For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சவக் குழிகளாகும் சமூகவலைத்தளங்கள்!

01:37 PM May 23, 2024 IST | admin
சவக் குழிகளாகும் சமூகவலைத்தளங்கள்
Advertisement

சென்ற மாதம் ஆந்திராவையே உலுக்கிய “கீதாஞ்சலி விவகாரம்” சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆந்திராவில் ஆளும் ஜெகன் அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக வீட்டுமனைகள் வழங்கிக்கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுமனை பெற்றவர்களில் ஒருவர்தான் இளம்பெண்ணான கீதாஞ்சலி. வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டு வீட்டுக்கான சான்றிதழ்களைப் பெறுகிறார். சொந்தமாக ஒரு காணி நிலம் கூட இல்லாத கீதாஞ்சலிக்கு சொந்தமாக வீடு கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி. உள்ளூர் தொலைகாட்சி ஒன்றில் உற்சாகம் பொங்க முதல்வர் ஜெகனுக்கு நன்றி சொல்லிப் பேசுகிறார் கீதாஞ்சலி. ‘’ஜெகன் அண்ணாவால் என் வயசான அப்பாவுக்கு முதியோர் பென்ஷன் வருது எனக்கு வீடு கிடைச்சிருக்கு, இதற்காக நான் ஒரு ரூபாய் கூட செலவுபண்ணலை, இனி எப்பவும் அவருக்குதான் என் ஓட்டு’’ என்று அந்த வீடியோவில் பேசுகிறார். அவருடைய தோற்றமும் அவருடைய கள்ளங்கபடமில்லாத பேச்சும் வீடியோவை பரபரவென வைரல் ஆக்குகிறது. தேர்தலுக்கான கனல் கட்சிகளிடையே கொதிக்கத்தொடங்கி நேரம். அந்தப்பெண்ணின் வீடியோ விறுவிறுவென இணையமெங்கும் பரவியது. அது ஆளுங்கட்சியின் சாதனைகளில் ஒன்றென ஜெகனே தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்கிறார். அங்கிருந்துதான் வினை தொடங்கியது.

Advertisement

முதலில் ஆளுங்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து கீதாஞ்சலியின் வீடியோவை தொடர்ந்து ஷேர் பண்ணுகிறார்கள். எதிர்கட்சி ஆட்கள் சும்மா இருப்பார்களா… அவர்கள் களமிறங்கி கீதாஞ்சலியை ட்ரால் பண்ணத்தொடங்குகிறார்கள். முதலில் ஒருசிலரால் தொடங்கப்பட்ட இந்த தாக்குதல், அடுத்த சிலமணிநேரங்களில் மிகமிக மோசமாக மாறத்தொடங்கியது. கீதாஞ்சலி மோசமான வழியில் வீட்டை பெற்றார், அவருடைய குழந்தை அப்பெண்ணின் கணவருக்கு பிறந்ததே இல்லை என்று தொடங்கி அருவருக்கத்தக்க வகையில் அத்தனை மோசமாக அந்தப்பெண்ணை திட்டியும் அவமதித்தும் அவதூறாகவும் கமென்ட்கள் பண்ணத்தொடங்கினர். அவருடைய சமூக வலைதளப்பக்கங்களில் தாக்குதல் தொடங்கியது. மீம்கள் குவியத்தொடங்கின. இந்த விமர்சனங்களைக் கண்டு கீதாஞ்சலியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ‘இதில் தன்னுடைய தவறு என்ன’ என்பதுதான் அவருகிருந்து ஒரே குழப்பம். இந்த தாக்குதல்கள் தந்த மன அழுத்தங்களால் தூக்கமின்றி எந்த வேலையும் செய்யமுடியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறார். கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். இரண்டு சிறு குழந்தைகளை வைத்திருப்பவர் கீதாங்கஞ்சலி. அந்த குழந்தைகளை கூட விட்டுவைக்காமல் இன்ஸ்டாகிராமிலும் யூடியூபிலும் ஏராளமான வீடியோக்கள் போட்டிருக்கிறார்கள். அதைப்பற்றி அக்கம்பக்கத்தினர் பேசத்தொடங்கியுள்ளனர்.

