For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பெருமழையும், பெஞ்சல் புயலால் விளைந்த பாதிப்புகள் சொல்லும் சேதி!

09:38 PM Dec 02, 2024 IST | admin
பெருமழையும்  பெஞ்சல் புயலால் விளைந்த பாதிப்புகள் சொல்லும் சேதி
Advertisement

திருவண்ணாமலை நிலச்சரிவு மீண்டுமொருமுறை நம்மை அழுத்தமாக எச்சரிக்கிறது. இப்போதுவரை ஏழு உடல்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 4 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரதிர்ச்சியை தருகிறது. எது நடக்காது என்று நினைத்தோமோ அது நடந்திருக்கிறது. எது ஆபத்து இல்லையென நினைத்தோமோ அதுவே ஆபத்தாக வந்து நிற்கிறது. வெயில் நகரமான வேலூரில் கூட வெள்ளம் அள்ளியது. சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியே செத்து பிழைத்தது. இப்போது விழுப்புரம் வேலூர் திருவண்ணாமலை என பார்க்கும் இடமெல்லாம் வெள்ளப் பேரழிவுகள். அழகிய புதுச்சேரியும் மூழ்கிக் கிடக்கிறது. இவை அத்தனை நிகழ்வுகளையும் அலசிப் பார்த்தால் நாம் எத்தகைய அபாயக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர முடியும். ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. பருவநிலை மாற்றத்தால் இனிமேல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பேராபத்துகளோடு தான் இனிமேல் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் நேரும். உலக வெப்பமயமாதலின் எதிரொலி தான் இந்த பெருமழை புயல் சின்னங்கள் எல்லாம்.

Advertisement

முந்தைய காலங்களில் இவ்வளவுப் பெரிய ஆபத்துகள் இருந்ததில்லை. ஆனால் நிலைமை இன்று அப்படியில்லை. ஒரு பருவத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கிறது. மழைக்காலம் பனிக்காலம் கோடைக் காலம் என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்த காலநிலை மாறிக்கிடக்கிறது. இயற்கை பேரழிவுகள் தொடர்ச்சியாக பல்வேறு நிலைகளில் நம்மை அழித்தொழிக்க காத்திருக்கின்றன. ஆனால் இது எல்லாவற்றுக்கும் காரணம் மனிதர்கள் விதைத்த வினைதான்.

Advertisement

சுற்றுச் சூழல் குறித்த அக்கறை யாருக்குமே பெரிதாக இல்லை. ஆளும் அரசுகளுக்கோ அதைப் பற்றியெல்லாம் கவலை இருந்ததில்லை. 2050-க்குள் சென்னையே பல தீவுகளாக இருக்கும் என்றால் அதையெல்லாம் சிரித்துக்கொண்டே கடந்துபோகிறோம். நூறு மீட்டர் கடல் உள்ளே வரும் என்று எச்சரித்தால் கேலி செய்கிறோம். நிலத்தின் தன்மையைப் பொறுத்து கட்டிடங்கள் கட்டித் தொலையுங்கள் என்றால் கேட்பதில்லை. வாகனப் புகை மாசுவை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏசி உள்ளிட்ட நோய்வாங்கும் கருவிகளை குறைவாகவும் பயன்படுத்துவதில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் அபாயமும் எதிர்கால சந்ததிகளின் நிலை என்ன ஆகும் என்பதையுமே நம்மவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

மக்கள் தொகை நெருக்கமான சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை விட்டு துணை நகரங்களை உருவாக்கும் திட்டமும் இல்லை. பணம் இருப்பவன் யார் எப்படி வேண்டுமானாலும் போகட்டுமென பொத்தம் பொதுவாக குருட்டு வாழ்க்கை வாழ்ந்து தொலைக்கின்றான். இல்லாதவன் கிடைத்ததை அனுபவிக்கலாம் என்று ஆள்கிறான். இதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று ஒவ்வொரு மனிதனும் சின்ன சின்னதாக செய்யும் தவறுகள் தான் இயற்கைக்கு எதிரான செயல்களாக உருவெடுத்து ஒட்டுமொத்த பேரையும் அழித்தொழிக்க குறிவைக்கிறது.

உலகம் பலமுறை தன்னை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது. அதாவது ஆழிப்பேரலைகளாலும் பேராபத்துகளாலும் தலைகீழ் மாற்றங்கள் நடந்து மறுபடியும் உலகம் உயிர்பித்த வரலாறுகள் இருக்கின்றன. கடல் இருந்த பகுதி நிலமாகவும் நிலப்பகுதி கடலானதையும் காண்கிறோம்.50 அடி ஆழத்தில் சிலைகள் கிடைக்கின்றன. ஆங்காங்காங்கே கட்டிட எச்சங்கள் கிடைக்கின்றன என்ற செய்தி கிடைக்கும்போதெல்லாம் என்ன நினைப்பீர்கள் ?புதைத்தா வைத்தோம்? இல்லை நிலம் புதையுண்டு இருக்கிறது.இப்படி என்ன தான் எச்சரித்தாலும் சில தற்குறி அரசியல்வாதிகளுக்கு காலநிலை என்றாலும் கவலை இல்லை, சுற்றுச் சூழல் குறித்தும் அக்கறை இல்லை. ஏனெனில் இதெல்லாம் படித்த பண்பட்ட மனிதர்கள் எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி எடுக்க வேண்டிய ஆக்கப் பூர்வமான முன்முடிவுகள். இதையெல்லாம் இவர்கள் புரிந்துகொள்ளவே தனி அறிவு வேண்டும். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.
நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும். பத்திரமாக பிழைத்துக்கிடப்போம்.

நமக்குப் பிறகான சந்ததிகளுக்கு பொருள் சேர்ப்பதைவிட, இந்த இயற்கையை அப்படியே இல்லை என்றாலும் பாதியாவது கொடுத்துவிட்டுச் செல்வோம்...!

நெல்சன் கென்னடி. அ.

Tags :
Advertisement