தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை அகில இந்திய வானொலி 87வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது!-

01:54 PM Jun 16, 2024 IST | admin
Advertisement

ந்த சென்னை வானொலி நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சுகள், இசைக் கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்களின் ஒலிச்சித்திரங்கள், கிரிக்கெட் வர்ணனைகள் போன்றவற்றின் ஒலிப்பதிவு நாடாக்கள் சென்னை வானொலி நிலையத்தின் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பேணப்படுகின்றன. கர்நாடக இசையின் மிகப் பெரும் ஆளுமைகள் எல்லாம் வந்து பாடிய பெருமையைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது சென்னை வானொலி நிலையத்தின் இசைக் கூடம்.

Advertisement

ராஜாஜி, பம்மல் சம்பந்த முதலியார், பெரியார், காமராஜர், சர். சி. பி. ராமசாமி ஐயர், எஸ். சத்தியமூர்த்தி, ருக்மணிதேவி அருண்டேல், சரோஜினி நாயுடு போன்ற தலைவர்களின் குரல்கள் அடங்கிய பதிவுகள்; அனந்தராம தீட்சிதர், கிருபானந்தவாரியார், வாகீச கலாநிதி கி. வா. ஜகநாதன், கி. ஆ. பெ. விசுவநாதம், கீரன் ஆகியோரது மேடைப் பேச்சுக்கள்; கிருபானந்த வாரியார், எம். ஜி. ஆர், கண்ணதாசன், டி. எஸ். பகவதி, சிவாஜி கணேசன், பாரதிதாசன், கொத்தமங்கலம் சுப்பு, பி. எஸ். ராமையா, டி. ஆர். மகாலிங்கம், கவிமணி ஆகியோரது உரைகள் என 10,000க்கும் மேற்பட்ட பதிவுகள் ஆவணக்காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதிவுகளை எண்முறைக்கு (Digital) முறைக்கு மாற்றும் பணி இப்போது நடைபெற்றுவருகிறது.

Advertisement

இந்தியாவில் முதல் பண்பலை சேவை (எஃப்.எம்) தொடங்கப்பட்டது சென்னையில் தான். இந்தியாவில் வானொலி சேவை தொடங்கப்பட்டதன் 50-ஆவது ஆண்டை முன்னிட்டு, 1977-இல் முதல் பண்பலை ஒலிபரப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. முதலில் சென்னை எஃப்.எம். என்றும், 1997-க்குப் பிறகு ரெயின்போ எஃப்.எம். என்றும் இது அழைக்கப்படுகிறது. 1997-இல் நாட்டின் சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு எஃப்.எம். கோல்டு என்ற சேவையும் தொடங்கப்பட்டது. சென்னை-ஏ, சென்னை-பி, எஃப்.எம் ரெயின்போ, எஃப்.எம் கோலட், தென்கிழக்கு ஆசிய சேவை, விவித் பாரதி, டிடிஎச்1, டிடிஎச்2 என எட்டு அலைவரிசைகளில் பல்வேறு விதமான பல்சுவை நிகழ்ச்சிகளைச் சென்னை வானொலி நிலையம் இப்போது ஒலிபரப்பி வருகிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் 24 அக்டோபர் 1941-இல் வந்த அகில இந்திய வானொலிக்கு 15 செப்டம்பர் 1997-ல் பிரசார் பாரதி தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியது.

இந்நிலையில் அகில இந்திய வானொலி சென்னை நிலையம் உருவான சுவையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா?!

முன்னொரு காலத்தில் மெட்ராஸாக இருந்த நகரில் வானொலி ஆர்வலர்கள் சிலர் இணைந்து ‘அமெச்சூர் ரேடியோ கிளப்’ எனப்படும் மெட்ராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப்பை 1924-ல் தொடங்கினர். சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் வைகவுண்ட் கோஷன் இக்குழுவின் புரவலராகச் செயல்பட, எழும்பூர் காசா மேஜர் சாலையில் இப்போது அமைந்திருக்கும் டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் ஒரு கட்டடத்தில் இக்குழுவின் அலுவலம் இயங்கத் தொடங்கியது.

இங்கு ஒருமுறை நிகழ்ந்த கூட்டத்தில் மார்கோனி நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் பேசியதைக் கேட்டார் அப்போது சென்னையின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக இருந்த சி.வி.கிருஷ்ணசாமி செட்டி. சில நாட்களுக்கு முன்புதான் லண்டனிலிருந்து திரும்பியிருந்த கிருஷ்ணசாமி, அங்கிருந்து ஒலிபரப்புக் கருவியின் உதிரி பாகங்கள் சிலவற்றையும் வாங்கி வந்திருந்தார்.

