For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அமெரிக்க அதிபராவார் டிரம்ப் என்று அப்பவே தெரியுமே! எப்ப தெரியுமா?

05:16 AM Nov 09, 2024 IST | admin
அமெரிக்க அதிபராவார் டிரம்ப் என்று அப்பவே தெரியுமே  எப்ப தெரியுமா
Advertisement

மெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கொடி நாட்டி விட்டார். ஜனவரி மாதத்தில் அவர் அதிபராக பதவியேற்கப் போகிறார். இதுதான் எங்களுக்குத் தெரியுமே. புதுசா ஏதாச்சும் தகவல் இருந்தா சொல்லுங்க என்கிறீர்களா? தகவல் இருக்கு.அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் இந்த வெற்றியைப் பற்றி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் ஆரூடம்(!) சொல்லியிருக்கிறார். அவர்தான் நாஸ்டிரடாமஸ். (நாஸ்டிரடாமஸ் யார் என்று நான் விளக்கவுரை, பதவுரை, தெளிவுரை எல்லாம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு அவரை ஏற்கெனவே தெரிந்திருக்கும். நம்மோட முகநூல் நண்பர்கள் எல்லோரும் கில்லியாச்சே?)

Advertisement

டிரம்ப்புக்கு முன்னாடி நாஸ்டிரடாமஸ் சொன்ன வேறு சில ஆரூடங்களுக்கு வருவோம்.

‘2021ல் உலக அளவில் ஒரு பெருந்தொற்று நோய் ஏற்படும்’ என்று சொன்னவர் நாஸ்டிரடாமஸ். (அட! நம்ம கொரோனா!) ஆனால், கொரோனா பெருந்தொற்று உருவானது 2019ஆம் ஆண்டு. ஆனால், 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் கொரோனா வெற்றிநடை போட்டது உங்களுக்கு நினைவிருக்கும். நாஸ்டிரடாமஸ் 455 ஆண்டுகளுக்கு(!) முன்னாடி சொன்ன ஆரூடம் இது. ஆண்டுக் கணக்கில் ஒன்றிரண்டு பிசகு இருக்கத்தான் செய்யும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

Advertisement

‘2021ல் ஒரு போர் வெடிக்கும். இவ்வளவு நாளும் அண்ணன் தம்பி மாதிரி இருந்த இரண்டு நாடுகள் அடித்துக் கொள்ளும்’ என்பது நாஸ்டிரடாமஸ் கூறிய இன்னொரு கணியம்.சோவியத் ஒன்றியம் என்ற ஒரே நாட்டுக்குள் அண்ணன் தம்பி மாதிரி இருந்த ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் நடுவில் 2022ல் தொடங்கிய சண்டையைத்தான் நாஸ்டிரடாமஸ் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

அதேப்போல, ‘2021க்குப்பிறகு, மேற்கை கிழக்கு பலவீனமாக்கிவிடும்’ என்பது நாஸ்டிரடாமசின் இன்னொரு கணிப்பு. ஆம். கொரோனா தீநுண்மியின் திகுதிகு விளையாட்டுக்குப்பிறகு அமெரிக்கா, பிரிட்டன் மாதிரியான மேற்கு நாடுகள் பொருளாதாரத்தில் வீக்காகி, சீனாவின் கை இப்போது ஓங்கியிருக்கிறது. அதைத்தான் ‘மேற்கை கிழக்கு பலவீனமாக்கிவிடும்’ என்று நாஸ்டிரடாமஸ் அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம். டிரம்ப் பத்தி நாஸ்டிரடாமஸ் என்ன சொல்லியிருக்கிறார்?

‘2022ல் டிரம்பட் (எக்காளம்) குலுங்கும்’ என்பது நாஸ்டிரடாமஸ் சொல்லியிருக்கும் ஆரூடம். டிரம்பட் என்பது ஒருவகை ஊதுஇசைக்கருவி. நாஸ்டிரடாமஸ் சொன்ன ‘டிரம்பட்’ வேறு யாருமில்லை. நம்ம அண்ணன் டிரம்ப்பைதான் என்கிறார்கள் சிலர். 2024ல் குலுங்க வேண்டிய டிரம்பட்டைத் தவறுதலாக 2022ல் குலுங்கும் என்று நாஸ்டிரடாமஸ் சொல்லியிருக்கிறார். பெரிய மனசு பண்ணி அதை விட்டிறலாம்.சரி. டிரம்ப்பின் வெற்றி பற்றிய ஆரூடம் சரி. அது தொடர்பாக வேறு எதையாவது நாஸ்டிரடாமஸ் சொல்லியிருக்கிறாரா? டிரம்ப் பற்றி மட்டுமில்லை. அவரோட அத்தியந்த நண்பர், உலகப் பெரும் பணக்காரர் டெஸ்லா கார் கம்பெனி உரிமையாளர், டிவிட்டர் எக்ஸ் அதிபர் எலான் மஸ்க்(!) பத்தியும் நாஸ்டிரடாமஸ் ஆரூடம் சொல்லியிருக்கிறாராம்.

