மல்யுத்த வீரர்களான பஜிரங் புனியா,வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸில் ஐக்கியம்!
ஹரியானா ஸ்டேட்டில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்னும் ஹரியானா மாநில தேர்தலில் யார் போட்டியிட உள்ளனர் என்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் இருக்கிறது. இச் சூழலில் தான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்தனர். இதனால், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக பஜிரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் களமிறங்குவார்கள் என கூறப்பட்டது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் என இருவரும் தங்கள் விளையாட்டுத்துறை தொடர்பான பொறுப்புகளை துறந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், இன்று அவர்கள் காங்கிரஸில் தங்களை அதிகாரபூர்வமாக இணைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது வினேஷ் போகத் தான் வகித்து வந்த ரயில்வேத்துறை பணியை ராஜினாமா செய்தார். இதனை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவருமே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தனர். இந்த சந்திப்பு பிறகு இருவரும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் வந்தனர்.
அதன் பின்னர் இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்வில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் மற்றும் ஹரியானாவின் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் ஹரியானா தேர்தல் களத்தில் காங்கிரஸ் சார்பில் களமிறங்குவார்களா என்பது அடுத்தடுத்த கட்சி நகர்வுகளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.