இந்தப் பின்னணியில், 1924 ஜூலை 31ஆம் தேதி ‘மெட்ராஸ் பிரசிடென்சி ரேடியோ' என்ற பெயரில், 8 கி.மீ. தொலைவு செல்லும் 40 வாட் திறனுள்ள ஒலிபரப்பியை அமைத்தார். 2 நாட்களுக்குப் பிறகு எழும்பூர் ஹாலோவேஸ் கார்டன் என்ற இடத்தில் ஒலிபரப்பியின் ஆற்றல் 200 வாட் ஆக உயர்த்தப்பட்டது. இரண்டரை மணிநேரம் தொடர்ந்த ஒலிபரப்பில் இசை, பேச்சு ஒலிபரப்பப்பட்டன. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலையிலும் ஒலிபரப்பினார்கள். 1927 வரை அந்தப் கிளப், ஒலிபரப்பை நடத்திவந்தது. பொருளாதாரப் பிரச்சனையால் மூன்றாண்டுகள் தன் ஒலிபரப்பைத் தொடரவில்லை. எனவே ஒலிபரப்பிகளை சென்னை மாநகராட்சியிடம் கொடுத்துவிட்டது.

மாநகராட்சி அரசிடமிருந்து உரிமம்பெற்று 1930 ஏப்ரல் 1ஆம் தேதி தன் ஒலிபரப்பைத் தொடங்கியது. மாலை 5.30 தொடங்கி இரவு 7.30 வரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பினார்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை வேளைகளில் இசைத்தட்டு நிகழ்ச்சிகளைக் கூடுதலாக ஒலிபரப்பாகியது. மக்கள் இவற்றைக் கேட்பதற்காக மெரினா கடற்கரை, ராபின்சன் பூங்கா, பீபள்ஸ் பூங்கா, உயர் நீதிமன்றம் எதிரிலிருந்த கடற்கரை ஆகிய இடங்களில் 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு ‘நிகழ்ச்சி கேட்பு’ மையங்கள் அமைக்கப்பட்டன. 14 கார்ப்பரேசன் பள்ளிகளுக்குச் சிறிய வானொலிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் ஒலிபரப்பு 1938 ஜூன் 15 வரை நீடித்தது.

நலிவடைந்திருந்த தனியாரின் இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனியை அதன் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் 1932 மே 5 ஆம் தேதி தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. இந்தியாவின் ஒலிபரப்பை விரிவுபடுத்த விரும்பிய அரசாங்கம் பிபிசி-யிலிருந்து லயனல் பீல்டன் என்ற அதிகாரியை வரவழைத்தது. 1935இல் இந்தியாவிற்கு வந்த அவர், முதல் ஒலிபரப்புக் கட்டுப்பாட்டாளராகப் பொறுப்பேற்றார். அவரே ‘அகில இந்திய வானொலி’ என்று பெயர்சூட்டி, அதன் விரிவாக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

அவரும், பிபிசி-யில் இருந்து வந்த கிர்கும் இந்தியா முழுவதும் 1936 மார்ச் மாதம் வரை சுற்றிப் பார்த்து வானொலி நிலையம் தொடங்க நகரங்களைத் தேர்ந்தெடுத்தனர். தென்னிந்தியாவில் ஹைதராபாத், விஜயவாடா, எல்லோரா, ராஜமுந்திரி, மெட்ராஸ், மதுரை, திருச்சி, பெங்களூர் ஆகிய ஊர்களைப் பார்வையிட்டனர். 1936 மே மாதம், அவர்கள் தம் ஆய்வறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தனர். லயனல் பீல்டனின் அறிவுரைப்படி, 1938 ஜூன் மாதம் 16ஆம் தேதி சென்னையில் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. எழும்பூர் மார்ஷல் சாலையில் ‘ஈஸ்ட் நூக்’ என்ற வாடகைக் கட்டடத்தில் அமைந்த சென்னை வானொலி நிலையத்திலிருந்து முதல் அறிவிப்பைத் தெளிவான கனமான குரலில், ஜி.எஸ். விஜயராவ் தமிழில் அறிவித்தார். யு. உமாமகேஸ்வரராவ் தெலுங்கிலும், ஐரோப்பிய இசைக் கலைஞர் எட்வின் அருள் ஆங்கிலத்திலும் அறிவிப்பை வழங்கினர்.

சென்னை வானொலி நிலையம் தொடங்கப்பட்டது ஒரு கோடை காலம் என்பதால் சென்னை மாகாண ஆளுநர் லார்ட் எஸ்கின், அப்போது உதகமண்டலத்தில் முகாமிட்டிருந்தார். விருந்தினர் மாளிகையின் ஓர் அறையிலிருந்து சென்னை வானொலி நிலையத்தைத் தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார். அந்த உரையின் ஒலி தனியாக அமைக்கப்பட்ட தொலைபேசிக் கம்பிகள் வழியாக எழும்பூர் நிலையத்துடன் இணைக்கப்பட்டு ஒலிபரப்புச் செய்யப்பட்டது. “Let me tell you that I am at this moment in a room in Government House, Ootakamund” என்று கூறி ஆளுநர் தொடங்கிவைத்தார்.

சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக அப்போது இருந்த ராஜாஜி, எழும்பூர் வானொலி நிலையத்திலிருந்து முதல் உரையைத் தமிழில் ஆற்றினார். அன்று இசையரங்கில் பாடியவர் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர். இரண்டாம் நாள் எஸ்.ராஜம் இசைக் கச்சேரி செய்தார். அவருக்குப் பக்கவாத்தியமாக கோவிந்தசாமி நாயக்கர் வயலினும், மதராஸ் ஏ.கண்ணன் மிருதங்கமும் வாசித்தனர். லண்டன் பிபிசி-யில் பயிற்சி பெற்றிருந்த, சென்னை புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் பாடற் குழு தலைவரான, மேற்கத்திய இசை நிபுணர் விக்டர் பரஞ்சோதியைச் சென்னை நிலையத்தின் முதல் இயக்குனராக லயனல் ஃபீல்டன் நியமித்தார். எழும்பூரில் இப்போதைய இராஜரத்தினம் விளையாட்டரங்கத்தின் எதிரில் மார்ஷல் தெருவில் ஒரு கட்டிடத்தில் ஒலிபரப்பைத் தொடங்கிய சென்னை வானொலி நிலையம் 16 ஆண்டுக் காலம் அங்குச் செயல்பட்டது. பின்பு, மெரினா கடற்கரையில் இப்போது இருக்கும் சொந்த கட்டடத்திற்கு 1954 ஜூலை 11இல் இடமாறியது.

விக்டர் பரஞ்சோதி இசையமைத்த அகில இந்திய வானொலியின் பிரத்யேக இசையுடனும், பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த வந்தே மாதரம் பாடலுடனும் காலை 5.55 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிகள், இரவு 12 மணிவரை நீளும். ஒவ்வொரு நாளும் இரவு 7.30 முதல் 9 மணி வரை கர்நாடக இசைக் கச்சேரிகள் இடம்பெற்றன. அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், டி.கே.பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.பிருந்தா, முக்தா, என்.சி.வசந்தகோகிலம், டி.கே.ரங்காச்சாரி, வி.வி.சடகோபன் ஆகியோரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்றன. சென்னை வானொலியில் ஒலித்த கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் டி.சௌடையா ஆகியோரின் வயலின் இசை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பு பெற்றவை. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, பி.எஸ்.வீருசாமி பிள்ளை, குழிக்கரை பிச்சையப்பா, இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு, சேக் சின்ன மௌலானா ஆகியோரின் நாதசுவர இசைக் கச்சேரிகள் கேட்கப்படாத காதுகளே அன்றைக்கு இல்லை. டி.ஆர்.மகாலிங்கம், பல்லடம் சஞ்சீவ ராவ், டி.என்.சுவாமிநாத பிள்ளை ஆகியோரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகள் நேயர்கள் செவிக்குள் நுழைந்து நெஞ்சங்களில் ஊடுருவின.

ஆரம்ப காலங்களில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பும் வசதி இருக்கவில்லை. இதனால் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால், அதில் சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட நேரத்தில் நிலையத்துக்கு வந்து பேசவோ, பாடவோ வேண்டியிருந்தது. பின்னர் ஒலிப்பதிவு முறை வந்த பின்னர் பல நிகழ்ச்சிகள் முன்னரே ஒலிப்பதிவு செய்யப்பட்டு குறித்த நேரத்தில் ஒலிபரப்பாகின.

1936-இல் அகில இந்திய வானொலியில் செய்திச் சுருக்கம் ஒலிபரப்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து தேசிய, வெளிநாட்டு சேவைக்குத் தேவை ஏற்பட்டது. அதற்காக, சக்திவாய்ந்த ஒலிபரப்பிகள் அமைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 27 செய்தி அறிக்கைகள் அன்றைய காலகட்டத்தில் ஒலிபரப்பப்பட்டன. 1939 அக்டோபர் முதல் நாள் அகில இந்திய வானொலி டெல்லி நிலையம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, புஸ்ட்டு மொழிகளிலும் செய்தி அறிக்கைகளை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னரே ஆங்கிலம், ஹிந்துஸ்தானி, வங்காளம் ஆகிய மொழிகளில் செய்தி அறிக்கைகள் ஒலிப்பரப்பாகிவந்தன. 1962, 1965 மற்றும் 1971 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற போர்கள், இந்தியா முழுவதும் உள்ள நேயர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தன.