Advertisement

கீதாஞ்சலிக்கு மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கீதாஞ்சலியின் கணவர் இணையத்தை பார்க்காதே என்று போனை பிடுங்கிவைத்துவிடுகிறார். ஆனாலும் போனை எடுத்துக்கொண்டு இரவெல்லாம் தூங்காமல் தன்னை திட்டிப்போடப்படும் கமென்ட்டுகளை பார்த்து பார்த்து குமைந்து அழுதிருக்கிறார். இப்படி செய்வது தெலுங்குதேசம் கட்சியின் ஆட்கள் என்று ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தது. இரு தரப்புக்கும் இடையே இணைய சண்டை நடக்க நடக்க இந்த அரசியல் ஆட்டத்தில் காரணமே இல்லாமல் சிக்கிக்கொண்ட கீதாஞ்சலி மீதான அவதூறுகள் அதிகமாகி இருக்கின்றன. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத கீதாஞ்சலி அருகில் இருக்கிற தண்டவாளத்தில் ஏறி ஓடும் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டார். அதற்குபிறகு இணையத்தில் கீதாஞ்சலி பற்றி அவதூறு பரப்பிய 13பேரை காவல்துறை கைது செய்தது. இன்று கீதாஞ்சலியின் குழந்தைகளுக்கு அம்மா இல்லை. காரணம் இணைய கும்பல்தாக்குதல்கள். தறிகெட்ட விமர்சனங்கள். கருணையற்ற மனிதர்களின் சொற்கள்.

இதுபோலவே உஜ்ஜயினியை சேர்ந்த பிரியான்ஷூ என்கிற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். இவன் இன்ஸ்டாவில் பல்வேறு வேடமிட்டு நடனமாடுகிற திறமைசாலி. 15ஆயிரம் பாலோயர்களை வைத்திருந்திருக்கிறான். கடந்த 2023 நவம்பரில் பெண் போல வேடமிட்டு நடனமாடி வீடியோ போடுகிறான். அது வைரல் ஆகிறது. கூடவே அவனைப்பற்றி ஹோமோபோபிக்கான வசைகளும் எழத்தொடங்குகின்றன. அந்தப்பையனை ஊரே திரண்டு கிண்டல் கேலியும் அவதூறும் சொல்ல, அவனால் சமூகத்தை எதிர்கொள்ள இயலாமல் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டிருக்கிறான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலும் இதே பாணியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பால்கனியில் தவறிவிழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் அம்மா ஒருவர் ‘தன் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை’ என்று தொடர்ச்சியாக எழுந்த ஆன்லைன் வசைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்திருக்கிறார். சமூக வலைதளங்கள் தோன்றிய காலந்தொட்டே ஆன்லைன் திட்டல்கள், அவதூறுகள், தாக்குதல்கள் எல்லா காலத்திலும்தான் பரப்பப்படுகின்றன. ஆனால் உயிரையே மாய்த்துக் கொள்கிற அளவுக்கு முற்றிப்போயிருப்பதை இப்போதுதான் பார்க்கிறோம். கும்பல் கும்பலாக லட்சக்கணக்கில் இணையத்தில் வசவாளர்கள் பெருகி விட்டனர். தங்களுடைய ஆழ்மன வக்கிரங்களை எல்லாம் அன்றாடம் யார்மீதாவது கொட்டி தீர்த்துக்கொள்கின்றனர். நம்மையும் கூட சமூகவலைதளங்கள் பிறருடைய பாராட்டுதல்களுக்கும் வேலிடேஷனுக்கும் ஏங்குகிறவர்களாக மாற்றிவிட்டன. அதனாலேயே சின்ன திட்டுகளையும் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

இப்போதெல்லாம் ஒரு ஆள் சிக்கினால் அடுத்த நிமிடம் புற்றீசல் போல ஆயிரக்கணக்கில்தான் வசைகள் வந்து குவியத்தொடங்கிவிடுகின்றன. அந்த செய்தி உண்மையா என்பதெல்லாம் பிறகுதான். முதலில் தீர்ப்பை எழுதிவிட்டுத்தான் அடுத்த விசாரணை. இவர்களுக்கெல்லாம் வேலைவெட்டி இருக்காதா, எங்கிருந்துதான் வருகிறார்கள் என்கிற குழப்பம் வருகிற அளவுக்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கும்பல் கும்பலாக அறுவறுக்கத்தக்க வகையில் வன்மத்தோடு திட்டத்தொடங்குகிறார்கள். இந்த கும்பல்களிடம் சிக்கினால் நம்முடைய ஆன்மாவையே சிதைத்துவிடுவார்கள். இளகிய மனம் கொண்டவர்கள் எப்படி சமாளிப்பார்கள். இணையம் பற்றியும் அதன் வசைவரலாறு பற்றிய புரிதல் உள்ளவர்கள் இதை ஓரளவு சமாளிக்கலாம். கடந்து செல்ல முடியும். இப்போதுதான் வாழ்வையே தொடங்குகிற இளம் மனம் இதை எளிதில் கடந்துவிடமுடியாது.

