For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை!

07:33 PM Aug 07, 2024 IST | admin
தங்கம் தென்னரசு  கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சொத்து குவிப்பு  வழக்கு மீண்டும் விசாரணை
Advertisement

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை ஜகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் தினந்தோறும் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுமுள்ளது.

Advertisement

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு உத்தரவிட்டது.

Advertisement

அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து 2023 ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை ஜகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து இரு அமைச்சர்களையும் விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும், இருவர் மீதான வழக்குகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேல் விசாரணை நடத்தி, வழக்கை முடித்து வைத்து தாக்கல் செய்த அறிக்கையை கூடுதல் இறுதி அறிக்கையாக கருத வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகக் கூறிய நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இரு அமைச்சர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கின் விசாரணைக்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், செப்டம்பர் 11ம் தேதி ஆஜராகும்படி தங்கம் தென்னரசு உள்ளிட்டோருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.2011ம் ஆண்டைய வழக்கு என்பதால் விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி, விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement