அடால்ஃப் ஹிட்லருக்கு ஹேப்பி பர்த் டே!
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர்.
முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த அடால்ஃப் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
அப்பேர்பட்ட ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு இதே ஏப்ரல் 20-ந்தேதிதான் பிறந்தார். இவருடைய அப்பா பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது. அலோய்ஸ் கண்டிப்பான தந்தை. தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிஊர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர்.
பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். அலோய்ஸ் ஹிட்லரையும் அரசுப்பணியில் சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால் ஹிட்லரின் விருப்பமோ ஓவியராக வேண்டும் என்பது. ஹிட்லர் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.
குடிப்பழக்கம் கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயை போதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது. நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார். ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். “அடால்ப்,” என்று பெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிட மாட்டாராம். அலோய்ஸ் ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்.
1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.இதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.
மாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது. பதினெட்டு வயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.பிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயை பிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவே தாயை பிரிந்தார். ஆனால் அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார். அடுத்த வருடமும் ஓவியப் பள்ளியில் சேர முயற்சி செய்தார். ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.
அவமானங்களும் தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது. தாயின் சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்கு வந்து சேர்ந்தது. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம் நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர் எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்து உதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார். ஹிட்லரின் கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது. ஹிட்லர் அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடைதார், இக்காலக்கட்டத்தில் ஹிட்லர் நாடோடியாக திரிந்தார். தெருவோர டீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும் பழக்கம் அப்போதுதான் தோன்றியது. அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான் தான் வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார். இது வரையிலும் அவருக்கு இது வரையிலும் அவருக்கு ஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் யாரிடமும் அவர் பேசாமல் அவர் எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்.
பணம் கரைந்தது. பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார். வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அப்போதுதான். ஓவியராக முடியவில்லை. ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார். 1933-ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் சான்சலர் ஆனார். 1934-ம் ஆண்டு, நாட்டின் தலைவரானார். பலதடவைகள் போலியான வாக்கெடுப்பு நடத்தி, தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று நாட்டுமக்களுக்கும் உலகுக்கும் காட்டியபடி அரசியலில் தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.
ஹிட்லர், படிப்பாளி அல்ல. ஆனால், பட்டறிவு கொண்டவர். வெகுஜன மக்களை வசிகரிக்கும் ரத்தத்தைச் சூடேற்றும் நாவன்மை பெற்ற பேச்சாளர். புழுக்களின் உடலில், புலியின் ரத்தத்தைப் பாய்ச்சிய ரசவாதி!
ஹிட்லர் பேசத் துவங்கி விட்டால்... 'ஜெர்மனி, ஜெர்மானியர்களுக்கே. துரோகம் செய்த யூதர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கவேண்டும்' என்று உறுதி ஏற்றுக் கொண்டு, கும்பல் கும்பலாக யூதர்களைக் கொல்வதற்கு ஜெர்மானிய மருத்துவர்கள் விதவிதமான ஆலோசனை வழங்கினார்கள். புதிது புதிதாகக் கொலைக் கருவிகளை ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துக் கொடுத்தனர். குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்று ஐம்பது லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்து அழித்தார், ரத்தவெறி பிடித்த ஹிட்லர்!
ஹிட்லர் என்ற தனிமனிதனை ஆராய்வது சுவாரசியமானது.
காரணம், ஹிட்லரைச் சுற்றி இப்படி பல சர்ச்சைகள் சூழ்ந்திருப்பதால் தான்.
அதே சமயம் வரலாற்றில் கொஞ்சம் மிகையாகாவே ஹிட்லர் பதிவுசெய்யப் பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
ஹிட்லரின் மீசை முதல் அவரது ஆண்மை வரை எதையும் ஆராய்ச்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை. இதிலிருந்து ஒன்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஹிட்லரை ஒரு சர்ச்சைவாதியாக மட்டும் யாரும் பார்க்கவில்லை, அதையும் தாண்டி அவரிடமிருந்த ஏதோ ஒன்று இவர்களை கவர்ந்திருக்கிறது.
ஹிட்லரின் மனநலனை ஆராய்ந்து தனி புத்தகமாகவே வெளியிட்டனர் பலர். அதில் வால்டர் சார்லஸ் லேங்கர் ( Walter Charles Langer ) என்பவர் முதன்மையானவர். பலவிதமான மனநோய்களால் ஹிட்லர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு பட்டியலே அவர் வெளியிட்டார். Borderline Personality Disorder, Mania, Schizophrenia உள்ளிட்ட நோய்கள் அதில் அடங்கும்.
பல லட்சம் யூத மக்களை கொன்று குவித்த ஹிட்லர், அடிப்படையில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர் என்றும், தாயைப்போல தானும் புற்றுநோயால் இறக்க நேரிடலாம் என்ற பயம் அவரிடம் இருந்தது எனவும் விவரிக்கிறார் வால்டர்.
ஆனால் Parkinsonism எனும் மூளை சம்பந்தபட்ட நோயைத் தவிர, வேறு எந்த மனநோயும் ஹிட்லருக்கு இருந்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இல்லை.
ஹிட்லர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் ஒரு 'சேடிஸ்ட்' என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பு எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் இவை எதுவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடையாது.
ஹிட்லரைப் பற்றிய சர்ச்சைகள் அவர் இறந்த பிறகும் தொடர்ந்தன. அவருடைய மரணத்திலும் பல கேள்விகள் எழுந்தது. ஹிட்லர் உண்மையில் சாகவில்லை, அவர் சோவியத்திடமிருந்து தப்பித்து வேறோரு நாட்டிற்கு சென்று விட்டார் என்று பலர் நம்பினர்.ஹிட்லர் இறந்து கிட்டத்தட்ட 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் உலகில் ஏதோ ஓர் மூலையில், யரோ ஒருவர் ஹிட்லரைப் பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கக்கூடும்.
ஹிட்லரைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன.
தமிழில் எழுத்தாளர் Mugil Siva எழுதிய புத்தகம் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றை ஆராயும் எந்த ஒரு ஆர்வலரும் ஹிட்லரைக் கடக்காமல் போவது சாத்தியம் அல்லாத ஒன்று. ஹிட்லரைப் படித்தாலே போதும், உலகப்போர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு வரலாற்றின் பொக்கிஷம் ஹிட்லர். ஆனால் ஹிட்லரை சுற்றிச் சுழலும் சர்ச்சைகள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை.
ஆக இன்னிக்கும் பலரின் நினைவில் நிற்கிறார் ஹிட்லர் என்றால் அது மிகையல்ல