Zoho :- சி.இ.ஓ பதவியில் இருந்து விலகினார் ஸ்ரீதர் வேம்பு!
இந்தியாவின் பெருமையாக இயங்கி வரும் Zoho Corp நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கவுள்ளதால், தற்போதைய பணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.இதனையடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சைலேஷ் குமார் தவே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீதர் வேம்பு, “நிறுவனத்தின் ‘தலைமை விஞ்ஞானி’ என்ற முறையில் தான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துவேன்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் தனது எக்ஸ் பதிவில், “இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நான் Zoho Corp இன் CEO பதவியில் இருந்து விலகுகிறேன், AI-இன் சமீபத்திய முக்கிய மேம்பாடுகள் உட்பட பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளதால், எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுப் பணியைத் தொடரும் போது R&D முயற்சிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.எங்கள் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் டேவி எங்கள் புதிய குழுவின் CEO ஆக பணியாற்றுவார். இணை நிறுவனர் டோனி தாமஸ் எங்கள் Zoho US ஐ வழிநடத்துவார். சவாலை நாங்கள் சிறப்பாக வழிநடத்தினோம், மேலும் எனது புதிய வேலையை ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் எதிர்நோக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டில் குறிப்பிடத்தக்க மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இதன் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை இருந்து வந்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் இந்தியாவின் 39 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த 2021 இல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜோஹோ 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஸ்ரீதர் வேம்பு இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப தொழில் முனைவோர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட நிறுவனமாக ஜோஹோ நிறுவனம் உருவாவதற்கு இவரின் பங்கு மிகப் பெரியது ஆகும்.
அடிசினல் ரிப்போர்ட்
கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருளை உருவாக்கும் தனியாருக்கு சொந்தமான நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக்கும் வேம்பு. .அவரும் அவரது இரண்டு உடன்பிறப்புகளும் ஜோஹோவில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளனர். வேம்பு பிரின்ஸ்டனில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
1989-ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, ஸ்ரீதர் வேம்பு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.2005-ஆம் ஆண்டு ஸோகோவை நிறுவுவதற்கு முன்பு, அமெரிக்காவின் சான்டியாகோவில் உள்ள குவால்காமில் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2024-ம் ஆண்டில் இந்தியாவின் 39வது பணக்காரராக ஸ்ரீதர் வேம்புவை மதிப்பிட்டது. அவரது நிகரமதிப்பு டாலர்5.85 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.