சென்னை வானொலியின் மாநிலச் செய்திப்பிரிவு 1954-இல் தொடங்கப்பட்டது. கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து ஒலிபெருக்கிகள் மூலம் அன்றாடச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டன. களநிலவரங்களை நாட்டின் மூலைமுடுக்குகளுக்குக் கொண்டுசென்ற ஒரே ஊடகமாக வானொலி மட்டுமே அப்போது இருந்தது. அந்தச் சமயத்தில் அகில இந்திய வானொலியைக் கேட்கும் நேயர்கள் கணிசமாக உயர்ந்தனர். செய்திகளை வைத்தே அன்றாடப் பணிகளைக் கணக்கிடும் அளவுக்குத் தமிழ்ச் செய்தி உலகை ஆட்சி செய்தது மாநிலச் செய்திப்பிரிவு. தில்லி வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும் ஆகாசவாணி செய்திகள் பிரபலமாவதற்கு மாநிலச் செய்திப்பிரிவும் ஆரம்பப் பங்காற்றியுள்ளது.

1957-இல் திரை இசையை மையப்படுத்தி விளம்பரதாரர்களைக் கவர்வதற்காக அகில இந்திய வானொலியால் தொடங்கப்பட்டதுதான் ‘விவிதபாரதி’. அதில் ஒலிபரப்பான ‘ஹவா மகால்’, ‘சைய கீத்’, ‘சங்கீத் சரிதா’, ‘சர்கம்’ மற்றும் ‘பர்மைஸ் கீத்’ போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவை. இன்று தொலைக்காட்சி, யூடியூப் தொகுப்பாளர்களுக்கு இருக்கும் ரசிகர்ளைப் போல், அன்று வானொலி அறிவிப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் இருந்தனர்.

சென்னை வானொலியில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. ஒரு அலைவரிசையில் ஒலிபரப்பிக் கொண்டிருந்த சென்னை வானொலி பின்னர் சென்னை-1, சென்னை-2 என இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பத் தொடங்கியது. சென்னை-1 அலைவரிசையில் கூடுதலாகத் தமிழ் மொழியிலும், சென்னை-2 அலைவரிசையில் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. கன்னடம், மலையாளம் ஆகிய ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின.

1947ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடையும்போது 6 வானொலி நிலையங்களும், 18 டிரான்ஸ்மீட்டர்களும் இருந்தன. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவிகித இடத்திற்கு மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்துகொண்டிருந்தது. வெறும் 11 சதவீத மக்கள் மட்டுமே வானொலி ஒலிபரப்பைக் கேட்கும் நிலையில் இருந்தார்கள்.

உலகில் உள்ள பழம்பெரும் வானொலி நிலையங்களில் சென்னை வானொலி நிலையமும் ஒன்று. இது இன்னும் சில ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. கடந்த 1924-ம் ஆண்டு எழும்பூர் ஹாலோவே கார்டனில், மெட்ராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த அமைப்புக்குத் தலைவராக இருந்தவர் சி. வி. கிருஷ்ணசுவாமி செட்டி. 40 வாட் ஒலிபரப்பு திறனுள்ள ஒரு கருவி மூலம் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது. பின்னாளில் இது, 200 வாட் திறனுள்ள ஒரு ஒலிபரப்புக் கருவி மூலம் செயல்படத்தொடங்கியது. பின்வரும் காலங்களில் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக, இந்த அமைப்பு மூடப்பட்டது. மேலும், வானொலி ஒலிபரப்புக் கருவியானது சென்னை மாநகராட்சிக்குக் கொடுக்கப்பட்டது.

1930-ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி வானொலி ஒலிபரப்பு ஆரம்பித்தது. அந்த காலங்களில் வானொலி கேட்பதற்கு பொது இடங்களில் ரேடியோ பொருத்தப்பட்டிருக்கும். அதைக் கேட்க மக்கள் குடியிருப்பார்கள். கடைசியில் இந்த சேவையானது கடந்த 1938-ம் ஆண்டு அனைத்திந்திய வானொலி நிலையத்தால் பொறுப்பேற்கப்பட்டது. எழும்பூர் மார்ஷல் தெருவில் அமைந்திருந்த வானொலி நிலையத்தின் முதல் இயக்குநராக விக்டர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டிருந்தார். சென்னை வானொலி சென்னை ஒன்று மற்றும் சென்னை இரண்டு என்ற இரண்டு அலைவரிசையில் இயக்கப்பட்டது. கடைசியாக 1954-ம் ஆண்டு காமராஜர் சாலைக்கு மாற்றப்பட்டது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
AIRChennaiAll India Radio chennaiRedio chennaiசென்னை வானொலி நிலையம்ரேடியோவானொலி
Advertisement
Next Article