் படிப்படியாக உயர்ந்து அந்த நாட்டின் திவான் ஆக பதவி உயர்வையும் எட்டினார். அதன் பின்னரும் விடாது டைரி எழுதும் பணியை முழுமைப்படுத்தினார். அங்கே இருந்த படியே ஆனந்தப் புரவி எனும் பேரில் சொந்தமாக பாய்மரக் கப்பல் மூலம் வணிகத்தையும் தொடர்ந்திருக்கிறார். அன்றாட நிகழ்வுகளோடு தான் கேள்விப்பட்ட சம்பவங்களையும் சரிதானா, என்று உறுதி செய்து கொண்டு அவற்றையும் தன்னுடைய டைரியில் ஆவணப் படுத்தியிருக்கிறார்.
1749-ல் முசபர்சஸ் என்ற இந்திய மன்னர், ஆனந்தரங்கன் பிள்ளைக்கு 'மன்சுபேதார்' என்ற கவுரவ பட்டம் அளித்து அவரை செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாக்கினார். தளபதி ஆனபின், அவருக்கென 3 ஆயிரம் குதிரைகளையும் வழங்கினார். ஆளுநர் மாளிகைக்குள் எளிதில் யாரும் நுழைய முடியாத காலக்கட்டத்தில் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு என்று ஆளுநர் தனி அங்கீகாரம் கொடுத்திருந்தார். அதன்படி ஆளுநர் மாளிகைக்குள் செருப்பணிந்தபடி, பல்லக்கில் உள்ளே சென்று வர ஆனந்தரங்கத்துக்கு ஆளுநர் அனுமதி கொடுத்திருந்தார். மேலும், பொதுமக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரமும் அதில் ஒன்று.
இந்த ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள் அன்றைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் கிடைத்தது, தஞ்சாவூர் அரசரிடமிருந்து காரைக்காலை விலைகொடுத்து வாங்கியது, ஆற்காடு நவாப்பிடமிருந்து நாணயம் அடிக்கும் உரிமையை வாங்கியது, சந்தாசாகிப் கைதுசெய்யப்படுவது. பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை கைப்பற்றுவது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது போன்ற அரசியல் செய்திகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன. ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது போன்ற உள்வட்ட அரசியல் செய்திகளும், வேதபுரீஸ்வரர் ஆலயம் இடிக்கப்பட்டது போன்ற பண்பாட்டுச் செய்திகளும் கூறப்படுகின்றன.
அன்றைய சமூக நிகழ்வுகளையும் உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அன்றிருந்த அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு போன்ற செய்திகள் உள்ளன.
ஆனந்தரங்கம் மறைவுக்குப் பின்னர் அவருடைய நாட்குறிப்புகள் 85 ஆண்டுகள் கழித்தே நாட்டுக்கு கிடைத்தது. கவிஞர் அரிமதி தென்னகன் உள்ளிட்ட பலர் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை போற்றும் விதமாக பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் படைத்துள்ளனர். புதுவை அரசு, அவருடைய ஆற்றலை போற்றும் விதமாக, குறைந்த விலைக்கு அவருடைய நாட்குறிப்பை அரசு வெளியீடாக கொண்டு வந்திருக்கிறது. பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் வானம் வசப்படும் (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) நூலானது, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பைக் குறித்ததுதான்.இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன என்பதுதான் தனிச் சிறப்பு.