தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக சதுப்பு நில தினமின்று!

07:22 AM Feb 02, 2024 IST | admin
Advertisement

ற்போது பெருகிவரும் நகரமயமாக்கல், ரியல் எஸ்டேட், சுற்றுலா மையங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல் மற்றும் வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், இறால் பண்ணைகள் போன்றவற்றால் சதுப்பு நிலங்கள் மிகப்பெரிய அழிவை சந்தித்து வருகின்றன. புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏற்படாமல் சதுப்பு நிலங்கள் பாதுகாக்கின்றன. அதாவது உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக் காடுகள் பலவகைப்பட்ட உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வருகின்றன. அலையிடைக் காடுகள், கடலோர மரக்காடுகள், கடலில் நடக்கும் காடுகள், கடலின் வேர்கள், கடலின் மழைக்காடுகள், அலையாத்திக் காடுகள், தில்லைவனம், சுரப்புன்னைக் காடுகள், கண்டன் காடுகள் என பலவகை பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் தலையாய பணியைச் செய்துவருகின்றன.

Advertisement

உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. அந்த வகையில் பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இதனை இரண்டு வகைகளாக பிரிக்க முடியும். அதாவது, இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. அலையார்டிக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும் ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் குவாரி பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

Advertisement

உலகில் 112 நாடுகளில் சதுப்பு நிலக் காடுகள் சுமார் 18 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை தெற்காசிய நாடுகளில் உள்ளன. இந்தோனேஷியாவில் மட்டும் 23% உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவன காடுகள் வங்க தேசம் வரை நீண்டு உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடாக உள்ளது. இங்குதான் உலகில் எங்கும் காணப்படாத புலியினங்கள் ( Royal Bengal Tiger) காணப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் அதிகளவாக 2081 ச.கி.மீ பரப்பளவிலும், கேரளத்தில் மிக குறைவாக ஒரு ச.கி.மீ பரப்பளவுக்கு உட்பட்டும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. தமிழகத்தில் சுமார் 23 ச.கி.மீ பரப்பளவில் இக்காடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4482 ச.கி.மீ பரப்பில் சதுப்பு நிலக் காடுகள் பரந்து விரிந்துள்ளன.பொதுவாக கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படும் இக்காடுகள், கடல்களில் கலக்கும் பெரும் நதிகளின் உதவியால் அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர்கின்றன. மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகள், ஒடிசாவில் பித்தர்கனிகா, ஆந்திராவில் கோரிங்கா, தமிழ்நாட்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை மற்றும் மன்னார் வளைகுடா, கேரளாவில் வேம்பநாடு மற்றும் கொச்சின் உவர் நீர் நிலைகளில் வளர்ந்து காணப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 556 ஹெக்டேர் பரப்பளவில் சுரப்புன்னை மரங்கள் உள்ளன. காரங்காடு கிராமம் பாக் நீரிணை பகுதியில் கலக்கும் கோட்டக்கரையாற்றின் உதவியால் இங்கு சுரப்புன்னை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதனால் இங்கு பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இது திகழ்கிறது. குறிப்பாக கடற்புற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றை உண்டு வாழும் அரிய வகை உயிரினமான கடல்பசு இப்பகுதியில் காணப்படுகின்றன. இக்காடுகளை மையமாக கொண்டு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. படகு சவாரி, கயாகிங், நீரில் மூழ்கி பார்த்தல், கண்காணிப்புக் கோபுரம் போன்ற வசதிகள் வனத்துறை உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுடன் சதுப்பு நிலக் காடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சதுப்பு நிலக் காடுகளுக்கான தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கிராம மக்களிடையே விழிப்புணர்வு முகாம்களையும் வனத்துறையினர் நடத்தி வருகின்றனர்.

இப்போது ஈர நிலங்கள் என்கிற பட்டியலில் எதுவெல்லாம் வரும் எனப் பார்த்தாலே அவற்றின் பாதுகாக்க வேண்டியதன் அருமை உங்களுக்கு புரியக்கூடும். ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள், மீன் குளங்கள், நெற்பயிர் நிலங்கள், நீர்த் தேக்கங்கள்....!உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன.

பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது. சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது ஞாபகம் இருக்கலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண்காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டே கடந்த 1971களில் ஈரானின் ரம்சார் நகரில் நாடுகள் பல சேர்ந்து சதுப்பு நிலப் பாதுகாப்பிற்கு கையெழுத்திட்டன. சதுப்பு நிலங்களை அடையாளப்படுத்தல், அதன் முக்கியத்துவத்தினை உணர்த்துவது, தேசிய சர்வதேச ரீதியில் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2 ஆம் நாள் உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்படுகிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
environmentwater ecosystemswetlandsWorld Wetlands Day
Advertisement
Next Article