மாலியில் தங்க சுரங்கம் சரிந்து விபத்தில் 48 பேர் பலி
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி, ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் மாலியில் 82.2 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. அங்குள்ள தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்று இதனிடையே அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சில சுரங்கங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுவரையில் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது சுரங்கத்தில் 1,800 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சுரங்க விபத்தில் 48 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை காலமாக மாலியில் நிகழும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தப்படும் நிகழ்வு அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில் இந்த சுரங்க விபத்து மேலும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேவை அதிகரித்துள்ளதால் பழைய மற்றும் கைவிடப்பட்டப்பட்ட சுரங்கங்களில் பணிகள் நடைபெற்று வருவதால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.