For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகக் காட்டுயிர் தினம்!

08:36 AM Mar 03, 2024 IST | admin
உலகக் காட்டுயிர் தினம்
Advertisement

குறைந்து கொண்டே வரும் வரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA ) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES ) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Advertisement

காட்டுயிர் என்பது காடுகளில் மட்டுமே வாழும் உயிரினம் என்று நினைக்க வேண்டாம் . மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களாக, மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்களாக இல்லாமல் மனிதர்கள் அருகிலேயே இயற்கை சூழலில் இரையைத் தேடி வாழும் உயிரினங்கள் அனைத்தும் காட்டுயிராகும் .காடுகள் என்பது உயிரினங்கள் மிகுதியாக இருக்கும் இடம் மட்டுமே. ஏன் நம் வீட்டில் வாழும் எலியும் ஒரு காட்டுயிராகும்.இயற்கையாகவே உலகமே ஒரு காடுதான். பல ஆயிரம் வருடங்களாக மனிதன் காடுகளில் தான் வாழ்ந்தான். மனிதன் அதிலிருந்து பிரிந்து நகரங்களை உருவாக்கியதால் காடுகளை விலங்குகள் மட்டும் வாழும் இடமாக மாற்றிவிட்டான்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் காட்டுயிர்கள் என்றால் நம்மைப் பொருத்தவரை நம்மைச்சுற்றி ஆங்காங்குள்ள அடர்ந்தகாடுகளில் வாழக்கூடிய அவ்வப்போது நாம் வாழும் பகுதிகளுக்கு வந்து “அட்டகாசம்” செய்யக்கூடிய கொடிய விலங்குகள் என்போம் இல்லையா? உண்மையைச் சொல்லப்போனால் அக்காட்டுயிர்களின் இடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் மனிதனுக்கு வெகுகாலம் முன்பே அவைகளெல்லாம் தோன்றிவிட்டது…!இப்போது சொல்லுங்கள் யாருக்கு முதல் உரிமையுடையது இந்த பூமி?

Advertisement

அவற்றின் இடத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்…!ஆனால் அவையெல்லாம் திட்டமிட்டு நம்மை அழிக்கவில்லை நாம்தான் இதுவரை அதைச்செய்து வந்திருக்கிறோம்…!பலகாலமாக நம்வீரத்தை அவற்றின்மீது ஆயுதங்கள் மூலம் காட்டியிருக்கிறோம். உண்மையில் மனிதனும் ஒரு விலங்கே. சிங்கம், புலி, சிறுத்தை, மான் என்று ஒவ்வொரு விலங்குகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது போல் நமக்கு மனிதன் என்று பெயர் சூட்டிக் கொண்டோம். விலங்குகள் பார்வைக்கு மனிதனும் ஒரு விலங்காகவே தெரியும்..நீரும், நிலமும், காற்றும், ஆகாயமும், ஏன் அண்டவெளியும் எனக்கானது, என்னுடையது என்ற மனிதனின் குறுகிய எண்ணம்தான் காடுகள் ரிசார்ட்டுகளாக மாறவும், யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டவும், வன உயிர்களை மருந்துக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும் வேட்டையாடவும் அவனுக்கு முட்டாள்தனமான துணிச்சலைத் தந்திருக்கிறது.

'முட்டாள்தனம்' என்பது சற்றே தடிமனான வார்த்தையாகக் கூடத் தெரியலாம். ஆனால், வன உயிர் ஆர்வலர்கள் மனிதனின் இந்தப் போக்கை 'முட்டாள்தனம்' என்றுதான் வரையறுக்கின்றனர். நான் மனிதன் என்ற ஆதிக்க சிந்தனையாலேயே வனங்கள் அழிகின்றன என்று குற்றஞ்சாட்டுகின்றனர். மனிதனின் ஆதிக்கத்தால் வன உயிரினங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு அலைகின்றன என வருந்துகின்றனர். இந்த வருத்தத்துக்கு அக்கறைக்கு ஒரு சர்வதேச வடிவம் கொடுக்கப்பட்டது. மனிதனால் அழிந்துவரும் வன விலங்குகளைக் காக்கவும், இயற்கைச் சமநிலையைப் பேணவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மேலே குறிப்பிட்ட சர்வதேச காட்டுயிர் தினம் (மார்ச் 3) கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது இப்புவியில் வாழும் உயிரின வகைகள் மனிதர்களைவிட மிக அதிக அளவில் உள்ளன, அவை சிக்கலான வகையில் வாழும் முறையில் ஒன்றையொன்று சார்ந்துவலைபின்னல் போல் உயிர்ச்சங்கிலி உள்ளது. எஞ்சியிருப்பவற்றில் சிலகண்ணிகள் அழிந்தால் கூட என்ன நடக்கும் என்பது கணிக்கவே முடியாதது. அந்த நிலையில் அனைத்து உயிரினமும் அழிந்துவிட்டால்… நாமும் இருக்கமாட்டோம் ஏனெனில் மனிதர்கள் மட்டும் இவ்வுலகில் தனியாக வாழ முடியாது. உண்ண உணவும் சுவாசிக்க காற்றும் கிடைக்காது!…

