3 முறை உயிர் பிழைத்திருக்கிறேனா? அப்துல் ஹமீது ஹாஸ்யம்!
90களில் பிறந்தவர்களின் மனங்கவர்ந்த பி.எச். அப்துல் ஹமீது உடல்நலக் குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இதுவெறும் வதந்தி என அப்துல் ஹமீதுவே தோன்றி விளக்கமளித்துள்ளார்.
தனித்து ஒலிக்கும் குரல், உச்சரிப்பு, தமிழ்மொழியை அழுத்தம், திருத்தமாக பேசுவதன் மூலம் பிரபலமடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.பல வருடங்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில்... மேடையில் குலுக்கல் முறையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவருக்கு அப்போதே பரிசுகள் வழங்கப்படும்.ஜிவி பிரகாஷை சிறு வயதில் பேட்டி கண்டு.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய பாடலை பாடவைத்து பெருமை இவரை தான் சேரும். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்துல் ஹமீத் உடல்நல குறைவால், காலமானதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவியதையடுத்து நேற்றே அவர் நண்பர்கள் ஹமீதிடம் பேசி உண்மையைச் சொல்லி இருந்தார்கள். இந்நிலையில் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “இலங்கையில் நலமுடன் இருக்கிறேன். இது வெறும் வதந்தி. பலர் என்னை தொடர்புக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்
மேலும் அந்த வீடியோவில், மாண்டவன் மீண்டும் வந்து பேசுகிறானே என சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார்கள்.சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுததை கேட்டு, என்னால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தாளோ என் அன்னை என்று நினைத்துக் கொண்டேன். நேற்று இலங்கை பத்திரிகையில், மரணம் மனிதனுக்கு கிடைத்த வரம் என்கிற கட்டுரையை நான் எழுதி இருந்தேன். அப்படி ஒரு அனுபவம் தான் எனக்கு கிடைத்திருக்கிறது,
செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம். முதல் அனுபவம் 1983-ம் ஆண்டு, இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு எரித்துவிட்டார்கள் என்கிற வதந்தி பரவியது. அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப்பில் ஒருவர் என்னுடைய பெயரை போட்டு நான் இறந்துவிட்டதாக பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை. தற்போது மூன்றாவது முறையும் என்னைப்பற்றிய மரண செய்தி வந்திருக்கிறது. 3 முறை உயிர் பிழைத்திருக்கிறேனா என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது” என அப்துல் ஹமீது பேசி உள்ளார்.