சிசேரியனில் ஏன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது???
பெரும்பாலான மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் சிசேரியன் அறுவை சிகிச்சையால் குழந்தைப்பேற்றை எதிர்பார்த்திருக்கும் இளம் தாய்மார்கள் அச்சத்தில் இருந்து வரும் சூழல் நிலவுகிறது. சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு தாய்மார்களின் ஆரோக்யம் கேள்விக்குறியாவதுடன், பிறக்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்புடைய பல்வேறு பாதிப்புகள் வருங்காலத்தில் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதையொட்டி ஒரு பக்கம் பொதுமக்களுக்குள் ஒருசாரார், மருத்துவர்கள் பணத்துக்காக சிசேரியன்களை அதிகம் செய்கிறார்கள் என்ற கருத்தைக் கொண்டும், மறுபக்கம் இல்லை இல்லை சம கால கர்ப்பிணித் தாய்மார்கள், பிரசவ வலியைத் தாங்க மாட்டேன் என்கிறார்கள். நல்ல நாள் பார்த்து நல்ல நேரம் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கப்பணிக்கிறார்கள். இதனால் தான் சிசேரியன் கூடுகிறது என்ற கருத்தும் சமூகத்தில் நிலவி வருகிறது. இவை இரண்டுமே முழு உண்மையன்று. மாறாக "உண்மை"யைத் தேடி பயணம் செய்வோம் வாருங்கள்.
சிசேரியன் சிகிச்சையை , ஏதோ ஆபத்தானது என்ற கருத்தைக் கொண்டிருப்பதும் சிசேரியன் செய்த தாய்மார்களை அருவறுப்பாக நோக்குவதும் "தவறான போக்காகும்".மருத்துவ உலகில் குறிப்பாக தாய் சேய் நலத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் சிகிச்சை முறை எனில் அதில் நம்பர் ஒன் "சிசேரியன் சிகிச்சை" தான். இந்த சிகிச்சையை தேவைப் படுபவருக்கு தேவைப்படும் நேரத்தில் அவசர சிகிச்சையாக செய்து தாய் மற்றும் சேயின் உயிரைக் காக்க முடிகிறது. நார்மல் டெலிவரி என்றும் சுகப்பிரசவம் என்றும் "பிறப்புறுப்பு வழியான பிரசவம்" (VAGINAL DELIVERY) பேசப்பட்டு வருகிறது. மனிதர்களைத் தவிர ஏனைய பாலூட்டிகள் அனைத்தும் பிரச்சனையின்றி குட்டிகளை ஈனுவது போலவும் சிசேரியன் என்பது தேவையில்லாத சிகிச்சை என்பது போலவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.மனிதிகளின் உடலமைப்பு என்பது ஏனைய பாலூட்டிகளைப் போல அல்ல. மாறாக பிரசவத்தின் போதும் கர்ப்பத்தின் போதும் . பல இடற்பாடுகள் ( அதில் பல உடல் இயங்குவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களாகவும் இன்னும் பல நோய் நிலையாகவும்) ஏற்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், பாலூட்டிகளில் பூனை, நாய், பசு, யானை, குதிரை , குரங்கு, சிங்கம், புலி என அனைத்து விலங்கினங்களிலும் அவசர சிகிச்சையாக சிசேரியன் செய்யப்படுகிறது.