உங்களைப்பற்றி எவனோ ஒருவன் போகிற போக்கில் பரப்பிவிட்டுப்போகிற ஒரு அவதூறுக்கு உண்மை வெளியாகும்வரை வசைகளை வாங்கவேண்டியிருக்கும். உண்மையை நிரூபித்துவிடுவீர்கள், ஆனாலும் நீங்கள் உங்கள் மீது குற்றமில்லை என்பது தெரிந்தும் நமுட்டு சிரிப்போடு அதையே சொல்லி திட்டுவார்கள். அது இன்னும் அதிக வலியைத்தரக்கூடியது இல்லையா! இந்த அவதூறாளர்கள் விட்டுச்செல்லும் பொய்க்கதைகள் காலத்திற்கும் இங்குதான் நித்தியமாக இருக்கும். இந்த வதந்திகளின் வசைகளின் தாக்கம் இணையத்தோடு நின்றுபோவதில்லை. அது வெளியேயும் மெய்நிகர் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியவையாக இருக்கின்றன.

காரமடை பெண்ணுக்கு நிகழ்ந்தது அதுதான். இணைய கேலிகள் பரிகசிப்புகள் நேரிலும் விழத்தொடங்கி இருக்கிறது. பிரியான்ஷூ பள்ளியில் கிண்டல் கேலிகளை எதிர் கொண்டிருக்கிறான். கீதாஞ்சலியால் சுற்றாத்தாரை எதிர்கொள்ள முடியவில்லை. நம் எல்லோர் மீதும் அத்தகைய களங்கத்தை எளிதில் கற்பித்துவிட்டு நகர்ந்து விடமுடியும்! ஆனால் காலத்திற்கும் நாம்தான் உட்கார்ந்து ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்! எத்தனை பேருக்கு சொல்வது… என் மீது தவறில்லை என்று! ‘காரணமில்லாம இப்படி சொல்லுவாய்ங்களா..’ என்று மெல்லுவதற்கு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிற சமூகமாக மாறிவிட்டோம். எப்படி சாதாரண மனிதர்களால் இவ்வளவு தைரியமாக அவதூறு பரப்பி வசைபொழிந்து கும்பல் தாக்குதல் செய்ய முடிகிறது? சட்டம் காவல் பற்றியெல்லாம் அச்சம் வராதா…?!

இணையத்தில் மட்டுமல்ல மெய்நிகர் உலகிலும் அப்படித்தான். கும்பலாக தாக்கும்போது மனிதர்களுக்கு ஓர் அசட்டு தைரியம் வந்துவிடுகிறது. ஆயிரம் பேர் அடிக்கும் போது இரண்டு மிதி மிதித்தால் யாருக்கு தெரியப்போகிறது என்கிற தைரியம். ஆயிரக்கணக்கில் அவதூறு கருத்துகள் கிளம்பும்போது நாளை நாம் சட்டத்தின் பிடியில் சிக்கப்போவதில்லை என்கிற எண்ணம் ஒன்று. ஆயிரம் கமென்ட்கள் வருகிறது, ஆயிரம் பேரையும் எப்படி கைது செய்யமுடியும் என்கிற திமிர் இரண்டு! அது சட்டத்திற்கும் சாத்தியமற்றது. காரமடை பெண்ணின் மரணத்திற்கு யாரை கைது செய்ய முடியும். இந்த தைரியம் தருகிற உற்சாக போதையே இவர்களை இயக்குகிறது. இன்னொரு பக்கம் இணையம் தருகிற முகமற்ற அனானிமஸ் தன்மை. நம் அடையாளங்களை மறைத்துக்கொண்டு போலிப்பெயர்களில் செயல்பட முடியும் என்கிற சுதந்திரம். இந்த இரண்டும் மனிதர்களிடம் எப்போதும் நிலைத்திருக்கிற வக்கிரமான பக்கங்களுக்கு எல்லாம் தீனிப்போடக்கூடியவையாக மாறிவிடுகின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்த அதீத கும்பல் தாக்குதல்களுக்கு ஆணிவேராக இருக்கிறது.
***
இன்று இணையத்தில் இரண்டு வகையான கும்பல் தாக்குதல்கள் நிகழுகின்றன. ஒன்று fanaticism வகை. கிரிக்கெட் வீர்ர்களுடைய ரசிகர்களாக இருப்பது, நடிகர்களின் கலைஞர்களின் ரசிகர்களாக இருப்பது அல்லது மதம் சாதிகளுக்கு கட்சிகளுக்கு விசுவாசிகளாக இருப்பது என இணையத்தில் இன்று இந்த ரசிகமனோபாவம் சார்ந்த நூற்றுக்கணக்கான குழுக்கள் இயங்குகின்றன. இதில் ஒருவரே நாலைந்து குழுக்களில் இருப்பார். இந்த சைக்கோ குழுக்கள் கும்பல் தாக்குதல்களில் இறங்கினால் ஒருவரும் தப்பவே முடியாது. வெறும் கமென்ட்கள் மட்டுமல்ல, மீம்கள், வீடியோக்கள் என மொத்த வன்மத்தையும் கொட்டிவிடுவார்கள். குறுக்கே உங்களை காப்பாற்ற வருகிறவர்களுக்கும் மிதிவிழும் என்பதால் யாருக்கும் உதவிக்கு கூட வரமாட்டார்கள். தெரிந்தவர் நண்பர் உறவினர் என அவர்களுக்கு எந்த தடைகளும் இருக்காது.

