காபி குடித்துக் கொண்டே டான்ஸ் ஆடலாம்! - ராஜூ சுந்தரம் திறந்து வைத்த ‘டான்ஸ் கஃபே’
சென்னையில் புதிதாக ‘டான்ஸ் கஃபே ’ என்ற நடனத்துடன் கூடிய பொழுது போக்கு உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் ஷெரீஃப்பின் எண்ணத்தில் உதயமான இந்த ‘டான்ஸ் கஃபே’ என்ற வித்தியாசமான உணவகத்தை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் திறந்து வைத்தார். வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த உணவகத்தின் திறப்பு விழாவில் திரைப்பட நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், சாண்டி, நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி மற்றும் ஏராளமான நாட்டிய கலைஞர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்திய அளவில் பிரபலமான நடன இயக்குநர் ஷெரீஃப் அவர்களின் புதுமையான எண்ணத்தில் உதயமானது இந்த டான்ஸ் கஃபே. இந்த கஃபேக்கு வருகைத்தரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் உணவு வகைகளை பாரம்பரிய நாட்டியத்துடனும், மேற்கத்திய நடனத்துடனும் இணைந்து வழங்கி அவர்களை முழுமையாக மகிழ்ச்சியடைய வைப்பது தான் இதன் நோக்கம். விருந்தினர்களாக வருபவர்களுக்கு உணவு பரிமாறும் போதே அவர்களுக்கு பிடித்த நாட்டியத்தைப் பற்றி விளக்கமளிப்பதும், அவர்களை நடனமாட தூண்டுவதும் தனிச்சிறப்பு.
நடனமாடிக்கொண்டே சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் தொடங்கப்படவிருக்கும் இது போன்ற டான்ஸ் கஃபே உணவகம், உங்களின் அருகாமையில் இருப்பது அரிது. நடனக்கலைஞர்கள் தினமும் பயிற்சிக்கு பிறகு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, தங்களின் சக்தியை அதிகரிக்க நினைப்பார்கள். அவர்கள் அது போன்ற ஒரிடத்தை தேடுவது இயல்பு. அத்தகைய நடன கலைஞர் களின் எண்ணத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நடன இயக்குநர் ஷெரிஃப், அவர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த டான்ஸ் கஃபேவை வடிவமைத்திருக்கிறார்.
நடன கலைஞர்களுக்காக மட்டுமல்ல. இது அனைவருக்காகவும் திறந்திருக்கும். நாட்டியக் கலைஞர்கள் இங்கு ஒன்று கூடி உலகளவிலான நாட்டியங்களைப் பற்றியும், மேற்கத்திய நடனங்களைப் பற்றியும் விரிவாக விவாதிக்கலாம். தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். நாட்டியம் தொடர்பான கருத்தரங்குகளையும் இங்கு நடத்தலாம். இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அனைத்து உணவு வகைகளுக்கும், நாட்டியத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் அதன் பின்னணி மற்றும் வரலாற்று குறிப்புகளும் உண்டு.
இந்த டான்ஸ் கஃபேவில் நடனமும் உணவும் இரண்டற கலந்திருக்கும். இதுவே தனிச்சிறப்பாகவும் திகழும்.
டான்ஸ் கஃபே அமைவிடம்
ஷெரீஃப் மற்றும் வெங்கட் ராஜ் இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த பிரத்கேய டான்ஸ் கஃபே, சென்னையில் வளசரவாக்கத்தில் மெகா மார்ட் எதிரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. வடபழனி, போருர், ராமாபுரம் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள நடனகலைஞர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் ஒன்று கூடும் இடமாக இது இருக்கும். ஒரு டான்ஸ் ஃப்ளோரும், ஒரு காபி ஷாப்பும் ஒரேயிடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் இனி இங்கு கூடலாம். அவர்கள் தங்களுக்கு பிடித்த காபியை ஆர்டர் செய்துவிட்டு, நடனமாடிக்கொண்டோ அல்லது நாட்டியத்தைப் பற்றி பேசிக்கொண்டோ காபியை சுவைத்து பருகலாம்.
என்னவெல்லாம் இங்கு கிடைக்கும்?
டான்ஸ் கஃபேவில் நீங்கள் ஒரு உணவு வகையை ஆர்டர் செய்யும் போது வித்தியாசமான அனுபவத்தை உணர்வீர்கள். ஏனெனில் நாங்கள் காபியைத் தருவதுடன் அந்த காபியின் பின்னணியில் மறைந்திருக்கும் நடன கலையின் ஆதி வடிவத்தைப் பற்றிய குறிப்புகளையும் இணைத்து தருகிறோம். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். அத்துடன் எங்களுடைய மெனு கார்டில் ஒரு காபியைப் பற்றி குறிப்பிடும் போதே அதனுடைய இணைந்து அறியப்படும் நாட்டிய வகையையும் குறிப்பிட்டிருப்போம். உதாரணத்திற்கு கப்புசீனோ (Cappuccino) என்ற பெயருடன் கப்புசீனோ பாலேட் என்ற நாட்டிய வகைகையும், அந்த நடனத்தின் ஊடாக அந்த காபியையும் தயாரித்து வழங்கவிருப்பதையும் தெரிவிக்கிறோம். அத்துடன் கப்புசீனோ மற்றும் அந்த நாட்டியம் இத்தாலியை பூர்வீகமாகக் கொண்டது என்ற வரலாற்று குறிப்பையும் அளிக்கிறோம்.
இந்த டான்ஸ் கஃபே உலக நாட்டிய கவுன்சில் என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது என்பதும், அனைத்து வகையிலான நடனத்தையும் இங்கு ஆடலாம் என்பதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.