அடுத்து எதற்காக இந்த சிசேரியன் சிகிச்சை செய்யப்படுகிறது? குழந்தையின் தலை, தோள்பட்டை தாயின் இடுப்பெலும்பைத் தாண்டி வெளியே வர இயலாத நிலை( CEPHALO PELVIC DISPROPORTION) இருப்பின் , குழந்தை பிரசவத்தின் போது தலை கீழாக இல்லாமல் குதம் கீழாக இருப்பது அல்லது பக்கவாட்டில் இருக்கும் போது, (TRANSVERSE LIE), தாயின் நஞ்சுப்பை கர்ப்பப்பையின் கீழ்ப்புறம் இருப்பது இதனை ப்ளாசண்ட்டா ப்ரிவியா ( நஞ்சுப்பை முன்வரும் நிலை) என்போம்.நஞ்சுக்கொடி குழந்தைக்கு முன்னமே வெளியேறி வெளியே வந்து நிற்பது ( UMBILICAL CORD PROLAPSE) ,குழந்தை பிறப்புக்காக முயலும் போது கர்ப்பப்பை கிழிந்து விடுவது( UTERINE RUPTURE) , கர்ப்பப்பைக்குள் இருக்கும் பனிக்குட நீரில் கிருமித் தொற்று ஏற்பட்டு விடுவது ( CHORIO AMNIONITIS) தாய்க்கு மிகக் குறுகலான இடுப்பெலும்பு இருப்பது ( ABNORMAL MATERNAL PELVIS) , கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் விளைவாக வலிப்பு நோய் ( ECLAMPSIA) ஏற்படுவது/ கூடவே கல்லீரல் கோளாறு ஏற்பட்டு ரத்த உறைதல் சிக்கல் அடையும் நிலை (HELLP SYNDROME) , தாயின் கர்ப்பபையில் கட்டி இருப்பது/ அவரின் கருப்பையில் கட்டி இருப்பது ( UTERINE TUMOR OR OVARIAN TUMOR) ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பது குறிப்பாக மூன்று குழந்தைகள் இருப்பது, பிரசவிக்கும் காலம் தாமதமாகிக் கொண்டே செல்வது ( prolonged labour) அடுத்த காரணம் - !
பொதுவாக 37 வாரங்களைக் கடந்த முதல்முறை கருவுற்ற கர்ப்பிணி தனது பனிக்குடம் உடைந்ததில் இருந்து அதிகபட்சம் 28 மணிநேரங்களில் குழந்தையை ஈன்று விடுவார். இதில் இருந்து அவருக்கு தாமதம் ஆக ஆக குழந்தை மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பும் தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே நீண்ட தாமதம் ஆகும் பிரசவத்துக்காகவும் சிசேரியன் செய்யப்படுகிறது. கூடவே சிசுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் நிலை உருவாகும். இதனால் சிசு பனிக்குடத்திற்கு உள்ளேயே மலம் கழித்து அதை உண்ணும் நிலைக்குச் செல்லும் .
இதற்காகவும் சிசேரியன் செய்யப்படுகிறது. (FETAL ASPHYXIA - MECONIUM ASPIRATION SYNDROME), ஆகியன சிசேரியன் சிகிச்சை செய்வதற்கு கட்டாயமான காரணிகள் ஆகும்.
இவையன்றி மேற்சொன்ன காரணங்களுக்காக ஏற்கனவே சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை ஈன்ற பெண்கள் மற்றொரு முறை கருவுறும் போதும் பாதுகாப்புக்காக சிசேரியன் சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. முந்தைய சிசேரியன் செய்யப்பட்டாலும் அடுத்த முறை பிறப்புறுப்பு வழியான பிரசவத்துக்கு முயற்சி செய்யும் மருத்துவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதை VBAC (VAGINAL BIRTH AFTER CAESAREAN) என்று அழைக்கிறோம். எனினும் அவசர அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கும் வசதிகளுடன் மட்டுமே இந்த முறையில் முயற்சி செய்ய வேண்டும்.
இவையன்றி பின்வரும் நோய் நிலைகளை "தீவிர கவனம் செலுத்த வேண்டிய அதிக ரிஸ்க் உள்ள கர்ப்பிணிகள்" என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
1. இதய நோய் உடையவர்கள் ( கர்ப்பிணிகள் அனைவருக்கும் முதல் மூன்று மாதங்களுக்குள் ஒரு எக்கோ பரிசோதனை எடுத்துப் பார்ப்பது நல்லது)
2. ஏற்கனவே சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள்
3. கர்ப்ப கால நீரிழிவு உடையவர்கள்
4. கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள்
5. இரண்டுக்கும் மேற்பட்ட முறை கர்ப்பமாக இருப்பவர்கள்
6. ஹீமோகுளோபின் 9 கிராமுக்கு கீழ் இருப்பவர்கள் .
7. அதீத உடல் பருமன்
8. கர்ப்பிணியின் வயது 30 க்கு மேல்
9. கவனிக்க ஆள் இல்லாத குடும்பத்தாரை விட்டு பிரிந்து வாழும் மேற்சொன்ன நோய்களுடன் உள்ள கர்ப்பிணிகள் - என்று ஹைரிஸ்க் பட்டியல் நீளுகிறது. இவர்களுக்கும் தேவைக்கு ஏற்ப சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பது என்பது தாய் சேய் உயிரைக் காப்பாற்றிக் கூடிய விசயமாக இருக்கிறது.