ஒரு சம்பவம் நடக்கிறதென்றால் இவர்களெல்லாம் தன்னிச்சையாக களத்தில் இறங்கி ட்ரால் பண்ணுவதில்லை. முதலில் இதற்காகவே சம்பளத்திற்கு வேலை பார்க்கிற ட்ரால் ஆர்மிகள் களத்தில் இருங்கி நெருப்பை பற்றவைப்பார்கள். மீம்கள் போடுவது, வீடியோ போடுவது என அவர்களுடைய வேலை வெறிபிடித்த ரசிகர்களை, விசுவாசிகளின் வெறுப்பைத்தூண்டுவது. நெருப்பு பற்றிவிட்டால் அதற்குபிறகு இந்த கிறுக்கன்கள் வேலைவெட்டியெல்லாம் விட்டுவிட்டு முழுநேரமும் இதேவேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள்! கீதாஞ்சலி விஷயத்தில் நடந்து இதுதான். இந்தத் தூண்டிவிடும் ட்ரால் ஆர்மிகளை காசு செலவழித்து ஆயிரக்கணக்கில் தயார் செய்கிறார்கள்.

‘ஐயாம் ஏ ட்ரால்’ என்கிற சுவாதி சதுர்வேதியின் ஆங்கில நூல் இதைப்பற்றித்தான் விளக்கமாக பேசுகிறது. பீ ஜே கட்சியின் டிஜிட்டல் ஆர்மிகள் எப்படி தனிநபர்களை டார்கெட் செய்து தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்வார்கள் என்பதை விளக்குகிறது. இந்த ஆர்மிகளின் வேலை எதிர்கருத்து சொல்பவர்களை குறிவைத்து கும்பல் தாக்குதலுக்கான கூட்டு மனநிலையை உருவாக்குவதுதான். இன்று பீ ஜே மட்டுமில்லை, பணம் படைத்த எல்லா கட்சிகளும் அதையே பின்பற்றுகின்றன. கட்சி வித்தியாசமே இல்லை. கட்சிகள் மட்டுமல்ல, விளையாட்டு பிரபலங்கள், நடிகர்கள் கூட இத்தகைய ரகசிய ட்ராலர்களை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு எதிராக ஒரு சொல் சொன்னாலும் வெறிநாய்களைப்போல குவிந்து கடித்துகுதறத்தொடங்கிவிடுவார்கள்.

மற்றொன்று ஜாலிக்கு திட்டுகிற சைக்கோ வகையறா. திட்டுவதன் மூலம் உள்ளூற மகிழ்ச்சியடைவது. எப்படி திட்னேன் பாத்தியா என்கிற பெருமைக்கு திட்டுகிற பைத்தியங்கள். அடுத்தவரை தன்னுடைய சொற்களால் குத்தி கிழிப்பதை காயப்படுத்துவதை பெருமையாகவும் கெத்தாகவும் நினைக்கிற கும்பல்கள். இன்ஸ்டா கிராமில், யூடியூபில் இவர்களை அதிகமும் பார்க்கலாம். இவை குழுக்கள் அல்ல தனித்தனியாக இயங்குகிற தனிநபர்கள். இவர்களை யாரும் போய் தூண்டத் தேவையில்லை. தினமும் விடிந்தால் யாரையாவது திட்டினால்தான் நிம்மதியாக இருக்கும். எந்த கொள்கையோ கோட்பாடோ இருக்காது. அதிலும் திடீரென்று பிரபலமாகிற யாராவது சிக்கினால் சிதைத்துவிடுகிற அளவுக்கு இறங்கி வேலை செய்வார்கள். இதன்மூலம் இவர்களுக்கு பிரபல்யமோ பணமோ எதுவுமே கிடைப்பதில்லை. ஒரு சைக்கோத்தனமான மனதிருப்தி.

