For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கணிதத்தின் பெருமையை நினைவூட்டும் ’தேசிய கணித தினம்’

04:52 AM Dec 22, 2024 IST | admin
கணிதத்தின் பெருமையை நினைவூட்டும் ’தேசிய கணித தினம்’
Advertisement

`கணிதமேதை' என அழைக்கப்பட்ட சீனிவாச ராமானுஜம் குழந்தைப் பருவத்திகேயே யாருடைய உதவியும் இன்றி ஆச்சர்யமூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான உண்மைகளைக் கண்டு உணர்ந்தார். 1914 முதல் 1918-ம் ஆண்டு வரை 3,000-க்கும் அதிகமான புதிய கணிதத்தேற்றங்களைக் கண்டறிந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும் செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ்ந்த உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின் தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்ட அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் ஆரியப்பட்டாவுக்குப் பின், 16-ம் நூற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின் தங்கியது. ராமானுஜத்தின் மூலம் 20-ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. இதைக் கவனத்தில் கொண்டு கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ராமானுஜரின் 125 வது பிறந்த ஆண்டை, `தேசிய கணித ஆண்டா'கவும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 22-ம் தேதியைத் `தேசிய கணித தின'மாகவும் அறிவித்தார். அதையடுத்து தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

உலகிற்கு சூன்யம் என்ற ஜீரோவை அறிமுகப் படுத்தியவர்களே நம் இந்திய கணித வல்லுநர்கள் என்பது பெருமிதப்படத்தக்க செய்திதானே? உலகின் தலை சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் “நாம் இந்தியர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள், எனென்றால் அவர்கள் நமக்கு எண்ணுவதற்கு கற்றுக் கொடுத்தவர்கள். இது இல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்பு சாத்தியமாகியிருக்காது” என்றார். நம்முடைய முன்னோர்கள் கணிதத்திற்கும், இலக் கணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒளவையாரின் ஆத்திச்சூடி “எண் எழுத்து இகழேல்” என்று அறிவுரை கூறுகிறது. தெய்வப் புலவரின் திருக்குறள், “ எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று கணிதமும், இலக்கணமும் மனிதனுக்கு கண் போன்றவை என்று பறை சாற்றுகிறது.

Advertisement

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் இவை நான்கும் தான் கணிதத்தின் அடிப்படைத் தத்துவங்கள். நல்ல பழக்க வழக்கங்களை அதிகரித்துக் கொள்ள கூட்டல் தத்துவமும், தீங்கு விளைவிக்கும் கெட்ட செயல்களைத் தவிர்க்க கழித்தல் தத்துவமும், நியாயமான முறையில் பணத்தைப் பன்மடங்கு சம்பாதிக்க பெருக்கல் தத்துவமும், காலத்திற்கு ஏற்றது போல் நேரத்தை திட்டமிட, வகுத்தல் தத்துவமும் பயன்படுகிறது. இந்த நான்கு கணிதத் தத்துவங்களை நம் வாழ்க்கைப் பாடத்தில் முறையாகப் பயன்படுத்தினால், துன்பம் என்று ஒன்று வருவதையே முற்றிலுமாக தவிர்த்து விடலாம். மேலும் எந்நிலையிலும் வாழ்வை சமநிலையோடு வாழப் பழகினால், எந்நாளும் உங்களுக்கு தித்திக்கும் நன்னாளாக அமையும்.

ஆம் நம் அன்றாட வாழ்விலும், அறிவைச் சார்ந்த அனைத்து இடங்களிலும் கணிதத்தின் பயன்பாடு மிக முக்கியப் பங்காற்றுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக திகழ்வதும் கணிதம் தான். கணிதம் விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல. சாதாரண மனிதர்களுக்கும் உதவக் கூடியது. அன்றாட வாழ்விலும், நாம் செய்யும் வேலையிலும் நமக்கே அரியாமல் கணிதத்தின் பயன்பாடு முக்கியப் பங்காற்றி வருகிறது.கொடுக்கல் வாங்கலில் தொடங்கி வியாபாரம், பயணச்சீட்டு, வங்கிப் பயன்பாடு மற்றும் நமது அன்றாடத் தேவைகள் என அனைத்திலும் கணிதம் இடம் பெற்றிருக்கிறது. அனைவருக்கும் பொதுவான ஒரு மொழி தான் கணிதம். தினந்தோறும் நம்முடைய ஒவ்வொரு நகர்விலும் கணிதமானது நம்மையே அறியாமல் பயன்பட்டு வருவதை எவராலும் மறுக்க இயலாது.

இன்ஜினியரிங் எனப்படும் பொறியியல், அறிவியல், மருத்துவம், சமூக அறிவியல் மற்றும் நிதியியல் போன்ற உலகின் பல முக்கியத் துறைகளில் துருப்புச் சீட்டாக கணிதம் பயன்படுகிறது. பயன்பாட்டுக் கணிதம், அவ்வப்போது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தூண்டவும், அவற்றை முறையாகப் பயன்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் கணிதத்தை புரிந்து கொள்வதில் சிரமப்பட்டால், மற்ற அறிவியல் நுணுக்கங்கள் மற்றும் விஞ்ஞானங்களைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். படிக்கும் பருவத்திலேயே மற்ற பாடங்களைப் போலவே, கணிதப் பாடத்தையும் பரிந்து படித்தால் அது மிக எளிதாக இருக்கும். சிறுவயதில் இருந்தே கணிதத்தைக் கற்பதும், கற்பிப்பதும் நமது முக்கிய கடமையில் ஒன்றாக இருக்க வேண்டும்.

அப்படித்தான் இருபதாவது நூற்றாண்டில் எண் கணிதத்தில் அளப்பரிய சேவை செய்த கணித மேதை இராமானுஜன் நினைத்தார். நம்பினார்.1887 டிசம்பர் 22 அன்று ஈரோட்டில் பிறந்தவர்தான் சீனிவாச ராமானுஜன். நிதி உதவி பெற்று கும்பகோணம் உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். அப்போதே கணித இணைப்பாடு (ஃபார்முலா) பலவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவித்து ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தினார்.இதனால் அப்போதே இவரை பலர் கணித மேதையாக கருதத் தொடங்கினார். தொடர்ந்து கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை பச்சையப்பா கல்லூரியில் படித்தார். கணக்கு பாடத்தில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தார். படிப்பை முடித்த பின் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கணித தேற்றங்களை எழுதி கலக்கினார். ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது.

1909-ல் திருமணமானது. மனைவி ஜானகியின் அறிவுறுத்தலின் பேரில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார் ராமானுஜன். வேலை பார்த்துக்கொண்டே இவர் ஆற்றிய கணிதப் பணிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற ராமனுஜன், உதவித்தொகையின் மூலம் டிரினிடாட் கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார். சில காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பி அவர் 1920-ல் மறைந்தார்.

33 வயதில் மரணத்தைத் தழுவியபோதும் அவருடைய புகழ் உலகச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ராமானுஜரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22ம் தேதியை தேசிய கணித தினமாகவும் அரசு அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் 22ம் தேதி கணித தினம் கொண்டாடப்படுகிறது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement