தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக வெண்புள்ளி தினம்🐾

06:55 AM Jun 25, 2024 IST | admin
Advertisement

தோல் மீது ஏற்படும் வெண் புள்ளி அல்லது வெள்ளை திட்டுகள், 'விட்டிலிகோ' எனப்படுகிறது. இது 'மெலனின்' பற்றாக்குறையால் ஏற்படும் ஒரு வகை தோல் நோய். 'மெலனின்' என்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் இயற்கையான நிறத்தைத் தரும் நிறமி. இதை உற்பத்தி செய்யும் செல்கள் இறக்கும்போதோ அல்லது செயல்பாட்டை நிறுத்தும்போதோ இந்த நோய் ஏற்படுகிறது. வெண்புள்ளிகள் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன, உண்மையில், அது தொற்றுநோயல்ல. ஒருவகை குறைபாடு. இதையொட்டி இந்த தோல் நிறமி இழத்தல் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 25ல் சர்வதேச தோல் நிறமி இழத்தல் விழிப்புணர்வு நாளாக நடத்தப்படுகின்றது.

Advertisement

உலக மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன புள்ளி விவரங்கள். வெண்புள்ளி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, சகமனிதர்களின் பார்வையாலும் சமூகப் புறக்கணிப்பாலும் ஏற்படும் மன அழுத்தம்தான் அதிகம். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால், தகுதியும் திறமையும் இருந்தும் அவர்களால் கல்வியிலும் வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலையே தொடர்கிறது.

Advertisement

வெண்புள்ளி எதனால் ஏற்படுகிறது? யாருக்கு வரும்? தீர்வு உண்டா?

``ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. நமது சருமத்துக்கு நிறமளிக்கும் மெலனின் என்ற நிறமூட்டிக்கு ஆதாரமான மெலனோசைட்ஸ் என்கிற செல்களை வெள்ளை அணுக்கள் அழித்துவிடுவதால் ஏற்படுவதே வெண்புள்ளி. இது நோய் அல்ல. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலுக்கு எதிராகச் செயல்படுவதன் விளைவுதான் இது. வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றால் வெண்புள்ளி ஏற்படுவதில்லை என்பதால் இது பரவக்கூடியதும் அல்ல. மரபு ரீதியாக வரக்கூடியதும் இல்லை. இன்னும் சுருக்கமாக சொல்வதானால் தோல்களுக்கு நிறத்தைக் கொடுக்ககூடியது `மெலானின்' (Melanin) என்னும் நிறமி. இதுவே சூரியனிலிருந்து வெளியாகும் புறஊதா கதிர்களிலிருந்தும் (UV Rays) நம் உடலைப் பாதுகாக்கிறது. இந்த மெலனின் நிறமியின் சுரப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்து போவதால் அந்தப் பகுதியில் வெண்புள்ளிகள் (Vitiligo) ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னை, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினருக்கும் வரலாம்.

ஒரு தொற்றுநோயா?

வெண்புள்ளி ஒரு தொற்றுநோயல்ல. பாதிப்புள்ள ஒருவரைத் தொடுவது, அவருடன் பழகுவது போன்ற செயல்பாடுகளால் மற்றவருக்குப் பரவாது. வெண்புள்ளி பாதிப்புள்ள ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் அவருடைய துணைக்கு வெண்புள்ளிகள் வராது.

பரம்பரையாக வரக்கூடியதா?

ஆம்... குடும்பத்தில் ஒருவருக்கு வெண்புள்ளி பாதிப்பு இருந்தால் மரபணு காரணமாக பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதேநேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு இருப்பதால் மற்றவருக்குக் கண்டிப்பாக வரும் என்றும் சொல்ல முடியாது. குடும்பத்தில் யாருக்கும் இந்தப் பாதிப்பில்லாமல் இருந்தாலும் பிற காரணங்களாலும் இது ஏற்படலாம்.

காரணங்கள் என்னென்ன?

நரம்புகளின் செயலிழப்பால் சீர்கேடான நரம்பு சப்ளை ஏற்படுவதைத் தொடர்ந்து மெலனோசைட்டுகள் சேதமடையலாம்

மெலனோசைட்டுகள் தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக்கொள்ளும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்

சில நேரங்களில் உடல் அதனுடைய சொந்த திசுவை அந்நிய பொருள் என்று நினைத்து அழிக்கிறது. இது தன்னுடல் தாங்குதிறன் (Auto immune) எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது. மெலனோசைட் சேதமடைவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் வரலாம்.

தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாட்டால் க்கூடிய ரத்தச்சோகையின் தீவிர நிலை (Pernicious Anemia) போன்ற நோய்களோடு சேர்ந்தும் வரலாம்.

வெண்புள்ளியின் வகைகள்

இதில் பலவகைகள் உண்டு. அவை அவற்றின் பாதிப்பைப் பொறுத்து அது வகைப்படுத்தப்படுகிறது. அவற்றில் சில முக்கியமான வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

* லிப் டிப் விட்டிலிகோ (Lip-Tip Vitiligo)

உதடு, கை, கால் விரல்களில் ஏற்படும்.

* செக்மண்டெல் விட்டிலிகோ (Segmental Vitiligo)

நரம்பின் பாதையில் மட்டும் வெண்புள்ளியை உண்டாக்கும் பிரச்னை இது. உடலின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படும்.

* மியுகோசல் வெட்டிலிகோ (Mucosal Vitiligo)

உதடு, பிறப்புறுப்பு போன்ற இடங்களில் மட்டும் பாதிப்பு இருக்கும். பெண்களுக்கு மார்பகங்களிலும் வெண்புள்ளிகள் வரலாம்.

* யுனிவர்சல் விட்டிலிகோ (Universal Vitiligo)

சருமம் முழுவதும் மெலனோசைட்களால் பாதிக்கப்பட்டு, முழுமையாக வெள்ளையாகிவிடும். இதற்கு `யுனிவர்சல் விட்டிலிகோ' என்று பெயர்.

சிகிச்சைகள் என்னென்ன?

பாதிப்பிற்கேற்ப சிகிச்சை முறை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஸ்டீராய்டு போன்ற மருந்து மாத்திரைகளே சிலருக்குப் போதுமானதாக இருக்கும். அதோடு மேற்பூச்சாகப் பூசக்கூடிய களிம்புகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். களிம்புகளால் குணமாகவில்லை என்றால், `ஸ்கின் க்ராப்டிங்க்' (Skin Grafting) மூலம் சரிசெய்யலாம். தொடையிலிருந்து நிறமிழக்காதத் தோலை எடுத்து நிறமில்லாத இடத்தில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றி விடுவார்கள்.

தைராய்டு, சர்க்கரை நோய், ரத்தச்சோகை போன்ற பிற பிரச்னை உள்ளவர்களுக்கு வெண்புள்ளியைக் குணப்படுத்துவது சிரமம். அதோடு, மனதளவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், வெண்புள்ளி ஒருவருக்கு உண்டாகும்போது அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்." .

இதைக் குணப்படுத்த முடியுமா?

ஆரம்ப நிலையிலே மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்தவோ குணப்படுத்தவோ முடியும். எனவே, வெண்புள்ளி வந்துவிட்டால் முதலில் தோல் நோய் மருத்துவரைப் பார்க்க வேண்டும். பாதிப்பிற்கேற்ப சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
f skin to lose pigment or colorVitiligowhite skin deseaseWorldVitiligoDayஉலக வெண்புள்ளி தினம்தோல் நிறமி இழத்தல்
Advertisement
Next Article