புரியும்படி சொல்வதானால் இரண்டு எலிகள் சேர்ந்து ஓராண்டில் சிலஆயிரம் மனிதர்களின் ஒருநாள்உணவை வீணடிப்பதாக ஆய்வுகள் சொல்கிறது, நாம் வெறுக்கும் ஆந்தையானது ஒரு இரவில் குறைந்தது நான்கு எலிகளைச் சாப்பிடுகின்றன!… இப்போது சொல்லுங்கள் ஆந்தைகள் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினமா இல்லையா? இப்படித்தான் காட்டுயிர்களின் தயவால்தான் நாம் வாழ்கிறோம்….!

ஆனால் மனிதர்களை தவிர்த்து மற்ற உயிரினங்கள் போதுமான எண்ணிக்கையில் இன்று உலகில் வாழ்ந்து வருகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். அச்சுறுத்தல், உணவு, வாழிட அழிப்பு, கடத்தல், பொருட்கள் தயாரித்தல் என்று பல காரணங்களுக்கு உயிரினங்களை மனிதன் அழித்து வருகிறான்.தந்தத்திற்கு யானையும், பல் மற்றும் தோலுக்கு புலிகளையும், உணவுக்கு மான், உடும்பு, பறவைகள், குரங்கு போன்றவற்றையும் இன்னும் பல செயல்களுக்கு உயிரினங்களை அழித்து வருகிறோம்.இவ்வளவு உயிரினங்கள் அழிவுக்கு மக்கள் என்ன செய்ய முடியும். இந்த செயல்களை செய்பவர்களுக்கு அரசாங்கம் தானே தண்டனை தரவேண்டும் ?

இவை உண்மை என்று தோன்றும். ஆனால் சிறிது யோசித்து பார்த்தால் மக்களும் இதில் எந்த அளவு ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவரும். உயிரினங்கள் அழிந்து வருகிறது என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது புலி, யானை அழிவு என்று தோன்றும். ஆனால் பல கோடி சிறு உயிரினங்கள் இந்த புவியில் உள்ளன. பெரிய உயிரினங்களான யானை, புலி அழிப்பு போன்றவற்றில் பொது மக்கள் பங்கெடுக்கவில்லை என்றாலும் சிறு உயிரினங்கள் அழிவில் மக்களின் பெரும் பங்கு உள்ளது.சிலநாட்டு மக்களிடையே நிலவும் மருத்துவ மூடநம்பிக்கையினால் பலவிலங்குகள்மற்றும் பறவைகளின் உடல் பாகங்களுக்காகவும்,தோல் மற்றும் இறகுகளுக்காகவும் திருட்டுத்தனமாக கொல்லப்படுவது முட்டாள்தனத்தின் உச்சம்…!மேலும் பருவ நிலை மாற்றம், காடுகளை அழித்தல்,மற்றும் புவி வெப்பமாதல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் அருகிவரும் இனமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியவில் மட்டுமே வாழ்ந்துவந்த இந்தியசிவிங்கிப்புலி இனம் மன்னர்கள் காலத்திலேயே கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு இப்போது முற்றாக இல்லை. இவ்வாறு பல உயிரினங்கள் காணாமலேயே போய்விட்டது.

நம் கண்ணில் படும் பகுதியில் உள்ள மரத்தை வெட்டுபவரும் அந்த மரத்தில் வாழும் பலவகை பறவைகள், பூச்சிகள். சிறு பாலூட்டிகள் அழிவுக்கு காரணமாகிறார். ரியல் எஸ்டேட் என்று பல வருடங்கள் ஆனாலும் வீடு கட்டி வாழ முடியாத இடங்கள் எல்லாம் அழித்து பிளாட் போட்டு விற்கிறார்கள். உதாரணம் சென்னைக்குள் வாழும் மனிதர்க்கு செங்கல்பட்டுக்கு மிக அருகில் இடம் என்று விற்பனை ஆசை காட்டி அவர் தலையில் கட்டிவிடுவார்கள். வாங்கிய நபர் எந்த காலத்திலும் அங்கு வீடு கட்டி குடியேறப்போவதில்லை. இப்படி வாங்கிய லட்சக்கணக்கான இடங்கள் மக்கள் குடியேறாமல் தமிழகத்தில் வீணாக இருக்கின்றன. அந்த இடங்களில் உள்ள மரங்கள், செடிகள், நீர்நிலைகளை அழித்து விடுவதால் அங்கிருந்த உயிரினங்கள் தங்கள் வாழ்விடத்தை இழக்கின்றன. ஆக இதை எல்லாம் கவனத்தில் கொண்டு இனியாவது விழிப்படைவோம்! காடுகளை பாதுகாப்போம்! கானக உயிர்களுக்காக குரல் கொடுப்போம்! விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், அவற்றை இயல்பாக வாழவிடுவோம்!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement