யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் தேனி போலீஸார் நடத்திய சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸார் சீல் வைத்தனர். அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யு டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய சோதனைக்குப் பின்னர் சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறையில் அடைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை கோவை சிறை அதிகாரிகளிடம் சென்னை காவல்துறையினர் வழங்கினர்.
இதுகுறித்த சென்னை காவல்துறையின் செய்திக் குறிப்பில் ``,சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர். 1/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு. தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.
அவர் மீது சென்னை காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‛குண்டாஸ்’ என்றால் என்ன? குண்டர் சட்டம் பாய்ந்தால் என்ன ஆகும்?
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த குண்டர்கள் தடுப்புச் சட்டம். சட்ட விரோதமாக மதுவைத் தயாரிப்பது, விற்பனை செய்வது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற தவறான காரியங்களைச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஏதுவாக வலுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். அந்தச் சட்டத்தின் முழுமையான பெயர், 'சட்டவிரோத மது தயாரிப்பாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வன்முறையாளர்கள், சட்டவிரோத பொருள் கடத்தல்காரர்கள், நில அபகரிப்பாளர்கள் தடுப்புச் சட்டம். சுருக்கமாக, வன்முறையாளர் தடுப்புச் சட்டம்'. இந்த வன்முறையாளர்களை 'குண்டர்கள்' என்று எளிமையாகச் சொல்லி, 'குண்டர் சட்டம்' என்றே இந்தச் சட்டம் அழைக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.
இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு பிணையும் வழங்கப்படாது. அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.
அதேநேரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம் என்றும் சட்டத்தின் ஷரத்து கூறுகிறது.
இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன்மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினால் கைதானவர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது. அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இந்த விசாரணை குழுவானது, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும். இந்த குழுவினர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது சரியா என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும். அதைத்தொடர்ந்து அவர் மீதான நடவடிக்கை தொடரும்.
அதாவது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை என்பதால், கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு மட்டுமே அணுக முடியும்.
கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக்குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம் என்று இந்தச் சட்டத்தின் ஷரத்து தெரிவிக்கிறது.