“ஆமாய்யா.. ஆமா.. உங்கள் போனை ஒட்டுக் கேட்கிறோம்தான்”-பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல்!
உங்கள் ஸ்மார்ட்போன் நீங்கள் பேசும் அனைத்தையும் ஒட்டுக் கேட்டு கொண்டு இருக்கிறது என்றால் அது எப்படி என்று தானே உங்களுக்குள் முதல் கேள்வி உருவாகும், அது வேறு எப்படியும் இல்லை உங்கள் போன்களில் உள்ள Siri, Google Assistant, Cortana போன்ற வாய்ஸ் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் செயலிகளால் தான். இந்த வாய்ஸ் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் செயலிகள் வேக் வார்ட்ஸ் எனப்படும் சில வார்த்தைகளுக்கு பதிலளிக்கின்றனர், எனவே இவை எப்போதும் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் போனில் உள்ள மைக்ரோபோனின் உதவியுடன் கேட்டுக் கொண்டே இருக்கும். இதே போல வேறு சில செயலிகளும் உதாரணமாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு வசதிகளை உள்ளடக்கிய Facebook, Instagram மற்றும் Whatsapp போன்ற செயலிகளும் நீங்கள் பேசிக் கொண்டு இருப்பதை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இத்தகைய செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது மைக்ரோபோனை செயல்படுத்தும் அனுமதியை நம்மிடம் இருந்து லாபகமாக இந்த செயலிகள் பெற்றுக் கொள்வதால் இது நிகழ்கிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்ட சேதி வெளியாகி ஹாட் டாபிக்காகி விட்டது. .
அதாவது நாம் சோசியல் மீடியாக்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று நண்பரோ, உறவினர் யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்களே தொடர்ந்து உங்கள் டைம்லைனில் வந்து கொண்டிருக்கும்.
பல ஆண்டுகளாக இது குறித்த ஊகமாக இருந்த இந்த விவகாரம் தற்போது உண்மையாகியுள்ளது. டிவி மற்றும் ரேடியோ செய்திகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் காக்ஸ் மீடியா குரூப் (Cox Media Group) தனது முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ஆக்டிவ் லிஸனிங் டெக்னாலஜி (Active Listening technology) என்ற மென்பொருளின் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மைக் வழியாக நம்முடைய உரையாடல்களை நமது ஸ்மார்ட்போன் கவனித்து அதற்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக பேஸ்புக், அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
அது நம்முடைய வாய்ஸ் டேட்டாவை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை அனுப்பவதில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. 470க்கும் அதிகமான மூலாதாரங்களில் இருந்து ஏஐ மூலம் இயங்கும் இந்த மென்பொருள் குரல் தரவுகளை சேகரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இது நாம் போனில் பேசுவது மட்டுமின்றி நேரில் பேசுவதையும் கவனிக்கிறது.
இந்த தகவல்களை 404 மீடியா என்ற ஊடகம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், காக்ஸ் மீடியா குரூப் நிறுவனம் குறித்து தனது பாட்காஸ்டில் அம்பலப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதன் ஒட்டுக் கேட்கும் தொழில்நுட்பம் குறித்து வெளிக்கொண்டு வந்துள்ளது.அமேசான் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்த நிறுவனத்துடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இரண்டு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொருபுறம் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் காக்ஸ் மீடியா நிறுவனத்துடன் பணியாற்றும் திட்டமில்லை என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது தனித் தகவல்.