சமீபத்தில் புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட்டில் "சிசேரியன் சிகிச்சை கிடைப்பதில் இந்திய மாநிலங்களுக்குள் வேறுபாடுகளும் சமமற்ற தன்மையும்" என்ற தலைப்பில் சிறப்பான ஆய்வு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தான் நாட்டிலேயே தெலுங்கானாவுக்கு அடுத்தபடியாக சிசேரியன் செய்வதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. வாங்க அந்த ஆய்வு கூறும் உண்மைகளைப் பார்ப்போம்.அதை உணரும் போது , தமிழ்நாடு ஏன் சிசேரியன் சிகிச்சையில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது தெரிந்து விடும்.
இந்திய நாடு தழுவிய தேதிய குடும்ப நல கணக்கீடு 2019-2021 வரை - நிகழ்ந்த தகவல்களைக் கொண்டு ஆய்வு உருவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் இந்திய திருநாட்டின் சிசேரியன் சராசரி - 21.5%. உலக சுகாதார நிறுவனம் 1985 இல் இருந்து கூறிவரும் விசயம் யாதெனில் சிசேரியன் சிகிச்சை செய்யப்படும் சதவிகிதத்தை 10 முதல் 15% என்ற அளவில் வைத்திருக்க வேண்டும். சிசேரியன் சிகிச்சை 10% என்ற அளவுக்கு மேல் கூடும் போது தாய் சேய் இறப்பு விகிதங்கள் குறைகின்றன என்று ஆய்வுப் பூர்வமாக கூறியிருக்கிறது. 1985 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பில் இப்போதைக்கு கிடைத்திருக்கும் தரவுகளை வைத்துக் கூறுகிறோம். 10-15% க்கு மேல் சிசேரியன் உயர்வதற்கு எந்தத் தேவையும் இல்லை. அதற்கு மேல் உயர்த்தி எந்த பிரயோஜனமும் இல்லை" என்று கூறினர். ஆனால் அந்தக் கூற்று தவறு என்பது இருபது வருடங்கள் கழித்து இந்தியாவில் நிரூபணமானது.
இந்தியாவைப் பொருத்தவரை , 2005 -2006 இல் சிசேரியன் சதவிகிதம் 8.5%. அப்போது இருந்து தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புக்கு 254. அடுத்து 2015-2016 காலத்தில் இந்திய சிசேரியன் விகிதம் - 17.2% . அப்போது தாய் இறப்பு விகிதம் - 122 ஆக மாறியது. அதாவது உலக சுகாதார நிறுவனம் சுட்டிய 15% என்ற அளவைத் தாண்டிய பிறகும் இந்தியாவால் இருமடங்கு அளவுக்கு தாய் இறப்புகளைக் குறைக்க முடிந்தது. தற்போது 2021-2022 இந்தியாவின் சிசேரியன் சராசரி - 23.29 . தற்போதைய தாய் இறப்பு விகிதம் - 103 .இந்த தாய் இறப்பு விகிதம் உலக சுகாதார நிறுவனம் கூறும் நிலையான முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்கான வரையறையான 70 மரணங்கள் என்ற நிலைக்குள் இன்னும் வர இயலவில்லை. இதற்குக் காரணம் சிசேரியன் சிகிச்சை இன்னும் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் பரவலாக்கப்படவில்லை என்பதே ஆகும்.
ஆம்... இனி நாம் காண இருப்பது பொருளாதார வகுப்பு வாரியான; மாநிலங்கள் வாரியான ஏற்றத்தாழ்வுகளை .. வாங்க பார்ப்போம்.
