இந்திரா செளந்திரராஜன் நினைவேந்தல் நிகழ்வு!
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது 65 வயதில் கடந்த நவம்பர் 10ம்தேதி காலமானார்.இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். தன்னுடைய தாயின் பெயரான 'இந்திரா'வை தன் பெயருடன் சேர்த்து இந்திரா சௌந்தர்ராஜன் என்பதை தன் எழுத்து பெயராக ஆக்கிக் கொண்டிருந்தார்.இவர் புகழ்பெற்ற பல சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இந்து மத பாரம்பர்யம் மற்றும் புராணக் கதைகள் இவருடைய களம் ஆகும். பெரும்பாலும் இவரது கதைகளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், தெய்வங்கள், மறுபிறப்பு, பேய்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும். மேலும் இவரது கதைகள் உண்மை சம்பவங்கள் அடிப்படையிலோ, அதனால் ஈர்க்கப்பட்டோ அமைக்கப்பட்டிருக்கும்.
இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலக்கட்டத்தில் மர்மக் கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்த காலக்கட்டம். அதனையொட்டி தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பத்தில் அமைத்து இருந்தாலும், அதில் நிறைவு ஏற்படாமல் சரித்திரம், ஆன்மீகம், அமானுஷ்ங்களது பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இக்கதைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே அதைக் களங்களாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் வல்லவராக மாறினார். ஆன்மீக சொற்பொழிவாளராகவும் இந்திரா சௌந்தர்ராஜன் திகழ்ந்துள்ளார். அவரது கதைகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. பல சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருக்கும் இவரது 'என் பெயர் ரங்கநாயகி' நாவல் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த புதினத்திற்கான 3-வது பரிசை பெற்றது. ஒரு காலத்தில் மக்களை கட்டிப்போட்ட மர்ம தேசம், விடாது கருப்பு போன்ற சின்னதிரை தொடர்களின் கதாசிரியர் இவர்தான். மேலும் இவர் ஆனந்தபுரத்து வீடு, இருட்டு உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் கதை எழுதியுள்ளார்.
அப்பேர்பட்டவருக்கான நினைவஞ்சலி சென்னையில் டிசம்பர் 15ம்தேதி மிகுந்த நெகிழ்ச்சியுடன் நடந்தது. இதையொட்டி ஏராளமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர், நடிகர்கள், அபிமானம் கொண்ட வாசகர்கள், குடும்பத்தினர் என்று ஓர் அன்புப் படையே திரண்டிருந்தது. பேசிய அனைவரும் நெகிழ வைத்தார்கள். விழிகளையும், இதயத்தையும் நனைத்தார்கள். பலருக்கும் எழுத்தாளர் என்பதையும் தாண்டி ஒரு வழிகாட்டியாக, ஆன்மிக குருவாக, ஆசானாக வாழ்ந்திருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் உணர வைக்கும் நிகழ்வாக இருந்தது. புஸ்தகா ராஜேஷ் இந்திரா செளந்திரராஜன் வின் படத்தை ஓவியர் ஷியாமை வரையச்செய்து அவர் குடும்பத்தினரிடம் கொடுத்தார். தவிரவும் அவரைப் பற்றிய நினைவுகளை கட்டுரைகளாக பலரிடம் கேட்டுப் பெற்று நினைவுப் பூக்கள் என்கிற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டார்.
நிகழ்வில் அவரைப் பற்றிப் பேசியவர்கள் சொன்ன அனுபவங்களையும், சம்பவங்களையுமே தொகுத்து ஒரு புத்தகம் போடலாம். இசைக்கவி ரமணன் மிக அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்தார். இயக்குனர் பத்ரி அவர் பெயரில் ஓர் அறக்கட்டளை துவங்கி அதன் மூலம் நாவல் போட்டிகள் நடத்த வேண்டும் என்று பொதுவில் ஒரு கோரிக்கை வைத்தார். அப்படித் துவங்கப்படும் அறக்கட்டளையில் நான் உறுப்பினராகச் செயல்படுகிறேன் என்றேன்.துவங்கப்படும் அறக்கட்டளைக்கு ஒரு லட்சம் நிதி அறிவித்தார் தயாரிப்பாளர் அபிராமி இராமநாதன். இந்திராவின் அச்சு,காட்சி ஊடக சாதனைகளை அழகாக பட்டியலிட்டார் நடிகர் சிவகுமார்.
நிகழ்வில் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அம்மா கிரியேஷன்ஸ் சிவா, காலச்சக்கரம் நரசிம்மன், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, சுரேஷ், பாலா, இயக்குநர் நாகா, பத்ரி, சுபா வெங்கட், நடிகர் மோகன்ராம், மை.பா.நாராயணன் என்று எல்லோருமே உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்கள்.இந்திராவைப் பற்றிய ஒரு காணொலி ஒளி/ஒலிப்பரப்பப்பட்டது.அதில் அவருடைய ஆன்மிகப் பேச்சிலிருந்து சில பகுதிகள் பெரிதும் ஈர்த்தன். கம்பீரமான குரலில் அவர் பேசும்போது இவர் எங்கே மறைந்தார், இதோ வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார் என்று தோன்றியதுயதென்னவோ நிஜம். ஆத்மார்த்தமான இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியை புதுயுகம் பரணி, ஹரி மற்றும் இயக்குநர் நித்தியானந்தம் ஆகியோர் இணைந்து அமைத்திருந்தார்கள்.