சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளாக இல்லாத மழை வெள்ளம்!
ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம் தான் உலகின் மிகவும் வறண்ட பாலைவனமாக அறியப்படுகிறது. பல கொடிய விஷம் மிகுந்த ஊர்வன உயிரினங்களைக் கொண்டது இப்பாலைவனம். சஹாராவில் மழை வெள்ளம் என்பது அரிதினும் அரிது. அந்த வகையில் அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தகவலுடன், வீடியூ, போட்டோக்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சஹாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவில் உள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, மேற்கு சஹாரா, மொரிட்டானியா, மாலி, நைஜர், சாட், சூடான் உள்ளிட்ட பதினோரு நாடுகளின் பகுதிகளை சஹாரா உள்ளடக்கியிருக்கிறது.சஹாரா ஒரு நாடாக இருந்தால், அது உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கும். பிரேசிலைவிடப் பெரியது, அமெரிக்காவைவிடச் சற்று சிறியது.
சஹாரா பாலைவனம் பூமியில் மிகவும் வெப்பமான இடங்களில் ஒன்று. கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 100.4 °F (38 °C) - 114.8 °F (46 °C) வரை இருக்கும். சில பகுதிகளில் வெப்பநிலை தொடர்ச்சியாகப் பல நாள்களுக்கு அதிகமாக இருக்கும்.சஹாராவின் வெப்பநிலை எந்த ஓர் உயிரினமும் வாழ்வதற்கு கடினமான சூழலாக இருக்கிறது. இது சூடாகவும் வறண்டதாகவும் இருக்கும். பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறையும். சில நேரம் உறைபனிக்குக் கீழே இருக்கும். சஹாராவில் அரிதாகவே மழை பொழியும். சில பகுதிகளில் ஒரு துளி மழையைப் பார்க்க, பல ஆண்டுகள்கூட ஆகும்.
இந்த பாலைவனத்தில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் நிரம்பி இருக்கும் விவரம் வெளியாகி இருக்கிறது.அந்த ஏரியின் பெயர் இரிக்கி. 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. சராசரியாக ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை விட கூடுதலாக ஓரிருநாளில் கொட்டிய கனமழையே இதற்கு காரணம் என்று தெரிகிறது.பாலைவனத்தில் தேங்கிய வெள்ள நீர், ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை ஆச்சரியப்படுத்தி உள்ளன. நாசாவால் எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி காண்போரை கவர்ந்துள்ளன.
இது குறித்து மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் அளித்த ஊடகப் பேட்டியில், “குறைந்த நேரத்தில் இத்தனை பெரிய மழைப்பொழிவு பதிவாகி 30 முதல் 50 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.