2018-2020 வரை செய்யப்பட்ட SRS SAMPLE REGISTRATION SYSTEM ஆய்வின் படி நாட்டில் கர்ப்ப கால தாய் மரணங்கள் நாட்டிலேயே குறைவாக நிகழும் மாநிலங்கள்
கேரளா - 19
மஹாராஷ்ட்ரா- 33
தெலுங்கானா - 43
ஆந்திரா - 45
தமிழ்நாடு - 54
கர்நாடகா - 69 =இதில் ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அனைவருமே தென்னக இந்திய மாநிலங்கள் சரிங்களா?இங்கெல்லாம் சிசேரியன் சிகிச்சை சதவிகிதம் பார்ப்போம் வாருங்கள்
கேரளா - 38.9%
மஹாராஷ்ட்ரா- 30%
தெலுங்கானா - 60.7%
ஆந்திரா - 42.4%
தமிழ்நாடு - 44.9%
கர்நாடகா - 31.5%
அவர்கள் அனைவரிடத்திலும் சிசேரியன் சதவிகிதங்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன? "பொருளாதார முன்னேற்றம்" தான் முதல் காரணம் என்கிறது ஆய்வு. உலகம் முழுவதுமே ( பங்களாதேஷ், பிரேசில், கானா, நைஜீரியா, இந்தோனேசியா) செய்யப்பட்ட ஆய்வுகளில் ,பொருளாதாரத்தில் மக்கள் உயரும் போதெல்லாம் சிசேரியன் அளவுகள் உயருகின்றன. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் செய்து கொள்வது உயருகிறது. இது இந்தியாவிலும் ஒத்துப் போகிறது.. 75% இந்திய மாநிலங்களில் ஏழைகளிடத்தில் சிசேரியன் சதவிகிதம் 10%க்கும் குறைவாக இருக்கிறது. அதாவது பணக்காரர்களை விட ஏழைகளுக்கு சிசேரியன் சிகிச்சை , ஐந்து மடங்கு குறைவான அளவில் கிடைக்கிறது.
ஏழைகளிடத்தில் சிசேரியன் 7.3% , பணக்காரர்களிடத்தில் சிசேரியன் 39.1%.இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் சிசேரியனுக்கான தேவை இருந்தும் இந்திய அளவில்
ஏழைகளுக்கு அது எளிதில் கிடைப்பதில்லை. பணக்காரர்கள் அந்த சிகிச்சையை எளிதில் அடைந்து கொள்கிறார்கள்.
அசாமில் , ஏழை பணக்காரர்களுக்கு இடையேயான சிசேரியன் நுகர்வு வித்தியாசம் நாட்டிலேயே அதிகம் - 69%. அதுவே கேரளாவில் ஏழை பணக்காரர்கள் இடையேயான சிசேரியன் கிடைக்கும் வித்தியாசம் வெறும் 15.7% மட்டுமே. அடுத்து சிசேரியன் சிகிச்சைகள், அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலேயே அதிகமாக நடந்து வருகின்றன.
மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களில் சிசேரியன் குறைவாக செய்யும் மாநிலங்களை விட இந்த தனியாரில் சிசேரியன் செய்து கொள்ளும் சதவிகிதம் அதிகம். மேலும் கடந்த பத்தாண்டுகளில் அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் செய்யும் சதவிகிதம் 50% உயர்ந்திருக்கிறது. தனியாரில் சிசேரியன் செய்தால் பணத்துக்காக செய்கிறார்கள் என்ற வாதம் பொருந்தும் ஆனால் அரசு மருத்துவமனைகளில் எதற்கு சிசேரியன் சதவிகிதங்கள் அதிகரிக்கின்றன? இதில் பணம் மட்டுமே நோக்கமன்று. மாறாக கர்ப்பிணிகள் அத்தனை ரிஸ்க்குகளோடு பிரசவத்திற்கு வரும் போது மகப்பேறு மருத்துவர் சிக்கலான நேரத்தில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கூடவே நார்மல் டெலிவரிக்கு முயன்று காலதாமதம் ஆகி தாய் சேய் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் உயிருக்கும் உடமைக்கும் சேதம் விளைவிக்கப்படுகிறது. பத்தாயிரம் குழந்தைகளை ஈன்றெடுக்க உதவிய மருத்துவர்களைக் கூட ஒரு தாய் மரணத்திற்காக குற்றம் சாட்டி பழிக்கும் சமூகம் இங்கு இருக்கிறது.