நூற்றாண்டுகள் என்ற நாஸ்டிரடாமசின் புத்தகத்தில், 5-23ஆவது பாடலில், ‘இரண்டு போட்டியாளர்கள் ஒன்றுபடுவார்கள். (மஸ்க்,டிரம்ப் இரண்டு பேருமே பெரும் பணக்காரர்கள். ஒருவகையில் போட்டியாளர்கள்தான்.) இவர்கள் மார்சுடன் இணைவார்கள். ஆப்பிரிக்கத் தலைவரைக் கண்டு அனைவரும் பயப்படுவார்கள்’ என்று நாஸ்டிரடாமஸ் சொல்கிறார்.
எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். மஸ்க்கின் அப்பா அந்தக் காலத்திலேயே ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய புதையல் வேட்டைக்காரர். ஆக, ஆப்பிரிக்கத் தலைவர் என்று நாஸ்டிரடாமஸ் சொல்வது எலான் மஸ்க்கைதான் என்பது சிலரது கணிப்பு.

சரி. ‘மார்சுடன் இணைவார்கள்’ என்பது என்ன? மார்ஸ் என்பது செவ்வாய்க்கோள். எலான் மஸ்க், சொந்தமாக ராக்கெட் வைத்து விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அனுப்பி வருபவர்.அமெரிக்கா ஏற்கெனவே செவ்வாய்க் கிரகத்துக்கு ரகசியமாக ஆள்களை அனுப்பி வருவதாக ஒரு தகவல் உண்டு. அமெரிக்க முன்னாள் அதிபரான பராக் ஒபாமாகூட செவ்வாய்க்கு ஒரு நடை போய் வந்ததாக ஒரு பரபரப்பு உண்டு. செவ்வாய்க் கோளில் எலான் மஸ்க்+டிரம்ப் கூட்டணி ஒருவேளை மனித குடியேற்றங்களை ஏற்படுத்தப்போவதைத்தான் நாஸ்டிரடாமஸ் இப்படிச் சூசகமாக சொல்லியிருக்கிறாரோ என்னவோ?

சரி. டிரம்ப், எலான் மஸ்க், ரஷியா, உக்ரைன் எல்லாம் இருக்கட்டும். என்னையும், உங்களையும் பத்தி நாஸ்டிரடாமஸ் ஏதாவது ஆரூடம் சொல்லியிருக்கிறாரா? அதையும் சொல்லியிருக்கிறார். ‘ஒருகாலம் வரும். அந்தக் காலத்தில் கத்துக்குட்டிகள்னு யாரும் இருக்க மாட்டாங்க. எல்லோருமே விஷயம் தெரிஞ்சவங்கதான்’ என்று நாஸ்டிரடாமஸ் சொல்லியிருக்கிறார்.இப்ப கையில் செல்போன் வச்சிருக்கிற எல்லோருமே ஒருவகையில் விஷயம் தெரிஞ்சவங்கதான். யாரும் கத்துக்குட்டி இல்லை. ஆக, என்னையும், உங்களையும் பத்திக்கூட அந்த காலத்திலேயே ஆரூடம் சொல்லியிருக்கிறார் நாஸ்டிரடாமஸ். நிஜமாகவே அவர் கில்லிதான்!

அடிசினல் ரிப்போர்ட்:

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கப் போகும் நேரம் இது. இந்த நேரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர்களைப் பற்றிய சில வியக்க வைக்கும் விந்தையான தகவல்களை அமெரிக்க மக்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பது தெரிந்த தகவல்தான். அவரது பெயரில்தான் அமெரிக்காவின் தலைநகரத்துக்கு வாஷிங்டன் என்று பெயர் சூட்டப்பட்டது.ஆனால், ஜார்ஜ் வாஷிங்டனும் சரி, அவருக்குப்பிறகு அமெரிக்காவின் 16ஆவது அதிபராக பதவியேற்ற ஆபிரகாம் லிங்கனும் சரி, ஹேப்லோ குரூப் என்கிற ஒரே மரபணுவைச் சேர்ந்தவர்கள் என்பதை நம்ப முடிகிறதா?

அது என்ன ஹேப்லோ குரூப்?
இப்போது கசக்ஸ்தான் என்று அழைக்கப்படும் மத்திய ஆசியப் பகுதியிலே பழங்காலத்தில் நியாண்டர்தால், டெனிசோவன் இன மக்கள் வாழ்ந்தார்கள். 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது ஹோமோசேபியன் இனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தார்கள்.இந்த மூன்று இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒரு புதிய மரபணு உருவானது. அந்த மரபணுவைச் சேர்ந்தவர்கள்தான் ஹேப்லோ குரூப் என்று அழைக்கப்படுகிறார்கள்.ரஷியாவின் ரொமனோவ் அரச வம்சத்தைச் சேர்ந்த மகா பீட்டர், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, டென்மார்க், நார்வே அரச குடும்பத்தினர் எல்லோரும் ஹேப்லோ குரூப் மரபணுவைக் கொண்டவர்கள்தான். அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கனும் கூட அதே மரபணு கொண்டவர்கள்தான் என்பது ஒரு வியப்பான விடயம் இல்லையா?

மோகன ரூபன்

Tags :
Advertisement