அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் -ஜனவரி 23ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து நம் நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனி ரசிகர் படை உள்ளது. குறிப்பாக 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்திற்கு பிறகு இந்த போட்டிக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர் என்றே சொல்லலாம். அதிலும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுவது சிறப்பு மிக்கது. இதில் உலக நாடுகளே வியக்கும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது அரசே விழாவாக எடுத்து நடத்தி வருகிறது.
இதில் இண்டர்நேஷனல் பேமஸான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர். ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும், இட பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி இருக்கிறது.
கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சுமார் 14 ஏக்கரில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி, . தற்போது கடைசி கட்ட பணிகள் முடிவடைந்து வருகிறது. இந்த மைதானத்தில் 3,700 நபர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மூன்று அடுக்கு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம், அருங்காட்சியகம், பத்திரிகையாளரை, மாடுபிடி வீரர்கள் உடை மற்றும் உணவு வழங்கப்படும் அறை, மாடுகளுக்கான கொட்டகை, மழை நீர் வடிகால், செயற்கை நீரூற்று, ப்புல் தரைகள், அலங்கார செடிகள் என பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் சமயத்தை தவிர மற்ற சமயங்களில் வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
. இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க வரும் மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி உள்ளது. இதனால், தைப்பொங்கலை ஒட்டி, விரைவில் மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகின. இந் நிலையில், மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார். இதனிடையே, அலங்காநல்லூரில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.