இதன் காரணமாக அச்ச உணர்வுடன் மகப்பேறு மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் ரிஸ்க் எடுக்காமல் சிசேரியன் செய்து தாய் சேய் உயிரையும் தனது உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்வோம் என்றே முடிவு எடுக்கிறார்கள். மக்கள் புறத்தில் இருந்து பணம் படைத்த வசதியானவர்கள் - தங்களது குழந்தை பிறப்பு தேதி மற்றும் நேரத்தைக் கூறி சிசேரியன் செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் நிகழ்வுகளும் அதிகரித்து வருவது உண்மை. வலி தாங்காத கர்ப்பிணிகள் தங்களுக்கு சிசேரியன் செய்து விடும் படி கூறுவதை நானே கேட்டிருக்கிறேன். அனைத்து துறைகளிலும் வெள்ளாடுகள் ( ஒரு மாற்றத்திற்காக கருப்பாடுகளை வெள்ளாடுகளாக மாற்றி உள்ளேன் ) இருக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காக இத்தகைய வேலையை செய்யக்கூடும். ஆனாலும் பெரும்பான்மை மருத்துவர்கள் அப்படி இல்லை. உண்மையிலேயே சிசேரியன் செய்வதற்கான சூழலை அதிகரித்திருப்பது நமது மாநிலத்தின் பொருளாதார நிலையும் படிப்பறிவும் இதனுடன் ஏழை பணக்கார பேதமின்றி சிசேரியன் சிகிச்சை அனைவருக்கும் கிடைப்பதே ஆகும். அதிக சிசேரியன் சதவிகிதம் கொண்டிருக்கும் மாநிலங்களில் சிசேரியன் சிகிச்சை கிடைப்பதில் ஏழை பணக்கார பேதம் மிகக்குறைவாக உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா!
ஆம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏழை பணக்கார பேதமின்றி சிசேரியன் சிகிச்சை இலவசமாக கிடைத்து வருகிறது. எங்கெல்லாம் ஏழைகளுக்கும் சிசேரியன் சிகிச்சை பரவலாக்கப்பட்டு எளிதாகக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அந்த மாநிலத்தின் / அந்த மாவட்டத்தின் சிசேரியன் அளவுகள் அதிகமாக இருப்பதை அறிய முடியும்.
எங்கெல்லாம் சிசேரியன் அளவுகள் குறைவாக இருக்கின்றனவோ அங்கு பணக்காரர்களுக்கு மட்டுமே சிசேரியன் சிகிச்சை எளிதாகக் கிடைக்கிறது. ஏழைகளுக்கு அத்தகைய சிகிச்சை எளிதில் கிடைப்பதில்லை என்பது பொருள்.
தமிழ்நாட்டில் சிசேரியன் அளவுகள் அதிகரித்திருப்பதன் காரணமாக ஆய்வு குறிப்பிடுவது
- சிறப்பான பொது சுகாதாரத்துறை
மற்றும் தாய் சேய் நல கவனிப்பு
- மேம்பட்ட கல்வியறிவு
- மேம்பட்ட பொருளாதார நிலை.
- எம்ஆர்எம்பிஎஸ் போன்ற மகப்பேறு உதவித்திட்டங்கள்
-ஆகியன பணக்கார ஏழை பாகுபாடின்றி இருசாராருக்கும் சிசேரியன் சிகிச்சை பொதுவாக்கியிருக்கிறது.
பெரும்பான்மையினரான ஏழைகளின் நுகர்வு அதிகரிக்கும் போது தானாகவே சிசேரியன் சதவிகிதங்களும் அதிகரித்துள்ளன. இன்னும் அந்த ஆய்வு சாட்டியுள்ள விஷயங்களைக் கவனிக்க
- எங்கெல்லாம் சிசேரியன் அளவுகள் குறைவாகவும் , சிசேரியன் நுகர்வில் ஏழை பணக்கார பேதம் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் சிசேரியனுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஏழை மக்களிடையே தேவை அதிகமாக இருக்கிறது. காரணம் அவர்களிடம் தனியாருக்கு செல்ல பணம் இல்லை. என்பதால் அரசாங்கத்தை நம்பி இருக்கிறார்கள்.