மூன்றாவது ஒருவகை இருக்கிறது. அது பார்க்க அப்பாவி போல இருக்கிற (நான் உட்பட) நாம்தான். எப்போதும் மனதில் உலகிலேயே மிகச்சிறிந்த அறவுணர்வாளர் ஒழுக்கசீலர் என்கிற எண்ணத்தோடே உலகை அளப்பவர்கள். சமூகவலைதளங்களின் காலத்தில் நமக்கு தினமும் எதை பற்றியாவது தீர்ப்பு சொல்லி ஆகவேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கிறது. பாஸிட்டிவ் கருத்துகளை விட நெகடிவ் கருத்துகளையே சமூகவலைதள அல்காரிதங்கள் முன்னிறுத்துகின்றன. ஆகவே திட்டவும் விமர்சிக்கவுமே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அன்றன்றைக்கு யார் கிடைக்கிறார்களோ அவர்களை பற்றி ஒரு கருத்தை உதிர்த்துவிடுவோம். அவர்களை பிரித்து பாகம் வரைந்து அவர்களுடைய குணநலன்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவோம்!

நாம் காலைமுதல் மாலைவரை கைகளில் ஒரு சமூக அளவுகோல் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் அளவிட்டுக்கொண்டே இருக்கிற நீதிபதிகளாக மாறிவிட்டோம். நம்முடைய அளவிடும் ஸ்கேல்கள் சுருங்கிவிட்டன. இளையராஜாவோ தோனியோ கமல்ஹாசனோ யாருமே நம்முடைய அளவிடல்களுக்கு தப்பமுடியாது. இளையராஜா ஒரு சொல் பேசியதற்காக அவருடைய பல ஆயிரம் பாடல்களையும் நிராகரிக்கவும் அவரை வசைபாடவும் தயங்குவதில்லை. ஒரு வரி ட்விட்டை வைத்து, ஒரு ஸ்டேடஸை பார்த்து, ஒரு வீடியோ காணொளியை பார்த்து, ஒரு கமென்ட்டை பார்த்து ஒரு புகைப்படத்தை பார்த்து மனிதர்களை எடைபோடத் தொடங்கி இருக்கிறோம்.

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கை என்பது நம் கண்ணுக்கு புலப்படுகிற அந்த ஒரு வரிதானா, ஒரு படம்தானா, அந்த ஒரு சம்பவம்தானா என்பதையெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை. உடனுக்குடன் கருத்துகளை சொல்லியே ஆகவேண்டும். இணையத்தின் சாபக்கேடுகளில் ஒன்று இது. நானும் நீங்களும் யாருமே இதற்கு தப்ப முடியாது. நாம் யாரை திட்டவேண்டும் எப்படி திட்ட வேண்டும் என நாம்தான் முடிவு செய்வதாக நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் யாரின் வாழ்வை நிர்மூலமாக்கவேண்டும் என்பதை இந்த ட்ரால் ஆர்மிகளின் டூல்கிட்களே தீர்மானிக்கின்றன.

நம் கண்ணெதிரே நடக்கிற ஒரு அநியாயத்தை மறைக்க நம்மை குருடாக்க நம்மிடம் வேறொரு அப்பாவியை பலியாகத் தருகின்றனர். முடிந்தவரை அடித்து மகிழுங்கள்! நம் கண்களுக்கு தெரியாத மாயக்கரங்கள் தெளிவாக நம்மை எப்படி பயன்படுத்தவேண்டும் என தீர்மானிக்கின்றன. இங்கே கவனிக்க வேண்டியது யார் திட்டுகிறார்கள் என்றால் நாம்தான். யாரை திட்டுகிறோம் என்றால் அதுவும் நம்மைதான். ஏன் திட்டுகிறோம் எதற்காக திட்டுகிறோம் திட்டுகிற விஷயத்தின் உண்மைத் தன்மையை அறிந்திருக்கிறோமா திட்டப்படும் நபர் குற்றவாளிதானா என்பதைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் முதலில் திட்டித் தீர்த்துவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்கப்போகிறோம். அந்த அவசர தீர்ப்பெழுதும் ஆவேசம்தான் நம்மை இயக்கும் மாயக்கரங்களுக்கு தேவை.

அதிஷா

Tags :
Advertisement