மோடி ஆட்சியில் ஊடக சுதந்திரத்தின் லட்சணம்!
‘’காங்கிரஸ் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் தூணாகும். அது எழுத்திலும் செயலிலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்'' --இப்படி சொன்னவர் மோடிதான். உலகப் பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி 2014 மே 3-ம் தேதி வெளியான மோடியின் ட்விட்டர் பதிவு இது!
குஜராத் முதல்வராக மோடி சொன்ன இந்த வாக்கியம் இந்தியாவின் பிரதமரான போது மாறிப் போனது. பத்தாண்டு ஆட்சியில் ஒருமுறை கூட அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பையே பிரதமர் மோடி நடத்தவில்லை. அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி நடத்திய பிரஸ் மீட்டில் திரண்ட பத்திரிகையாளர்களின் போட்டோவை ஒப்பிட்டு, மோடியைப் பலரும் ட்ரோல் செய்தனர். மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்த 2014-ம் ஆண்டு முதலே பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாத பிரதமர் மோடி, தன் அரசை நோக்கிக் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தினார். அதை விடுங்கள். மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் எப்படி இருந்தது என பார்ப்போம்.
2014-ல் மோடி ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக 2017-ல் இந்தியாவின் முன்னணிச் செய்தி ஊடகமான என்டிடிவி அலுவலகங்களிலும் அதன் நிறுவனர்களான பிரணாய் ராய், ராதிகா ராய் வீடுகளிலும் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டது. அதன் பிறகு கடுமையான நெருக்கடிகள் காரணமாக பிரணாய் ராய், ராதிகா ராய் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், என்டிடிவி நிறுவனத்தின் பங்குகள் என்டிடிவி நிறுவனர்களுக்கே தெரியாமல் அதானி வசம் கைமாறின.
கோத்ரா சம்பவத்தின் போது குஜராத் முதல்வராக இருந்த மோடியின் பங்கு குறித்து ’இந்தியா: மோடி கேள்வி' என்ற ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டதும் மோடி அரசு அதிரடியாக தடை செய்தது. டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் மூன்று நாள்கள் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது.
கொரோனாவால் மோடி அரசு செய்த தவறான நிர்வாகத்தையும் அதனால், ஏற்பட்ட மரணங்களையும் ’டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் விரிவான அறிக்கையை வெளியிட்டது. ’டைனிக் பாஸ்கர்’ நிறுவனத்தின் தேசிய ஆசிரியர் ஓம் கௌர் நியூயார்க் டைம்ஸில், ’’கங்கை இறந்தவர்களைத் திருப்பித் தருகிறது. அது பொய் சொல்லவில்லை'’ என்ற தலைப்பில் கொரோனா உயிரிழப்புகள் பற்றி கட்டுரையும் எழுதினார். விளைவு 2021 ஜூலையில் ’டைனிக் பாஸ்கர்’ அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை போட்டார்கள்.
கொரோனா இரண்டாவது அலையின்போது உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசின் தொற்றுநோய் மேலாண்மைச் சீர்கேடுகள் குறித்து கடுமையான கேள்விகளை ’பாரத் சமாச்சார்’ பத்திரிகை எழுப்பியதால், 2021-ல் ’பாரத் சமாச்சார்’ அலுவலகத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.
’நியூஸ் கிளிக்’ நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் 2021 செப்டம்பரில் சோதனை நடத்தினர். ’நியூஸ் கிளிக்’ ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களும் கூட தப்பவில்லை. அவர்களின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகளை ’நியூஸ் கிளிக்’ கவரேஜ் செய்த வீடியோக்கள் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்ததுதான் ரெய்டுக்குக் காரணம்.
போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கொரோனா தொற்று உயிரிழப்பு குறித்தும் செய்தி வெளியிட்டதற்காக ’நியூஸ்லாண்ட்ரி’ நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை போட்டனர்.
2020 அக்டோபரில் ஜம்மு காஷ்மீரின் முன்னணி ஆங்கில நாளிதழான ’கிரேட்டர் காஷ்மீர்’ அலுவலகங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) திடீர் சோதனை நடத்தியது. காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்துசெய்தது உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிட்டதால் ’கிரேட்டர் காஷ்மீர்’ பழிவாங்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம் நொய்டாவில் செயல்பட்டுவரும் ’தி குயின்ட்’ ஊடகத்தின் அலுவலகத்திலும் அதன் நிறுவனர்களான ராகவ் பால், ரிது குமார் ஆகியோரின் வீடுகளிலும் 2018-ல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
2022-ம் ஆண்டு டெல்லி மற்றும் மும்பையில் உள்ள தி வயர் அலுவலகத்திலும், அதன் ஊழியர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மாவை முதன்முதலாகப் பொதுவெளியில் அம்பலப்படுத்திய ‘ஆல்ட் நியூஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், 2018-ம் ஆண்டு அவர் பதிவிட்ட ஒரு ட்வீட்டுக்காக கைது செய்யப்பட்டார்.
2020-ல் உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானை இரண்டு ஆண்டுகள் சிறையில் வைத்தது உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசு.
கௌரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்கி உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்களும் மோடி ஆட்சியில் நடைபெற்றன. ஆனால், கட்டட உள் அலங்கார வேலை செய்து வந்த நபர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது பா.ஜ.க.
அர்னாப் கைது செய்யப்பட்டபோது கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசிய பா.ஜ.க-வினர், அர்னாபின் கைதை தேசிய பிரச்சனையாக கட்டமைத்து அவரின் விடுதலையைக் கொண்டாட்டமாகவும் மாற்றினர். அர்னாப் போன்ற வளர்ப்பு பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக நின்ற மோடி அரசு, எதிர்த்து எழுதிய ஊடகவியலாளர்களை வஞ்சம் தீர்த்தது. பெரும்பான்மையான பத்திரிகையாளர்கள், பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்துடனும் அழுத்தத்துடனும் பணியாற்றினார்கள்.
மோடி ஆட்சி அமைவதற்கு முன்பாக, 2013-ம் ஆண்டு உலக ஊடக சுதந்திரத்தில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, 2022-ம் ஆண்டில் 150-வது இடத்துக்குப் பின்னோக்கிச் சென்றது.