அதிக டிமாண்ட். குறைவான சப்ளை இருக்கிறது என்று பொருள் எங்கெல்லாம் சிசேரியன் அளவுகள் அதிகமாகவும் அதே சமயம் சிசேரியன் நுகர்வில் ஏழை பணக்கார பேதம் குறைவாக இருக்கிறதோஉதாரணம் - தமிழ்நாடு தெலுங்கானா , அங்கெல்லாம் சிசேரியன் செய்யும் வசதி வாய்ப்புகள் நல்ல நிலையில் முன்னேறியுள்ளது என்று அர்த்தம். பாகுபாடின்றி
மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்று அர்த்தம். மேலும் சமூகத்தின் பெரும்பான்மையினரான விளிம்பு நிலை மக்களுக்கும் இத்தகைய சேவைகள் இலவசமாக கிடைக்கின்றன என்று அர்த்தம் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
சிசேரியன் விசயத்தில் நம் மாநிலம் அதிகமாக இருப்பதற்கு காரணம் இப்போது புரிந்திருக்குமே...!?தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை பரவலாக்கமும் அதன் மூலம் மக்களுக்கு எளிதான முறையில் அவர்கள் அருகிலேயே சிசேரியன் சிகிச்சை கிடைக்கச் செய்ததும் இந்த சேவைகள் ஏழை பணக்கார பேதமின்றிக் கிடைப்பதும் தான் முதற்காரணங்கள்.இந்த ஆய்வில்
சிசேரியன் அளவுகளைக் குறைப்பதற்கு மருத்துவர் மீது பழிசுமத்தாமல் செய்யப்படும் அறிவுரை சார்ந்த வழிப்படுத்தும் ஆய்வுகள் ,சிசேரியன் செய்வதற்கு முன்பு மகப்பேறு மருத்துவர் இன்னொரு மூத்த மருத்துவரிடம் இரண்டாவது ஒபினியன் வாங்குவது அவ்வப்போது மருத்துவமனை அளவில் சிசேரியன் சிகிச்சை குறித்த ஆய்வுகள் ராப்சன் வகைப்படுத்துதல் எனப்படும் கர்ப்பிணியின் தன்மைகளை வைத்து வகைப்படுத்தும் முறை கொண்டு சிசேரியன் அளவுகளை குறைக்க முயற்சித்தல் போன்றவற்றை முயற்சிக்கலாம் என்று கூறினாலும்
ஒரு கர்ப்பிணித் தாய்க்கு சிகிச்சை அளிக்கும் மகப்பேறு மருத்துவரே அந்த தாய் மற்றும் சேய் இருவரின் உயிருக்கு பொறுப்பாகி இருக்கும் சூழலில் அந்த கர்ப்பிணியின் நிலை, அவரது நோய் வரலாறு, சிசுவின் நிலை ஆகியவை எந்நேரமும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை என்பதால் தாய் சேய் உயிரைக் காக்கும் பொறுப்பு மகப்பேறு மருத்துவரை முழுவதுமாகச் சார்ந்தது. அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் அந்நியத் தலையீடுகள் இருப்பது ஆபத்தானது.
ஒருவேளை சிசேரியன் செய்வதைக் குறைக்கலாம் அல்லது தள்ளிப்போடலாம் என்று முடிவு செய்து அதனால் தாய்க்கோ சேய்க்கோ பாரதூரமான விளைவுகள் நேர்ந்தால் அதற்கும் மகப்பேறு மருத்துவர் தான் குற்றவாளி ஆக்கப்படுகிறார். நான் இங்கே உரைப்பது தான் உண்மை... !எனினும் ஒவ்வொரு மகப்பேறு மருத்துவரும் தனது சிறப்பான அறிவாலும் அனுபவத்தாலும் தன்னை நம்பி வரும் கர்ப்பிணியை பிறப்புறுப்பு வழியான பிரசவத்திற்கே முழு முயற்சி செய்கிறார். ஆனாலும் நான் கூறிய பல இடற்பாடுகளால் சிசேரியன் சிகிச்சைக்கான தேவை ஏற்படுகிறது.இதை நாம் உணர வேண்டும். இப்பொழுதும் ,எப்பொழுதும் சிசேரியன் என்பது உயிர்காக்கும் சிகிச்சையே . அதன் பலன் உணர்ந்தோர்
அதை தவறாக சித்தரிக்க மாட்டார்கள். சிசேரியன் என்பது அருவருக்கத்தக்க ஒன்றன்று.சிசேரியன் செய்து கொண்ட உங்கள் வீட்டுப் பெண்களிடம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டுமேயன்றி அருவருக்கக் கூடாது. மீண்டும் கூறுகிறேன் -சிசேரியன் ,எனது மற்றும் எனது தாயின் உயிரையும் காத்த சிகிச்சை... !எண்ணற்ற தாய்மார்களையும்
குழந்தைகளையும் ,காக்கும் சிகிச்சை !
கட்டுரைக்காக படித்தவை
1.https://www.thelancet.com/.../PIIS2772-3682(24.../fulltext
2.https://www.nature.com/articles/s41598-024-65009-0
3.Betran, A.P. ∙ Torloni, M.R. ∙ Zhang, J.J. ∙ et al.
WHO working group on caesarean section. WHO statement on caesarean section rates
BJOG. 2016; 123:667-670
4. Special bulletin on MATERNAL mortality rate In India 2018-2020
நன்றி