இஸ்ரோ தலைவரானார் -தமிழ்நாட்டை சேர்ந்த V. நாராயணன்!
இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய ஆய்வு மையத்தின் புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஜனவரி 14, -ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராகப் பணியாற்றுவார்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக ஒரு தலைவர் நியமிக்கப்படவேண்டும் என்பதால் தற்போது, வி. நாராயணன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அவரின் தொழில்நுட்ப திறன்களாலும், பிரமாண்டமான திட்டங்களை கையாண்ட அனுபவம் அவரிடம் உள்ளது. எனவே, இஸ்ரோவின் சிறப்பான வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதால் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒரு தமிழர் இஸ்ரோ தலைவர் ஆவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 2018 - 2022 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக இருந்திருக்கிறார். அவரை தொடர்ந்து அடுத்த தமிழராக இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழகம் மட்டுமின்றி குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் செய்தியாக அமைந்துள்ளது.
யார் இந்த வி. நாராயணன்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் ஆவார். இஸ்ரோவில் 1984இல் என்ட்ரி ஆன இவர், ராக்கேட் மற்றும் விண்கல புரோபல்ஷன் நிபுணர் ஆவார். ASLV, PSLV ராக்கெட்டுகளில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். இந்தியாவில் காம்ப்ளக்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் அமைப்பு உள்ளது. உலகத்திலேயே இந்த அமைப்பு 6 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அதில் ஒன்று இந்தியா. இப்படி ஒரு பெருமையை இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் V. நாராயணன். இந்த அமைப்பின் பிள்ளையார் சுழி முதல் வெற்றி வரை அனைத்து பெருமைகளும் இவரையே சேரும்.
2017-ம் ஆண்டில் இருந்து 2037-ம் ஆண்டு வரை இந்தியாவின் புரோபல்ஷன் எப்படி செயல்பட வேண்டும்...எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்ற ரோட் மேப்பை இறுதி செய்தவர் இவர் தான். தற்போது இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள இவர், இப்போது லிக்விட் புரோபல்ஷன் சிஸ்டம் மையத்தின் இயக்குநராக உள்ளார்.V. நாராயணன் அவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.