கல்லறைத் திருநாள் @ அனைத்து ஆன்மாக்கள் தினம்!
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவ.2-ம் தேதியை இறந்தவர்களின் நினைவு நாளாகக் கடைபிடிக்கிறார்கள்.
இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களின் குடும்பங்களில் மரித்த மூதாதையர்கள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது கல்லறைகளையும் முன்னதாகவே சுத்தம் செய்து, வண்ணங்கள பூசி கல்லறைத் திருநாளன்று குடும்பத்துடன் சென்று அவற்றை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறைவேண்டல் செய்வார்கள். மேலும், அந்தந்த கல்லறைத் தோட்டங்களுக்கு உட்பட்ட ஆலயப் பாதிரியார்களால், இறந்தோரின் ஆன்ம இளைப்பாற சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கல்லறைகள் மீது புனித நீர் தெளிக்கப்படும். அன்றைய நாளில் அவரவர் இல்லங்களிலும் இறந்தவர்களின் படங்களை மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்துவதோடு ஏழைகளுக்கு உணவு அளித்தல் புத்தாடைகள் வழங்குவது போன்ற செயல்களின் மூலம் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
இறப்பு என்பது வாழ்வின் முடிவல்ல, வேறொரு வாழ்வின் ஆரம்பம் என்பதையும், இறந்த நம் உறவினர்களும் நண்பர்களும் இன்னும் மேலுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் குறித்து நிற்கிறது இந்நாள். இறந்த ஆன்மாக்களுக்காகச் செபிப்பது என்பது பழைய ஏற்பாட்டின் மக்கபே ஆகமம் 2ம் புத்தகம் 42 முதல் 46 வரையுள்ள வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மறையின் துவக்கக்காலத்தில் இறந்தவர்களுக்கான செப நாள் என்பது இயேசுவின் உயிர்ப்புக்காலத்தில், அதாவது, பெந்தகோஸ்தே ஞாயிறையொட்டிய நாட்களில் சிறப்பிக்கப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் இந்நாள், அக்டோபர் மாதத்திற்கென மாற்றப்பட்டது.
ஒருவகையில் இந்தக் கல்லறைத் திருநாள் நன்றியின் திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது, `நீங்கள் இறந்துவிட்டாலும், உடலளவில் நீங்கள் எங்களோடு இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை. உங்களை, உங்கள் செயல்களை நினைத்துப் பார்க்கிறோம். இறப்பு, ஒருபோதும் நம்மைப் பிரித்துவிட முடியாது. நமது உறவு என்றென்றும் தொடரும்' என்கிற செய்தியையே இந்தக் கல்லறைத் திருநாள் வெளிப்படுத்துகிறது.
கல்லறைத் தோட்டங்களில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன், ஆண் - பெண் போன்ற எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. `மனிதனின் பிறப்பிலும் சமத்துவம், இறப்பிலும் சமத்துவம். ஏனெனில், இவை இரண்டும் கடவுளின் கையில்! அனைத்து வேறுபாடுகளும் இவை இரண்டுக்கும் இடையில்தான் உள்ளன. காரணம், அவை உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. சமத்துவத்தில் பிறந்த நீங்கள், சமத்துவத்தில் இறக்கும் நீங்கள், ஏன் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறீர்கள்?' என்னும் கேள்வியை எழுப்புகின்றன கல்லறைகள். முரண்பாடுகளைக் களைந்து வேறுபாடுகளைக் கொண்டாட அழைக்கின்றன கல்லறைகள். ஆழ்ந்த அமைதியை, `மயான அமைதி’ என்கிறோம். சமத்துவ உணர்வுடன் அமைதியுடன் வாழக் கற்றுக்கொடுக்கின்றன கல்லறைகள்.
1998ல் இதனை நவம்பர் 2ம் தேதிக்கு மாற்றிய குளினியின் புனித Odilo, இந்நாளை பெனடிக்டன் துறவுசபையினர் அனைவரும் பின்பற்றவேண்டும் எனப் பணித்தார். அடுத்த இருநூறு ஆண்டுகளில் இப்பழக்கம் பல்வேறு துறவுசபைகளிலும் பின்பற்றப்பட்டது. பிரான்சின் அனைத்து மறைமாவட்டங்களும் இதனை ஏற்றுக்கொண்டன. நவமபர் 2ம் தேதியை அனைத்து ஆன்மாக்களுக்கான செபநாளாக்க் கொண்டாடும் பழக்கம் 14ம் நூற்றாண்டில் உரோமைய மறைமாவட்டங்களில் அமலுக்கு வந்தது. 1914ம் ஆண்டு முதல் 22ம் ஆண்டு வரை திருத்தந்தையாகப் பதவி வகித்த 15ம் பெனடிக்ட், அனைத்து ஆன்மாக்களின் விழாவுக்கு மிக முக்கியத்துவம் வழங்கினார். இந்நாளில் குருக்கள் மூன்று திருப்பலிகள் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. இறந்த ஆன்மாக்களுக்காகவும், குருவின் கருத்துக்களுக்காகவும், திருத்தந்தையின் கருத்துக்களுக்காகவும் என மூன்று திருப்பலிகள். நவம்பர் 2ம் தேதி அனைத்து ஆன்மாக்களின் திருவிழா எனினும், இம்மாதம் முழுவதும், இறந்தவர்களுக்கென செபிக்குமாறு அழைப்புவிடுக்கிறது கத்தோலிக்கத் திருஅவை.
நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். எவ்வாறு இறக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு வாழ வேண்டும். அமைதியாக, நிம்மதியாக, வேதனையின்றி, தனிமையின்றி சாக வேண்டுமென்றால், வாழும்போதும் அவ்வாறே வாழ வேண்டும். வாழ்க்கை எப்படியோ அப்படியே மரணமும். இறந்துபோன நம் உறவினர்களுக்காக, உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்காக செபம், தவம், தர்மம் என்ற மூன்று வழிகளால் உதவி செய்கிறோம். இறந்த நம் உறவினர் குறித்த நினைவுகள் அவர் இறந்தவுடன் முடிந்துவிடுவது கிடையாது, மாறாக தொடர்கின்றன என்பதன் அடையாளமே, இந்த அனைத்து ஆன்மாக்கள் தினம்.
நிலவளம் ரெங்கராஜன்